தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

10/04/2010

தொடரட்டும் தொடர் வெற்றி


         "வெற்றி என்பது ஒரு முடிவல்ல. அது ஒரு பயணம்" என்பார்கள். ஆகவே உங்கள் வாழ்நாள் முழுவதும் வசந்தமலர் பறிப்பதற்குத் தொடர்ந்து முயன்று கொண்டே இருங்கள். முயற்சிகள் வலிமை மிக்கதாகவும், அறிவுப்பூர்வமாகவும் அமைவதற்கு உங்களுடைய அறிவின் பலம் அதிகரித்துக்கொண்டே இருக்க வேண்டும். கற்பதை நிறுத்துவது என்பது நமது முன்னேற்றத்திற்கு முட்டுகட்டை போடுவதாகும்.

கற்பது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதற்கே தவிர பட்டம் பெறுவதற்கு
மட்டும் அல்ல என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதைத்தான் நேற்றைய பட்டதாரி இன்று படிப்பதை நிறுத்திக் கொண்டால் நாளை படிக்காதவன் ஆகிவிடுவான். (Graduates of yesterday; Stops learning yesterday will be uneducated tomorrow") என்று கூறுவார்கள்.

தினமொரு மணி

தினசரி குறைந்த பட்சம் ஒருமணி நேரமாவது படியுங்கள். கிடைப்பதை எல்லாம் படிக்காமல், தேர்ந்தெடுத்துப் படியுங்கள். உங்களுடைய வாழ்க்கைத் தேவைக்கேற்பவும், தொழிலுக்கு ஏற்பவும் தகுந்த நூல்களை தேர்வு செய்து படித்தால் தொடர் வெற்றியை உங்களால் பெற முடியும்.

படிக்கத் படிக்கத்தான் அறிவுப் பசி அதிகரிக்கும். புதிய கருத்துக்கள் மனதிற்கு உத்வேகத்தையும், நம்பிக்கையையும் கொடுக்க வல்லது. மேலும் அறிவு மனம் விரிய, விரிய தன்னம்பிக்கை வேர்கள் மனதில் ஆழமாகப் பதியும். ஆகவே தினமொரு மணி நேரமாவது உங்களுடைய அறிவுப் பசிக்குத் தீனி போடுவதை பழக்கமாகிக் கொள்ளுங்கள்.

கற்ற கருத்துக்களைக் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளுங்கள்... ஓய்வு நேரத்தில் குறிப்பெடுத்துள்ள கருத்துக்களை எடுத்து மீண்டும் மனதில் பதியுங்கள். தன்னம்பிக்கையும், தெளிவும் தரும் கருத்துக்களே வாழ்க்கையின் வளமிக்க வழிகாட்டி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நல்ல நூல்களே நல்ல நண்பர்கள், ஆகவே எப்பொழுதும் கைவசம் நல்ல நூலொன்றை வைத்திருங்கள். நடைமுறை வாழ்வில் காத்திருப்பது என்பது தவிர்க்க முடியாதவொன்றாகிவிட்டது. அதாவது பயணப்படும் வாகனத்திற்காக காத்திருப்பது, ஒருவரைச் சந்திக்கச் செல்லும்போது காத்திருப்பது மருத்துவமனையில் காத்திருப்பது போன்ற நேரங்களைப் பொன்னான நேரத்தை வீணாக்காமல் கைவசம் உள்ள நூலை எடுத்து படிக்கலாம். இவ்வாறு செய்வதால் வீணாகக் கரையும் நேரம் உபயோகமாகின்றது.

சிலர் படிப்பதற்கு நேரம் கிடைக்கில்லை என்று புலம்புவார்கள். அது சரியல்ல. மனமிருந்தால் நிச்சயம் வழியிருக்கும். ஆம், "காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை, காரியங்கள் செய்பவர்கள் காரணங்கள் சொல்வதில்லை"

அறிவு - தேடல் தொடரட்டும்

உங்களுடைய இலட்சியத்தோடு தொடர்புடைய ஒரு வழிகாட்டியை முதலில் தேர்வு செய்யுங்கள். இதைத்தான் ஆங்கிலத்தில் "Role Model" என்பார்கள். அதாவது நீங்கள் எந்த துறையில் சாதனை படைக்க விரும்புகின்றீர்களோ அந்த துறையில் ஏற்கனவே சாதனை படைத்து முன்னேறி வரும் ஒருவரை உங்களுடைய வழிகாட்டியாகக் கொள்ளுங்கள். அவருடைய வழியைப் பின்பற்றி அவருடைய அனுபவத்தைப் பாடமாக்கி முன்னேற முயலுங்கள்.

சிறந்த வழிகாட்டியை தேர்வு செய்வதுதான் மிகவும் சிரம்மானது. ஏனென்றால் பெரும்பாலும் மனிதர்கள் தங்களுடைய முகமூடியைத்தான் வெளியுலகிற்கு காட்டுகின்றார்கள். அவர்களுடைய நிஜமுகத்தைக் காண்பது சற்றுக் கடினம் அதாவது முகமூடியில்லாத மனிதர்களைக் காண்பது அவ்வளவு எளிதல்ல. ஆகவே சரியான வழிகாட்டியைத்த தேர்வு செய்வதற்கு விழிப்போடு முயலுங்கள். நிச்சயம் முடியும்.

"பூக்கின்ற மலர்கள் எல்லாம் கனியாவதில்லை. எல்லா விதைகளும் முளைப்பதில்லை". அதுபோல எல்லா முயற்சிகளும் வெல்வதில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். நல்ல வழிகாட்டியைத் தேர்வுச் செய்யத் தொடர்ந்து முயற்சி செய்து வாருங்கள். இராமகிருஷ்ண பரமஹம்சரை நரேந்திரன் சந்திக்கவில்லை என்றால் நமக்கு ஒரு விவேகானந்தர் கிடைத்திருக்க மாட்டார். மகாகவி பாரதியை கனகசுப்புரத்தினம் சந்திக்கவில்லை என்றால் நமக்கு புரட்சிக்கவிஞர் பாரிதிதாசன் கிடைத்திருக்க மாட்டார். அவ்வளவு ஏன், பேராசிரியர் முனைவர். இல.செ. கந்தசாமி அவர்களை ஒரு கிராமத்து முதல் தலைமுறை மாணவனாகிய க.க. சாவடி முருகேசன் சந்திக்கவில்லை என்றால் இந்த கவிதாசன் உருவாகியிருக்கமாட்டார். ஆகவே நல்ல வழிகாட்டி கிடைக்கும் வரை உங்கள் தேடல் வேட்டையை நிறுத்தாதீர்கள். உங்களுடைய தொடர் முயற்சிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

நியாயத்தின் பக்கம் நில்லுங்கள்

நம்மில் பெரும்பாலானோர், சமுதாயம் என்ன நினைக்குமே? மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று நினைத்து நினைத்தே எதையும் செய்யும் துணிவு இல்லமால் போய்விடுகிறோம். நீங்கள் செய்வது சரியா? தப்பா அல்லது நியாயமா? அநியாயமா? என்று எண்ணிப்பார்க்க வேண்டுமே தவிர, மற்றவர்களை மகிழ்விப்பதற்காக எந்தச் செயலையும் செய்யக் கற்றுக் கொள்ளக்கூடாது. ஆம், நீங்கள் எப்பொழுதும் நியாயத்தின் பக்கமே நிற்க வேண்டும்.

மத்திய உள்நாட்டு மந்திரியாக இருந்து விலகும்போது, இராஜாஜி பத்திரிக்கை மசோதாவைக் கொண்டு வந்துஅதைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிச் சட்டமாக்கினார். இதனால் நாடெங்கும் உள்ள பத்திரிக்கைகள் அவரைத் தாக்கி எழுதின. இம்மாதிரி ஏன் செய்கிறீர்கள்? போகிற போக்கில் பத்திரிக்கைகளிடம் ஏன் கெட்ட பெயர் வாங்க வேண்டும்?" என்று பாராளுமன்றத்தில் சிலர் கேட்டனர். அதற்கு இராஜாஜி, "நான் ஒன்றைச் செய்யும்போது அதனால் நல்ல பெயர் வருமா கெட்ட பெயர் வருமா என்று யோசிப்பதில்லை.அந்தக் காரியம் சரியா, தவறா என்று தான் யோசிப்பேன். நீங்களும் அப்படியே செய்யுங்கள்" என்றார், 'பாப்புலாரிட்டி'யைப் பற்றிச் சிந்திக்காமல் ஒரு காரியம் நல்லதா - கெட்டதா என யோசித்து, நல்லதையே செய்யுங்கள். தேசத்துக்கு நன்மையான காரியங்களைச் செய்வதனால் கெட்ட பெயர் வந்தாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம்" என்றார்.

கருத்துக்களை விதையுங்கள்

உங்களுடைய மனதில் கருத்து விதைகளைத் தூவிக் கொண்டே இருங்கள். அப்பொழுதுதான் தொடர்து வளர்ந்து கொண்டே இருக்க முடியும். மனதில் எப்பொழுதும் ஒரு தேடல் இருக்க வேண்டும். அவ்வாறு "நாம்தேடிக்கொண்டே இருக்காவிட்டால் நாம் தொலைந்து விடுவோம்" என்றும் கூறுவார்கள். அறிவு வங்கியில் கருத்துக்களை முதலீடு செய்வதற்கு நூல்கள் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் ஒருவன் படிக்கும் புத்தகங்களை வைத்து அவனைப் பற்றிச் சொல்லிவிட முடியும்" என்று சொல்வார்கள். ஆகவே பல்வேறு கருத்துக்களைப் படிப்பதே சிறந்த முறையாகும். படிக்கின்ற கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அலசி ஆராய்ந்து உங்களுடைய இலட்சியத்திற்கு ஏற்புடைய மற்றும் அதற்கு வலிமை சேர்க்கும் கருத்துக்களை மட்டுமே உங்களுடைய மனதில் சேமித்து வையுங்கள். ஏனென்றால் கற்றது காலத்திற்கு உதவும். வெற்றி உங்களை தொடர தொடர்ந்து கற்றுக்கொண்டே இருங்கள். இதுதான் வெற்றியின் ரகசியம்.

கருத்துகள் இல்லை: