தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/05/2012

ஏகாதசி விரதத்தின் சிறப்பும் பலன்


அணுமுதல் அண்டம் வரையில் எப்பொருளைப் பற்றியும், எவருமே, எக்காலத்துமே, எந்த நூலிலுமே முழுமையாக, விவரிக்க முடிவதில்லை. இதனால் தான், தோற்றம் அறியப்படாத ஆதி முதல், இன்று வரை, பன்னாட்டவரும், அனைத்தையும் பற்றியும், தொடர்ந்து அறிந்து வருகின்ற செய்திகளை, பல்லாயிரக்கணக்கான நூல்களில் தெரிவித்து வந்திருக்கின்றனர். இப்படி மென்மேலும் அறிப்பட வேண்டியதாக கருதப்பட்டு, ஆய்வுக்கு உட்பட்டதால் தான் ஏகாதசி, பிரதோஷம் போன்ற விரதங்களைப் பற்றி பெருமை பகராத சமய நூல்களே இல்லை என்று கூறப்படுகிறது. கணபதியை அதிகமாக ஆராதிப்பவர்கள் சதுர்த்தி விரதத்திற்கும், முருகனையே அதிகமாக போற்றுவோர் சஷ்டி விரதத்திற்கும், துர்க்கையை அதிகமாக வணங்குபவர்கள் அஷ்டமி விரதத்திற்கும், சிவனை அதிகம் பூசிப்பவர் பிரதோஷ விரதத்திற்கும், விஷ்ணுவை அதிகமாக விரும்புவோர் ஏகாதசி விரதத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பதால், சில விரதங்கள் சில சமயப் பிரிவினருக்கே என்பதில்லை. அப்படி எண்ணக்கூடாது என்பதற்காகத்தான் மேற்குறிப்பிட்ட தெய்வங்கள் பிற பெயருடைய கடவுளரை நினைவுறுத்தும் விரதங்களை அனுஷ்டிக்குமாறு, பல புராணங்களிலும், பன்முறை பரிந்துரைத்துள்ளனர். சதுர்த்தி விரதமிருந்து கணபதியின் அருள் பெறுமாறு சிவனும் திருமாலும் கூறியிருப்பதைப் போலவே, பிரதோஷ விரதமிருந்து சிவனருளைப் பெறுமாறு விஷ்ணுவும், ஏகாதசி விரதமிருந்து திருமால் அருளைப் பெறுமாறு சிவனும் கூறியிருக்கின்றனர். எந்த விரதமும் ஒரு சாரார்க்கு மட்டுமல்ல; எல்லா விரதங்களையும் எல்லோரும் அனுஷ்டிக்க முயல வேண்டும் என்பதையே எல்லா சமய இலக்கியங்களும் வற்புறுத்துகின்றன.
தோற்றமும் - பெயர்களும்: பிறந்தவை யாவும் மறைந்தே ஆக வேண்டும் என்பது இயற்கை நியதி. பிறப்பும் - மறைவும் வடிவ மாற்றங்களே தவிர நிரந்தர தோற்ற அழிவு அல்ல. இதை மறப்பதால் தான் சிலர், ஒரு குறிப்பிட்ட உருவிலேயே (மனிதராக, தேவராக ) என்றும் இருக்க விரும்பி, தவம் புரிகின்றனர். அவ்வுருவ  வாழ்காலத்தை நீட்டிக் கொண்ட அகந்தையால், தம் பலத்தை நிரூபிப்பதாக எண்ணி, மற்றோரைத் துன்புறுத்தி வந்திருக்கின்றனர். இத்தகையோருள் முரன் என்பவனும் ஒருவன். சூரனை அடக்கி அருளுவதற்காக சிவனாரின் அம்சமாக கந்தன் தோன்றியது போல, பல்லோரையும் துன்புறுத்தி வந்த முரனை அடக்குவதற்காக, விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி என்ற தெய்வ கன்னிகை. மண்ணோரும், விண்ணோரும் விஷ்ணுவை வழிபட்டு, விரதமிருந்து, அவர் அருளால், முரனின் கொடுமையிலிருந்து தப்பியது முதல் ஏகாதசி ஒரு முக்கிய நித்ய விரதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த ஏகாதசி நன்னாள், மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி ஆக (11ம் நாள்) இருந்ததால், அன்று முதல், மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி உற்பத்தி ஏகாதசி எனப்படுகிறது. உற்பத்தி ஏகாதசியில் தொடங்கிய விரதத்தை, பின்னர் வந்த ஏகாதசி நாட்களிலும் அனுஷ்டித்து, பலரும், பல்வகைப் பயன்களைப் பெற்றனர். அப்பயனின் அடிப்படையில், ஒவ்வொரு ஏகாதசிக்கும், அதன் சிறப்பைக் குறிக்கும் அடைமொழி நிலைத்து விட்டது. ஒவ்வொரு நாளுமே பல்லோர் அவதரித்த நன்னாளாயினும், அக்டோபர் 2ம் நாளை காந்தி ஜயந்தியாகவும், ஜனவரி 12ஐ விவேகானந்த ஜயந்தியாகவும் அனைவரும் நினைவுறுவது போல ஒவ்வொரு ஏகாதசியிலும் எண்ணிலார் பயன் பெற்று வந்திருப்பினும், ஓரிருவர் பெற்ற நன்மையைக் குறிப்பதாகவே ஏகாதசிகளின் பெயர்கள் அமைந்துள்ளன. பானைக்கு ஒரு சோறு பதம் போல, ஒவ்வொரு ஏகாதசியில் விரதமிருந்து பயன் பெற்றவரும், அடைந்த பயன்களும் ஒரு உதாரணமே தவிர, ஒருவர் மட்டும் ஒரு பயனை மட்டுமே அடைந்தனர் என்பதல்ல. மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, வைகானஸர் மேற்கொண்ட விரதத்தின் பயனாக அவருடைய முன்னோர்கள் (முக்தி) வைகுண்ட பதம் அடைந்ததிலிருந்து, அந்த ஏகாதசி, எல்லா ஏகாதசிகளையும் விட மிக முக்கியமாகக் கருதப்பட்டு (மோக்ஷõ) வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது. மூன்று கோடி ஏகாதசி விரத பலனை அளிப்பதால் முக்கோடி ஏகாதசி என்றும் பெயர். தை மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு சபலா. (விருப்பை நிறைவிப்பது) என்று பெயர்.
புலிக்குப் பயந்து மரத்திலேறிய ஒரு வேடன், அம்மரம் வில்வமரம் என்பதையோ, அதன் கீழ் சிவலிங்கம் இருப்பதையோ, சிவலிங்கத்திற்கு வில்வார்ச்சனை செய்வதின் மேன்மையையோ, அன்று சிவராத்ரி என்பதையோ, அன்றிரவு விழித்திருப்பதின் நன்மையையோ அறியாவிட்டாலும், தூக்கத்தில் கீழே விழுந்திடக் கூடாது என்பதற்காக மட்டுமே இரவு முழுவதும் மரத்திலிருந்து ஒவ்வொரு இலையாகப் பறித்துப் போட்டாலும் கூட, சிவனருள் பெறுகிறான். அதுபோலவே, நாடு கடத்தப்பட்ட மகிஷ்மதராஜனின் மகன், எதுவும் கிடைக்காததாலேயே, உண்ணாமலும், பசி, தாகத்தினால் உறங்காமல் இருந்தாலும் கூட, திருமால் அருளால் மீண்டும் அரசாட்சி பெற்ற நாள். தை மாதம், வளர்பிறை ஏகாதசிக்கு புத்ரதா (குலம் தழைக்க மகப்பேறு அருள்வது) என்று பெயர். பல வருடங்கள் புத்திரப்பேறு இன்றி வருந்திய சுகேதுமான் - சம்பா என்ற அரச தம்பதியர்க்கு குழந்தை அருளிய பெருமையுடையது. மாசி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு ஷட்திலா (ஷட் = ஆறு; திலா = எள்) என்று பெயர். உடனடியாக பலனளிக்கும் மிகச் சக்தி வாய்ந்த தானங்களில், எள் தானம் மிக முக்கியமானது. அதனை ஆறு வகையில் (குடிநீரிலோ, ஸ்நான தீர்த்தத்திலோ, உணவிலோ, வேள்வியிலோ, திண்பண்ட உருண்டையிலோ அல்லது வெறுமனேயோ) தானம் செய்ய மிகவும் உகந்த நாள்.
மாசி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு ஜயா (நினைத்ததை அடைவதில் வெற்றி கோருவது) என்று பெயர். மால்யவான் என்பவன் தெய்வ அபசாராத்தால் ஏற்பட்ட அல்லல் நீங்கிய நாள். பங்குனி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு விஜயா (இழந்த அரச பதவியை மீட்பது) என்று பெயர். விஷ்ணுவின் அவதாரமான இராமபிரானே, பகதாலப்ய முனிவரின் பரிந்துரைப்படி விரதமிருந்து அரச பதவியை மீளப்பெற்ற நாள். பங்குனி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு ஆமலகி (அளப்பரிய திறன் வாய்ந்த நெல்லி) எனப் பெயர். ருத்ராக்ஷ மரம் சிவத் தோன்றல் போல, நெல்லி திருமாலின் தோன்றலாகும். எல்லா தெய்வ சக்திகளும் கோமாதா காமதேனுவுள் அடக்கம் போல, நலன் பயக்கும் சக்திகள் யாவும் நெல்லியுள் அடக்கம். ஆதிசங்கரருக்கு அளிக்கப்பட்ட ஒரு நெல்லி, அவரை கனகதாரா துதியை பாடச் செய்து தங்க மழையை கொட்டுவித்தது போல பெரும் பயன் அருள வல்லது. சித்திரை மாதம் தேய்பிறை ஏகாதசி பாபமோசினி (தீவினையால் விளைந்த இன்னலை அழிப்பது) எனப்படும். மேதாவி முனிவரை காமவயப்படுத்தியதால் மஞ்சுகோஷாவுக்கு விளைந்த அல்லலைப் போக்கிய நாள். சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி காமதா எனப்படும். பிற கடமைகளை நிறைவேற்றாமல், மித மிஞ்சிய பாலுறவில் ஈடுபடுவதால் நேரும் இன்னலை நீக்கி அருளும் நாள். வைகாசி மாதம் தேய்பிறை ஏகாதசி வரூதினி (இம்மையிலேயே நன்மை தருவது) எனப்படும். மாந்தாதாவை இம்மையிலும், மறுமையிலும் நன்மை அடையச் செய்த நாள். அன்னதானத்திற்கும் மேலான வித்யாதானத்தின் பலனை அருளும் நாள். வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசி மோகினி எனப்படும். மோகத்தில் ஆழ்ந்திருந்த அருணகிரியை முருகன் காத்தது போல. வாழ்வு போகங்களிலேயே ஆழ்ந்ததால் நேரிட்ட எல்லா துன்பங்களிலிருந்தும் த்ருஷ்டிமான் என்ற அரச குமாரன் கௌண்டின்ய முனிவரின் அறிவுரைப்படி, விரதமிருந்து மீண்ட நாள். அனைவரையும் மோகத்திலிருந்து விடுவிக்கும் நாள்.
