தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/16/2012

கதை சொல்வதில் இந்தியர் பேர் போனவர்கள்


கதை சொல்வதில் இந்தியர் பேர் போனவர்கள் என்று மேலை நாடுகளில் சொல்வார்கள். மேலை நாடுகளில் கதைகள் சொல்வதில்லை, உதாரணத்தால் விளக்குவதில்லை. அவையில்லாமல் புரிந்து கொள்ளும் திறனுடையவர்கள் அவர்கள். பேசும்பொழுது ஒரு விஷயத்தை உதாரணத்தால் விளக்க முயன்றால் அவர்களுக்குப் பிடிக்காது. அவர்களை நாம் அறிவில்லாதவர்கள் என நினைப்பதாகக் கருதி வருத்தமடைவார்கள். உதாரணம் தேவையில்லை என்பார்கள். அன்னை  இந்தியாவுக்கு வந்த புதிதில் அவரிடம் பேசுபவர்கள் கதை சொல்வதைக் கேட்டு வியந்தார்கள். அன்னை கதை சொல்வதில்லை. குழந்தைகளுக்காக அன்னை சொல்லிய கதைகள் "Tales of Long Ago'' பழங்காலத்துக் கதைகள் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கின்றன. அது தவிரவும் அன்னை சொல்லிய சில கதைகளை இக் கட்டுரையில் சுருக்கமாக எழுதுகிறேன்.
1. மனிதனைவிட அறிவுள்ள குரங்கு
ஆப்பிரிக்காவில் ஒருவர் குரங்கு வளர்த்தார். அதை மனிதர்கள் செய்வனவெல்லாம் செய்யும் அளவுக்குப் பழக்கியிருந்தார். சாப்பிடும் பொழுது மேஜையைச் சுற்றிவிருந்தினர் உட்கார்ந்திருக்கும்பொழுது,அக்குரங்கும் ஒரு நாற்காயில் உட்கார்ந்து மனிதனைப் போல் சாப்பிடும். ஒருநாள் அதுபோல் அனைவரும் உட்கார்ந்த பொழுது, சாப்பாட்டுக்கு முன் (wine) திராட்சை ரசம் பரிமாறி னார்கள். குரங்குக்கு ஒரு டம்ளர் கொடுத்தார்கள். குரங்கு குடித்தது. அதற்கு மயக்கம் வந்து போதை மீறியது. முதல் முறை போதைப் பொருள் சாப்பிடுபவர் படும் அவஸ்தை குரங்குக்கு வந்தது. நாற்காலியிலிருந்து கீழே விழுந்தது. தரையில் விழுந்து புரண்டு, மரணத்தின் வாயிலை எட்டியது. எப்படியோ பிழைத்துக் கொண்டது. பலநாள் கழித்து நடந்த ஒரு விருந்தில் குரங்கையும் உட்கார வைத்தனர். மீண்டும் திராட்சை ரசம் பரிமாறினார்கள். குரங்குக்கு ஒரு டம்ளர் கொடுத்தனர். குரங்கு அதைக் கையில் எடுத்தது. ஆவேசமாகக் கோபத்துடன் கொடுத்தவர் தலையில் டம்ளரை அடித்தது. மனிதனுக்கில்லா இந்த அறிவு குரங்குக்கு இருக்கின்றது என்கிறார் அன்னை.

கருத்துகள் இல்லை: