எத்தனை வருட கனவு இது…! இப்படி ஒரு படம் இந்தியாவில், அதுவும் தமிழில் என்றைக்காவது சாத்தியமாகுமா? என்ற கேள்விக்குறியை ஆச்சர்யக் குறியாக்கியிருக்கிறார்கள் இருவர்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஷங்கர்!
நாடு, இனம், மொழி, நடிக அரசியல் கடந்து, எந்திரன் ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கும் ஒரு அனுபவம்.
தொழில் நுட்பத்தில் இன்னமும் பெரிய அளவு நிபுணத்துவம் வளராத ஒரு நாட்டைச் சேர்ந்த கலைஞர்கள், இன்று செய்நேர்த்தியில் முன்னிலையில் இருக்கும் ஹாலிவுட்டுக்குச் சவால் விட்டுள்ளனர், எந்திரன் என்ற படத்தின் மூலம். இதை ஒரு ரஜினி ரசிகனின் மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக எடுத்துக் கொள்ளாமல், படம் பாருங்கள்… உண்மை புரியும்!
இந்தப் படத்தை ஒரு முழுமையான, முதல் நாள் முதல் காட்சியை ஆரவாரத்தோடு பார்க்கும் ரஜினி ரசிகனின் மனநிலையில் பார்த்துவிட்டு, ஒரு எழுத்தாளன் என்ற பார்வையோடே எழுதுகிறேன்.
என்னைப் பொறுத்தவரை எந்திரன் வெறும் ரஜினி படமல்ல… ஒரு இனிய அனுபவம். எமது கலைஞர்களால் ஆகாதது ஒன்றுமே இல்லை என்ற பெருமை தந்த அந்த சிலிர்ப்பு இன்னும் கூட அடங்கவில்லை.
வர்த்தகம், கலை என்ற பேதங்களுக்கு அப்பால், மக்களை மகிழ்விக்கும் நல்ல பொழுதுபோக்கு என்ற புதிய நீட்சியை இந்திய சினிமாவுக்குத் தந்திருக்கிறது எந்திரன். இனி அவதார் போன்ற ஹாலிவுட் பிரமாண்டங்களைப் பார்த்து திகைக்கவோ, பிரமிக்கவோ வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. இதுபோன்ற ஹாலிவுட் பிரமாண்டங்களை, ‘இனி நாங்களும் இதுக்குமேல எடுப்போம்ல’ என்ற மதர்ப்போடு பார்த்து ரசிக்க நம்மாலும் முடியும். அந்த நம்பிக்கையை இந்தியக் கலைஞர்களுக்கும் தந்த பெருமை இயக்குநர் ஷங்கரைச் சேர்கிறது!
எந்திரன் படத்தின் கதையை இந்த விமர்சனத்தில் மட்டுமல்ல, வேறு எங்கும் கூடத் தேடாதீர்கள். காரணம், அதைப் படத்தில் பார்த்து அனுபவியுங்கள். தொழில்நுட்பம் வேண்டுமானால் ஹாலிவுட்டின் பாதிப்பு என்று எடுத்துக் கொள்ளலாமே தவிர, கதை, அதற்கான களம், கதை மாந்தர்களின் உறவுச் சூழல் எல்லாமே முற்றிலும் புதியது.
நிஜ மனிதன் தன்னைப் போன்ற இயந்திர மனிதனைத் தந்து, அதற்கு தன்னைப் போல யோசிக்கும் திறனையும் கொடுத்துவிட்டால்… அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்ற சுஜாதா – ஷங்கர் கற்பனையின் அழகிய செல்லுலாய்ட் வடிவமே ரோபோ எனும் எந்திரன் (எத்தனை அர்த்தமுள்ள இனிய தமிழாக்கம்!)
ஒவ்வொரு காட்சியிலும் மூன்று மகா கலைஞர்கள் பளிச்சிடுகிறார்கள். ரஜினி, ஷங்கர் மற்றும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. இவர்களின் உழைப்புக்கு ஒரு ‘சில்வர்லைன்’ கொடுத்திருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான் என்றால் மிகையல்ல!