ஆனிமாதம் தேய்பிறை ஏகாதசி அபரா (மறுமைக்கு வழி காட்டும்) எனப்படும். தெரியாததை மறைத்து, அறிந்தவர் போல நடக்கின்ற தவற்றை நீக்கிடும் நாள். உதாரணமாக, மருத்துவம் அறியாதவர் மருத்துவராக உலவுவது போன்று, இன்னும் பலர் வெவ்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றதாக ஊரை ஏமாற்றுவதால் நேரும் அல்லலை தவிர்க்கும் நாள். ஆனி மாதம் வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா ( நீர் கூடப் பருகாமல் இருத்தல்) எனப்படும். சிலருக்கு அதிக நேரம் உண்ணாமை கஷ்டமாகத் தெரிவதில்லை. பலருக்கு என்றாவது உண்ணாமை சிரமமாக இருப்பதில்லை. இன்னும் சிலருக்கோ, இயற்கையாகவே, ஒரு வேளை கூட உண்ணாமல் இருக்க முடிவதில்லை. இந்த நிலைக்கு பீமன் ஒரு உதாரணம். அவனும் கூட, இந்நாளில் விரதமிருந்து, மறுநாள் துவாதசியிலேயே உணவு ஏற்றதால், நிர்ஜலா ஏகாதசிக்கு மறுநாள் பாண்டவ துவாதசி என்று பெயர். ஆடிமாதம் தேய்பிறை ஏகாதசியை மோகினி என்பர். பொதுவாகவே, போகிகளாக இருக்கும் நமக்கு அதற்கு மேலான யோக நிலையை அடைந்திட அருளும் நாள். ஆடி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு சயனி என்று பெயர். ஒவ்வொரு ஜீவராசியும் வெவ்வேறு காலங்களில் ஓய்வு எடுப்பது போல, மகாவிஷ்ணு ஓய்வாக சயனிக்கத் துவங்கும் நாள். ஆவணி மாதம் தேய்பிறை ஏகாதசி காமிகா எனப்படும். நம்மை அத்தியாவசியத் தேவைகட்கு கஷ்டப்படாமல் காத்து அருளும் நன்னாள். ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கும் (தை வளாபிறை ஏகாதசி போல) புத்ரதா என்று பெயர். புரட்டாசி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு அஜா (வருத்தம் நீக்கும்) என்று பெயர். உண்மை பேசுவோரின் மேன்மையை உலகுக்கு உணர்த்துவதற்காக, சோதனைக்குள்ளாக்கப்பட்ட ஹரிச்சந்திர மகாராஜன் விரதமிருந்து, மீண்டும் நாடும் நலனும் பெறச் செய்த பெருமையுடையது.புரட்டாசி மாதம் வளர்பிறை ஏகாதசி பத்மா எனப்படும். நாராயணன் (நாரா = நீர், அயனன் = துயில்பவன்) அருளால் மழை பொழிவித்து எங்கும் வளமை கூட்டும் பெருமையுடையது.ஐப்பசி மாதம் தேய்பிறை ஏகாதசி இந்திரா எனப்படும். நற்செயல்கள் புரியாமையால் விளைந்த இன்னலைப் போக்குவது. ஐப்பசி மாதம் வளர்பிறை ஏகாதசி பாபாங்குசா (அல்லனவையில் ஈடுபட்டதால் ஏற்பட்ட துன்பத்தை துடைப்பது) எனப்படும். நம்மை மட்டுமின்றி, தந்தை வழி தாய் வழி, மனையாள் வழி முன்னோரையும் நரக துன்பத்திலிருந்து மீட்கும் நாள். கார்த்திகை மாதம் தேய்பிறை ஏகாதசி ரமா (மகிழ்வு கூட்டுவது) எனப்படும். ஒருவர்க்கு மட்டுமின்றி, ஊருக்கே, உலகுக்கே வளமையருளும் நாள். கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி ப்ரபோதினி என்று கூறப்படுகிறது. வருடத்திற்கு 365/366 நாள் என்பதாலும், திதிகளில் கால அளவு குறைந்து, கூடுவதாலும் ஒவ்வொரு ஏகாதசிக்குமிடையே சரியாக 15 நாள் இடைவெளி இல்லாததாலும் 2,3 வருடங்களுக்கொரு முறை, ஒரே வருடத்துக்குள் 25 ஏகாதசிகள் வரும். அது உத்தமோத்தமமான கமலா ஏகாதசி எனப்படும்.
கால அளவைகளும் விரதங்களும்: பூமியோ, சந்திரனோ, சூரியனோ இன்னும் பிற கிரகங்கள், நக்ஷத்திரங்களோ நாம் அமைத்துக் கொண்ட அல்லது பின்பற்றுகின்ற கால அளவு கோல்களின்படி - நிமிடம், மணி, நாள், மாதம், வருடம் போன்றவற்றின்படி இயங்குவதில்லை. பகல் 12 மணி, இரவு 12 மணி நேரம் என்றும், மாதம் 30 நாட்கள் என்றும், வருடம் 365 நாட்கள் என்றும் கோள்களின் சுழற்சியும் நகர்வும் அமைவதில்லை. சில பகுதியினர், சந்திரனின் கதிக்கு ஏற்ப, அமாவாசை தொடங்கி அமாவாசை வரையிலான நாட்களை ஒரு மாதமாகவும், வேறு சில பகுதியினர், சுமார் 365 1/4 நாளில், சூரிய பூமியின் நகர்வு - மற்றும் இருப்பை வைத்து 12 மாதத்திற்கும் 29 நாள் முதல் 32 நாட்கள் என்றும் தீர்மானிக்கின்றனர். இது போலவே, ஒரு சிலர் இரவு 12.01 முதல் மறு இரவு 12.00 வரை ஒரு நாளாகவும், வேறு சிலர் காலை 6.01 முதல் மறுநாள் காலை 6.00 வரை ஒருநாள் என்றும் கருதுகின்றனர். இத்தகு காலப்பாடெல்லாம் நம் சௌகரியத்துக்கு அமைத்துக் கொண்டவைகளே அண்ட சராசரங்கள் நம் திட்டப்படி இயங்கவில்லை. இதனால் தான், நாம் ஒரு நாள் ஆகக் கருதும் நேரமும், சந்திரனின் தேய்வு - வளர்வு நகர்வில் 15ல் ஒரு பகுதியான திதியும் ஒரே சமயமாக இருப்பதில்லை. ஒரு திதி சில நாட்களில் முழுமையாக இருக்கலாம். சில நாட்களில் இரண்டு திதிகள் கூடக்குறைய இருக்கலாம். சில சமயங்களில், ஒரே நாளில், அதிகாலை மிகச்சிறு நேரம் ஒரு திதியாகவும், அடுத்து ஒரு திதி முழுமையாகவும், கடைசியில் சிறிது நேரம் மூன்றாவது திதியும் இருக்கலாம். இப்படி வரும் நாளை திஸ்ப்ருஷா என்று கூறுவது வழக்கம்.
சிலர் சில திருவிழாக்களை நக்ஷத்திரப்படியும், சிலவற்றை பவுர்ணமிப்படியும் வெவ்வேறு நாளில் கொண்டாடுவதும், இந்த அடிப்படையில் தான். பருவகாலப்படியும், தக்ஷிணாயன, உத்தராயணப் படியும் அமாவாசை, பவுர்ணமிக்கு இடையிலான நேரம் மாறுபடுவதால் பிரதமை முதல் அமாவாசை / பவுர்ணமி வரை ஒவ்வொரு திதியும் சுமார் 55 முதல் 65 நாழிகை வரை இருக்கும். இதனால் தான், ஒரு திதி அல்லது நக்ஷத்ரம் அவ்வக்காலத்தில் எந்த நாளில் வேளையில் அதிகமாக உள்ளது என்பதைக் கருதி விரதமிருக்க வேண்டிய தினத்தைத் தீர்மானிக்கின்றனர். குழந்தைகளின் பிறப்பு ஒரு கிழமையின்/தேதியின் முதல் வினாடி ஆயினும், கடைசி வினாடி ஆயினும், இடைப்பட்ட எந்த வினாடி ஆயினும் அந்நாளில் பிறக்கின்ற பல்லாயிரம் குழந்தைகளின் பிறப்புத் தேதியையும், நம் சௌகரியத்திற்காக ஒன்றாகவே குறிப்பிடுகிறோம். இது போலவே தான், ஒரு விரதத்தை காலை 7.35 முதல் மறுநாள் காலை 8.20 வரையிலும், மற்றொரு விரதத்தை பகல் 1.22 முதல் மறுநாள் பகல் 12.40 வரையிலும், இன்னுமொரு விரதத்தை இரவு 9.40 முதல் மறுநாள் இரவு 9.55 வரையும் அனுஷ்டிப்பது நடைமுறை சாத்தியமாகாது என்பதால் தான், சில கணக்கு நியதிகளின் படி விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. இப்படி, விரதங்களை முதல் நாள்/ மறுநாளும் திருவிழாக்களை காலை/மாலையும் அனுஷ்டிப்பதை சரி/தவறு என்று கருதவோ, சாடவோ இடமேயில்லை. விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றனவா. அவை மறவாது மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கருத்தோடிருப்பதே முக்கியம்.
ஏகாதசி விரதம் அனுஷ்டித்தல் சில செய்திகள்: 1. மனித வாழ்காலத்தை பிரம்மசர்யம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம் என்று நான்கு நிலைகளாகப் பகுப்பது இந்த மரபு. இந்த நான்கு நிலையோரும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
2. இக்குலத்தில் பிறந்தோர், அக்குலத்தில் பிறந்தோர் என்று வித்தியாசமின்றி அனைத்து குலத்தவரும் ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
3. ஆதியில், உற்பத்தி ஏகாதசி (மார்கழி மாதத்தில்) முதலில் வந்ததால், எல்லா வருடமும், எல்லா மாதமும் தேய்பிறை ஏகாதசியே முதலில் வருவதில்லை. வளர்பிறை ஏகாதசியும் முன்பாக வரலாம்.
4. வளர்பிறை/தேய்பிறை ஏகாதசி விரதத்திற்கு இடையே ஏற்றத் தாழ்வு இருப்பதாக கருதக்கூடாது.
5. நெருங்கிய உறவினரின் பிறப்பு - இறப்பின் போதும், பெண்களின் மாதவிடாய்க் காலத்தும் பல்லோருடன், பழகிடாமல் ஒதுங்கி இருக்கும் காலங்களிலும் கூட ஏகாதசி விரதம் போன்ற நித்ய விரதங்களை மேற்கொள்ள வேண்டும்.
6. திங்கள்/ சனிப் பிரதோஷங்கள் மிகு சிறப்பு போல, பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி நக்ஷத்திரங்களில் வரும் ஏகாதசிகள் அதி சிறப்பு.
7. கடையில் வாங்கும் தேங்காய் எல்லாம், முதற்பார்வைக்கு ஒன்றாகவே தோன்றினாலும், இலங்கையில் விளைந்த (கொழும்பு)த் தேங்காய்க்கும், கேரள மலைச்சாரலில் விளைந்த தேங்காய்க்கும், பொதுவாக, மழை குறைவான, தமிழகத்தில் விளையும் தேங்காய்க்கும், நுண்ணிய வித்தியாசம் இருப்பது போலவே, வெவ்வேறு மாதங்களில், தினங்களில் வரும் ஏகாதசிகளுக்கும் தனித்தன்மைகள் உள்ளன.
8. பொதுவாக, எல்லா வகை மருத்துவமும், அவ்வழி பின்பற்றும் மருத்துவமும் நமக்கு பல்வேறு நோய்களிலிருந்தும் நிவாரணம் அளித்தாலும் ஒவ்வொரு வகை மருத்துவ இயலுக்கும், ஒவ்வொரு மருத்துவருக்கும் தனிச்சிறப்பு உள்ளது. இது போலவே தான் ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், பலன்களும் ஆகும். பயன் குறைவு - கூடுதல் என்பதல்ல. மாறாக ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்கள் அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும்.
9. ஏழ்மை - நிவாரணம், நோய் எதிர்ப்பு நிலைக் குறைவு - தடுப்பு, தொழுநோய் தவிர்ப்பு, புலியினம் காப்பு, சுற்றுச்சூழல் மாசுபடாமல் காத்தல் போன்றவற்றுக்கு நம் அன்றாடச் செயல்பாடுகள் பலவும் உதவினாலும் கூட; மேற்குறிப்பிட்டவற்றில் ஏதாவது ஒன்றை அதிகமாகப் பெறுவதற்காகவே சில தினங்களில் முனைப்புடன் செயல்படுகிறோம். இது போன்ற நிலையையே விரத அனுஷ்டிப்பிலும் காண்கிறோம்.
10. அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பும், சிகிச்சையின் போதும், அறுவை சிகிச்சைக்குப் பின்பும், நோயாளிக்கு முழுமையான ஆரோக்கிய நிலை ஏற்படுவதற்காக, சில நாட்களுக்கு உணவுக் கட்டுப்பாடும், குறைப்பும், தவிர்ப்பும் மேற்கொள்ளப்படுகிறது. இது போலவே தான், ஏகாதசி போன்ற விரதங்களின் போது, விரத உண்ணாமையின் முழுப் பயனை அடையவும், விரத நாளில் முழுவதும் உண்ணாதிருப்பது சிரமமாகத் தோன்றாமல் இருக்கவும், முதல் நாளான தசமியன்று ஒரு வேளை மட்டுமே உண்கிறோம். மேலும், வெகு நேரம் உணவின்றியிருந்ததற்குப் பின்பு, படிப்படியாகவே உணவு அளவைக் கூட்ட வேண்டும் என்பதற்காக துவாதசியிலும் ஒரு வேளை உணவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அன்றைய உணவு அளவு குறைவாயிருந்தாலும் அது எளிதாக ஜீரணிக்கப்பட்டு, அதிக ஊட்டச்சத்தும் அளிக்க வேண்டும் என்பதற்காக, நெல்லிக்காய், அகத்திக்கீரை போன்றவற்றை உபயோகிக்கிறோம்.
11. ஒவ்வொரு ஏகாதசி விரதமும் (எல்லா விரதங்களுமே) குறிப்பிட்ட, தவறான செயல்பாடுகளால் விளைந்த அல்லல்களைத் தீர்ப்பதாகக் கூறப்படுவதற்குக் காரணம், துன்பப்படுவோர் நன்மை பெற வேண்டும் என்பது மட்டுமல்ல. அவ்வல்லல்களுக்குக் காரணமாகும் தவறுகளை நாம் தவிர்க்க வேண்டும் என்று நினைவுறுத்துவதே, விரத மேன்மை விவரிப்புகளின் நோக்கமாகும்.