படத்தின் முதல் காட்சியில் டாக்டர் வசீகரனாக எந்த வித வழக்கமான மேனரிஸமும் இல்லாத இயல்பான ரஜினி… இந்திய சினிமாவுக்கே புதுசு. அடுத்தடுத்த இரு காட்சிகளிலும் இந்த இயல்பு நிலை தொடர, ‘என்னடா இது’ என யோசிக்கும்போதே ‘சிட்டி’ ரஜினியின் உருவில் அமர்க்களம் ஆரம்பம். மென்மையான, ஆரோக்கியமான நகைச்சுவை என்பதற்கு புதிய உதாரணம் சிட்டி பாத்திரப் படைப்பு. படம் பார்க்கும் ஒவ்வொருவர் குடும்பத்திலும் சிட்டியும் ஒரு பாத்திரமாகவே ஐக்கியமானாலும் ஆச்சர்யமில்லை.
இந்தப் படத்தின் காதல் காட்சிகளில் ரஜினியின் இளமை துள்ளும் ஸ்டைலையும் ரொமான்ஸையும் பார்க்கும் இளம் நடிகர்களுக்கு மட்டுமல்ல, நடிகைகளுக்கும் தூக்கம் தொலையக்கூடும்!
ஒரு விஞ்ஞானி எப்படி இருப்பார், எப்படி நடப்பார், எப்படிப் பேசுவார், தன் கண்டுபிடிப்பு தான் நினைத்த மாதிரியெல்லாம் அசகாய சூரத்தனங்கள் செய்யும் போது எப்படி மகிழ்வார்… அதே கண்டுபிடிப்பை இந்த சமூகம் புறக்கணிக்கும் போது எப்படி வெதும்புவார்… இத்தனை உணர்வுகளையும் வெகு இயல்பாக, சற்றும் சினிமாத்தனமின்றி வெளிப்படுத்தியுள்ளார் ரஜினி.
இந்த இரு வேடங்களுக்கும் சிகரம், வில்லன் ரஜினி. யப்பா…. எங்கே இருந்தார் இந்த நடிப்பு ராட்சஸன் இத்தனை காலமாய்! வில்லத்தனத்தை எப்படி காட்டுவது எனத் தெரிந்து கொள்ள தனியாக ட்யூஷன் படிக்க வேண்டும் இவரிடம். இந்தப் பாத்திரம் குறித்து அதிகம் விவரிக்காமல் விடுவதுதான், படம் பார்க்கும் உங்களுக்குள் பல இன்ப அதிர்வுகளை உண்டாக்கும் என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.
ஆனால் ஒரே ஒரு வரியில் சொன்னால்…. நடிப்பில் ரஜினியின் விஸ்வரூபம் இந்தப் படம். நவரசங்களையும் அநாயாசமாகத் தருவதில் ரஜினிக்கு முன்னும் பின்னும் ஒருவரையும் ஒப்பீட்டுக்காகக் கூட இனி தயவு செய்து சொல்லக் கூடாது. ரஜினி ரஜினிதான். ஒரு படைப்பாளியின் கற்பனையை அப்படியே பிரதிபலித்திருக்கும் உன்னதமான கலைஞன்!
ஐஸ்வர்யா ராய்… இவர் எத்தனை கவர்ச்சியான உடைகளில் வந்தாலும், மனம் அவரை கண்ணியமாகவே பார்க்கிறது. ஐஸ்வர்யாவின் பலம் அதுதான். நடனம், நடிப்பு என அனைத்திலே டிஸ்டிங்ஷனுக்கும் மேலே ஸ்கோர் பண்ணுகிறார் ஐஸ்.
ரஜினிக்கு எத்தனையோ நடிகைகள் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். ஆனால் 100 சதவீதம் பொருத்தமான ஜோடி என்றால் அது ஐஸ்வர்யாதான். இப்போதுதான் புரிகிறது, ரஜினி ஏன் தொடர்ந்து ஐஸ்வர்யாவை தனது படங்களின் கதாநாயகியாக்க முயற்சித்தார் என்று!
ரஜினியின் உதவியாளர்களாக வரும் சந்தானம், கருணாஸ் இருவரும் தாங்கள் நடிகர்கள் என்பதையே மறந்து, ரஜினியின் நடிப்பில் மனதை இழந்துவிட்டிருப்பார்கள் போலிருக்கிறது. இந்த இரு காமெடியன்களையும் சிட்டி தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறது! அதே நேரம் இப்படியொரு படத்தில், அந்த இருவருக்கும் அதற்குமேல் வேலையும் இல்லை என்பதும் புரிகிறது.
டேனி டெங்சோங்பாதான் படத்தில் வரும் கெட்டவர் (வில்லன் என்று சொல்ல முடியாது!) தனது வேலையை அத்தனை கச்சிதமாகச் செய்துள்ளார் டேனி. தமிழ் வில்லன்களை விட, இவரைத் தேர்வு செய்தது நல்ல பலனைத் தந்துள்ளது.
ஒளிப்பதிவாளர் ரத்னவேலு இன்னொரு ஷங்கர் என்றுதான் சொல்ல வேண்டும். விஞ்ஞானி – ரோபோ சம்பந்தப்பட்ட காட்சிகள், வசீகரன் – ஐஸ் காதல் காட்சிகள், அதே ஐஸ்வர்யா ரோபோவுடன் இருக்கும் காட்சிகள்… இவற்றுக்கெல்லாம் தனித்தனி டோன்களை, சற்றும் உறுத்தாமல் தந்திருக்கும் நேர்த்தி ஹாலிவுட்டுக்கே சவால் எனலாம். கிளிமாஞ்சாரோ பாடலை அவர் படமாக்கியிருக்கும் விதம், ரசிகர்களுக்கு ஒரு விஷூவல் ட்ரீட்!
சாபு சிரில் உழைப்பு கொஞ்சமல்ல. சற்றே கவனமிழந்திருந்தாலும், “டே இது செட்றா மாப்ளே” என்று ரசிகர்களே கலாய்த்துவிடும் அபாயம் நிறைய இடங்களில். அதைப் புரிந்து அபார முயற்சியெடுத்து அரங்குகளையும் ரோபோக்களையும் நிர்மாணித்திருக்கிறார்.
இவரது கலைத்திறனும், ஹாலிவுட்டின் ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோஸ் கலைஞர்களின் ரோபோட்ரானிக்ஸ் உத்திகளும் அத்தனை லாவகமாக இழைந்து நிற்கின்றன படத்தில்.
கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மெனக்கெட்டிருக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குழுவினரை முதுகு வலிக்கத் தட்டிக் கொடுக்கலாம். எந்தக் காட்சி நிஜம், எது கிராபிக்ஸ் என்று யோசிக்கக் கூட அவகாசம் தரவில்லை இவர்கள். அதிலும் படத்தின் கடைசி நிமிடங்களில் கதிகலங்க வைக்கிறார்கள். ஹேட்ஸ் ஆஃப்!
அப்புறம்… இந்தப் படத்தின் இன்னொரு நாயகனைப் பற்றி நிறையவே சொல்ல வேண்டும். அவர் ஏ ஆர் ரஹ்மான். பாடல்கள், பின்னணி இசை என கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் சிக்ஸர் அடித்திருக்கிறார் இசைப் புயல். அந்தக் கிளிமாஞ்சாரோ பாட்டு ஒரு ‘விஷுவல் மியூசிகல் ட்ரீட்’, என்றால், ‘அரிமா அரிமா’ நெஞ்சு நிமிர்த்தி ஆட வைக்கும் அட்டகாச மெட்டு. இடையில் காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை என்று வைரமுத்துவின் துணையுடன் மனதை மயிலிறகால் வருடுகிறார் ரஹ்மான். எத்தனை நாளாச்சு இந்த மாதிரி மெலடி கேட்டு என்ற ஏக்கமும் கூடவே பிறக்கிறது!