12. ஒவ்வொரு ஏகாதசியின் பெருமையையும், வழிபாட்டு முறையையும், வெவ்வேறு தெய்வங்களோ, முனிவர்களோ வெவ்வேறு அன்பர்க்கு தெரிவித்ததாக கூறியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு, கூறியவர் அல்லது கேட்டவரின் காலத்திலிருந்து தான் குறிப்பிட்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுவதாக கருதக்கூடாது. ஒரு பள்ளிக்கூடத்தின் வரலாற்றில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு மாணவர்களுக்கு ஒரே பாடத்தையே வழிவழியாக கூறிவருகின்றனர். இது போன்றதே ஏகாதசியைப் பற்றிய வரலாறுகளும் ஆகும்.
13. ஏகாதசி விரதத்தன்று, விரிவாக பூஜை செய்வது நல்லதே என்றாலும், பலருக்கும் பசி சோர்வினால் பூஜை செய்வது இயல்வதில்லை. உண்ணாநோன்பே அன்று மிக முக்கியமானதால், இங்கும் அங்கும் ஓடி அதிகச் சோர்வு அடைவதை விட வீட்டிலேயே, மௌனமாக இருந்து, மானஸ பூஜை அல்லது நாமஜபம் செய்வது எளிதாகும். வீட்டுச் சூழ்நிலைகளால் இறைச் சிந்தனை தடைப்படுமாயின் அன்று முழுவதும் ஆலயத்திலேயே தங்கி வழிபாடுகளை தரிசித்தல் மேலும் சிறப்பு. அலைபாயும் மனதை கட்டுப்படுத்தி அரங்கனையே நினைக்கச் செய்திட விஷ்ணு புராணம், பாகவதம், ராமாயணம் போன்ற இறைத் திருவிளையாடல் நூல்களையோ விஷ்ணு சகஸ்ரநாமம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற துதிகளையோ தொடர்ந்து பாராயணம் செய்வதும் நல்லது. பாராயணத்தால் பயன் அடைவதோடு, முறையற்ற செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பதால் அல்லல்கள் வராமலும் காக்கப்படுவோம்.
ஏகாதசி விரத சங்கல்ப மந்திரம்:
தசமீ தினம் ஆரப்பிய கரிஷ்யேகம் விரதம் தவ
த்ரிதினம் தேவ தேவேச நிர்விக்னம் குரு கேசவ
துவாதசி பாரணை - நெறிமுறைகள்: ஏகாதசி உண்ணாமை விரதத்திற்குப் பிறகு துவாதசியில் உணவு ஏற்பதை பாரணை என்று கூறுவர். பல சமயங்களில், துவாதசி திதி நாள் முழுவதும் இருப்பதில்லை. இதனால், துவாதசியில் ஏற்கப்பட வேண்டிய ஒரே வேளை உணவையும் வெவ்வேறு துவாதசி தினங்களிலும், அத்திதி இருக்கும் போதே முன்பின்னாக ஏற்க நேரிடும். துவாதசி திதி காலையில் மிகக் குறுகிய நேரமே இருப்பின் மதியம் வரை செய்ய வேண்டிய சந்தியாவந்தனம், முக்கிய பூஜை போன்றவற்றை சீக்கிரமாகவே முடிப்பதில் தவறில்லை. அல்ப (மிகக் குறைவாகவே) துவாதசி திதி இருப்பின், முதலில், பெருமாளை நினைத்து துளசி கலந்த நீரைப்பருகி பாரணை முடித்துவிட்டு, பின்னர் உணவை ஏற்கலாம். இப்படி விரதம் இருந்த அம்பரீச சக்கரவர்த்தி துருவாச முனிவரின் கோபத்தில் இருந்து கூட பாதுகாக்கப்பட்டதை பல புராணங்கள் தெரிவிக்கின்றன. வளர்பிறை தேய்பிறை துவாதசியன்று திருவோண நட்சத்திரம் வந்தால் அன்றும் உண்ணா நோன்பு இருந்து திரயோதசி திதியிலேயே பாரணை செய்ய வேண்டும். இப்படி ஏகாதசி, துவாதசி இரண்டு நாட்களிலும் முழுவதுமாக உண்ணாமை இயலாவிட்டால், ஏகாதசியன்று முன் இரவில் சிறிதளவு பலகாரம் ஏற்கலாம். சிரவண துவாதசி அன்று கண்டிப்பாக உண்ணாதிருக்க வேண்டும்.
துவாதசி பாரணை சங்கல்ப மந்திரம்
ஏகாதஸ்யா நிராகார ஸ்தித்வா அகம் அபரேஹனி
போக்ஷ்யாமி புண்டரீகாட்ச சரணம்மே பவாசயுத
துளசி நீர் அருந்திடுமுன்பு துதி
அஷ்டாக்ஷரேண மந்த்ரேண த்ரிஜப்தேன அபிமந்த்ரிதம்
உபவாச பலம் பிரேப்சு பிபேத் தோயம் சமாஹித
சில விதி தளர்வுகள்
எல்லா தேய்பிறை, வளர்பிறை ஏகாதசிகளிலும் எல்லோருமே, முற்றும் உண்ணாமையை மேற்கொள்வதே சிறப்பு. இருப்பினும், இல்லறத்தாரின் அன்றாட பணி நிர்பந்த நிலைகளையும், அதனால் கொஞ்சமாவது உணவு ஏற்க வேண்டிய நிலையையும் கருதி, சாஸ்திரங்கள் சில விதி தளர்வுகளை அனுமதிக்கின்றன. ஆடி மாத வளர்பிறை சயனி ஏகாதசி முதல், கார்த்திகை மாதம் வளர்பிறை ப்ரபோதினி ஏகாதசி முடிய, 9 ஏகாதசிகளிலும் உண்ணாமை யாவர்க்கும் கட்டாயம். பிற மாதங்களில் வரும் தேய்பிறை ஏகாதசிகளில் மட்டும் பகலில் உண்ணாதிருந்து, இரவில் குறைந்த பட்சமாக, அதுவும், திட உணவையும், பக்குவப்படுத்திய உணவையும் ஒதுக்கி, பால், பழம் போன்றவற்றை ஏற்பதில் தவறில்லை.
பலாகாரம் (பழ ஆகாரம்) = பழங்கள் உண்பது
பல - ஆகாரம் = இட்லி, தோசை, பூரி என்று மாறி, அதுவும்
பல - காரம் = உப்பு-உறைப்பு கூடிய உணவாக மாறிவிட்டது.
இரவில், நமக்குப் பிடித்தமான பல காரங்களால், நம் பசியைத் தூண்டி விட்டு, உணவு வகைகளை அதிகமாக மனதாறச் சாப்பிடுவதற்காக, விரதம் என்ற பெயரில் பகலில் உண்ணா நோன்பு இருப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலே.
பக்குவப்படுத்தாத, பழ வகைகளிலும், புளிப்பு இல்லாதவற்றை ஏற்கலாம். இயன்றவரை, பழங்களையும் தவிர்த்து பால் மட்டும் (காபி, டீ அல்ல) அருந்தலாம்.
நீர், கிழங்கு, பால், நெய், மருந்து போன்ற சிலவற்றை ஏற்பது விரதநியதிகளை மீறுவது ஆகாது என்பதற்காக, விரத நாட்களில் நினைத்த போதெல்லாம், பசித்த போதெல்லாம் இவற்றை உண்ணுவதை வழக்கமாகக் கொள்ளக்கூடாது.
ஏகாதசியன்றே வருகின்ற சில விரதங்கள்: சித்திரை மாதம் வளர்பிறை பஞ்சமியன்று சங்கரர் ஜயந்தி, ராமானுஜர் ஜயந்தி ஒன்றாகவே வருகின்றன. சிவனார் ஒரு முறை ஜோதியாக மாறியதும், வேறு முறை திரிபுர அசுரர்களை அழித்ததும், திருமால் மச்ச அவதாரம் எடுத்து வேதங்களை மீட்டதும், கார்த்திகை மாதம் அண்ணாமலை தீபத்தன்றே நாமும் முப்பெரும் விழா, ஐம்பெரும்விழா கொண்டாடுகிறோம். இது போலவே சில ஏகாதசிகளில் வேறு விரதங்களும் கூடுகின்றன.
1. ஆடிமாதம் வளர்பிறை ஏகாதசியில் அனுஷ்டிக்கப்படுவது கோபத்மவிரதம். பல்வகையிலும் நமக்கு நன்மை பயக்கும் பசுக்களைக் கட்டும் இடத்தில், தாமரை வடிவ கோலம் இட்டு, அதனுள், திருமாலை வழிபட்டு கோதானம் அளிப்பது மிகச் சிறப்பு.
2. மாதம், பிறை பாகுபாடின்றி எந்த ஏகாதசியில் அருணோதய நேரத்தில் அதிகாலை (4 . 30 - 6) தசமி திதி இருக்கிறதோ அன்று அத்திமரத்தால் ஆன பாத்திரத்தில் நீர் கொண்டு வந்து விஷ்ணுவை வழிபடுவதை வஞ்சுள ஏகாதசி விரதம் என்பர்.
3. கார்த்திகை வளர்பிறை ஏகாதசியன்று பீஷ்மர் அம்புப்படுக்கையிலிருந்தே மகாபாரதப் போர் நிகழ்ச்சிகளைக் கண்ட நாள் என்பதால் அன்று பீஷ்ம பஞ்சக விரதம் அனுஷ்டிப்பது வழக்கம்.
4. மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று கோபூஜை செய்வதை வைதரணி விரதம் என்பர்.