படத்தில் குறைகளே இல்லையா… ரஜினி படம் என்பதால் இப்படி ஒரேயடியாகப் பாராட்டுகிறீர்களா? என்று கூட சில கேள்விகள் எழலாம். உண்மையிலேயே குறைகள் என்று சொல்ல பெரிதாக இதில் ஒன்றுமில்லை. மூன்று ஆண்டு கடும் உழைப்பு… அதெப்படி குறை சொல்லுமளவுக்கு இருக்கும் என்பதை யோசிக்க வேண்டாமா? ஷங்கர் தனது ‘கேரியர் பெஸ்ட்’ படம் இதுதான் என்று நெஞ்சு நிமிர்த்தி சொல்லிக் கொள்ளலாம். படமெங்கும் அவரது கடின உழைப்பு பளிச்சிடுகிறது.
இது ரஜினி படமா… ஷங்கர் படமா? இந்தக் கேள்வி நிச்சயம் இன்னும் சில வாரங்களுக்காவது இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கும். (ரஜினி விமர்சகர்களுக்கும் பொழுதுபோக வேண்டாமா…)
நிச்சயம் ரஜினி – ஷங்கரின் Perfect -தான் எந்திரன் என்பதே சரியாக இருக்கும். இந்தப் படத்தில் நடிக்க ரஜினியை விடப் பொருத்தமானவர் இல்லை… இயக்க ஷங்கரை விட தகுதியானவர் யாருமில்லை என்பதே சரியான கருத்தும் கூட.
எந்திரன்… சர்வதேச சினிமாவுக்கு இந்தியா சார்பில் தமிழ்க் கலைஞர்கள் கம்பீரமாகத் தந்திருக்கும் இனிய பரிசு!
எந்திரன் குழுவுக்கு என் நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துகள்!
6 கருத்துகள்:
நானும் பாத்தாச்சு, கடைசி 30 நிமிடத்தால் முதல் 2 மணி நேரத்தை ஞாபகபடுத்துவது கடினமாக இருக்கிறது. ஷங்கருக்கு நன்றிகளும் பாராட்டுகளும். இத்தனை மாஸ் இருந்தும் கதைக்கு அடங்கி நடிக்கும் தலைவர் சினிமாவில் எல்லோருக்கும் முன்னுதாரணம்தான். கடைசி ரஜினி? ரஜினி தவிர யாராலையும் முடியாது.
இன்னைக்கு விட்டுட்டோம், நாளைக்குப் பார்த்துருவோம், முன்பதிவு செய்தாகிவிட்டது. திரையரங்கில் சென்று சிவாஜி பார்த்தேன், அதற்கு பின்னர் எந்திரன். :) கலக்கலாக எழுதி இருக்கீங்க சார். மிகைப்படுத்தல் இல்லாமல் ஒரு அருமையான விமர்சனம்.
படம் பிரமாதம், நிச்சயம் தமிழ் சினிமாவின் மைல்கள்.
சிறப்பான விமர்சனம்.
விமர்சனம் அருமை...நான் ஞாயிற்றுக்கிழமை புக் பண்ணி இருக்கேன்...இன்னும் மூனு நாள் இருக்கேன்னு இருக்கு..உங்க விமர்சனத்தைப் படிச்சதும்..
முதல் ஆளா பாத்துட்டீங்க போல..
ஆர்வத்தைத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.கண்டிப்பா பாத்துடுவேன்.
நான் பார்த்த திரையரங்கிலும் இதே நிலைமைதான், ஆர்ப்பாட்டம் பண்ணியவர்களில் நானும் ஒருவன் என்று கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. சூப்பர் காட்சி.
கருத்துரையிடுக