ஏகாதசியும் சிரார்த்தமும்: ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திதியிலும் எண்ணிலாக் குழந்தைகள் பிறப்பது போல, எண்ணிலார், எல்லா திதிகளிலும், இறைபதம் அடைவதும் இயற்கை நிகழ்வே ஏகாதசியில் மரணமும், துவாதசியில் தகனமும் மாமுனிவர்க்கும் கிடைத்தற்கரியது என்பர். இறந்தவர்க்கு, ஒவ்வொரு வருடமும் செய்யப்படும் சிரார்த்தம், திதியை அனுசரித்தே செய்யப்பட வேண்டுமென்பதால், ஏகாதசி அன்று சிரார்த்தம் நடத்திடும் குடும்பத்தினரும், சிரார்த்தத்தில் நம்முடைய முன்னோர்களின் பிரதிநிதியாக ஏற்கப்படும் அந்தணர்களும், நெருங்கிய பங்காளிகளும், சிரார்த்தத்திற்காக சமைக்கும் உணவை ஏற்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் சிரார்த்த உணவை ஏற்பது விரதநியதிகளை மீறியதாக கருதப்படுவதில்லை. சில பகுதி மக்கள், ஏகாதசிகளில், தாம் சாப்பிட்ட தவறுக்கோ, பிறரை உண்ணச் செய்த தவறுக்கோ, ஆளாகக் கூடாது என்பதால், ஏகாதசியில் வரும் சிரார்த்தத்தை துவாதசி திதியில் செய்வதை, வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது, தேசாசாரம் என்று, நெடுங்காலமாக பெரியோர்களால் ஒத்துக் கொள்ளப்பட்டும் வந்திருக்கிறது.
வைகுண்ட ஏகாதசியும் ஸ்ரீரங்கமும்: எல்லா விஷ்ணு ஆலயங்களிலும், வைகுண்ட ஏகாதசி சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும், பால்குட விழா என்றால் பழனியும், கிரிவல வழிபாடு என்றால் திருவண்ணாமலையும் நினைவிற்கு வருவதுபோல வைகுண்ட ஏகாதசி என்றால் எல்லோருக்கும் ஸ்ரீரங்கமே முதலில் நினைவிற்கு வருகிறது. பிரம்ம லோகத்தில் பூஜை செய்து வந்த திருமாலின் திருவுருவை பிரமன். சூரிய வம்ச அரசனான. இக்ஷ்வாகுக்கு கொடுக்க, பிற்காலத்தில், அதை ராமபிரான் விபீஷணனுக்கு கொடுக்க, அவன் பெருமாள் திருமேனியை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் போது, இறைவன் திருவிளையாடலால் ஸ்ரீரங்கம் என்ற புண்ணிய பூமியில் நிலைத்து விட்டது. அங்கு தர்மவர்மனால் எழும்பிய முதற்கோயில், ஒரு காலத்தில் காவிரி வெள்ளத்தால் மறைந்து விட்ட போது தெய்வீகக்கிளி ஒன்று, அவ்விடத்தின் மேன்மையை கிள்ளிவளவனுக்கு தெரிவித்தது. அவன் புதுப்பித்த கோயிலையே இன்று காண்கிறோம். அரங்கனே திருவரங்கத்தை வைகுண்டமாகக் கருதியதால் தான் இன்றும் பகல்பத்து, ராப்பத்து என்று வைகுண்ட ஏகாதசியின் போது மிகமிக விரிவான திருவிழா நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று திருமாலை வழிபடுவோர் வைகுண்டத்துக்கே செல்வதாக உணர்த்துகின்ற நிகழ்வே வைகுண்டவாசல் அல்லது பரமபதவாசல் நுழைகின்ற வழக்கமாகும். ஒவ்வொரு வருடமும், பூலோக வைகுண்டமாகக் கருதப்படும் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் கலந்து கொள்ள இயலாவிட்டாலும், வாழ்வில் ஒருமுறையாவது அவ்விழாவில் கலந்து கொள்ள பெருமாள் அருளட்டும்.
பெருமாள் ஆலய முக்கிய சன்னதித் துதிகள்
கருடாழ்வார் : மால் தாங்கும் மேலோனே, மால் விழியை அகலானே
கும்பிடும் நல் குணவானே, குறை நீக்கி அருள்வாயே
மகாவிஷ்ணு : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு.
லட்சுமி/தாயார் : பங்கயப் பூவில் பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்திரநாள் பாருதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மண்ணும் அவள் வாழியே.
சக்கரத்தாழ்வார் : சகல தேவ வடிவனே, சக்கிரத்துள் சிறுத்தோனே
சர்வாயுத மேந்தியவனே, சகலரையும் காத்திடுவாய்
ஆண்டாள் : சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே - தொல்பாவை
பாடியருள வல்ல வல்வளையாய் - நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதியென்ற இம்மாற்றம்
நாம் கடவாவண்ணமே நல்கு.
அனுமான்: அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக்காப்பான்
தசாவதார சன்னதி : அவசியத்து வந்தவரே, அல்லலையே பொடித்தவரே
அரி அம்சம் ஆனவரே, அண்டும் எமைக் காப்பீரே
ஆழ்வார்கள் சன்னதி : பன்னிரு நல் ஆழ்வாரே, பாடி யாடிப் பணிந்தோரே
ஆல் மாலுள் ஆழ்ந்தவரே, அனைவர்க்கும் உதாரணரே.


நன்றி : ஆன்மிக கடல்

























1 கருத்து:

Saravanan R சொன்னது…

thanks. pl send about vishnu puranam in tamil. janana79@gmail.com