தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/30/2010

மனிதா இது சரியா ? தவறா?


தொழில் நிமித்தமாக, ஒருவரின் வீட்டிற்கு சென்று இருந்தேன். அவர் வீட்டிலேயே சிறு தொழில் ஒன்றும் செய்து கொண்டிருக்கிறார். நாம் அவரை சந்திக்க போன போது, இரவு ஏழு மணி இருக்கும். வீட்டில் மின் தடைப்பட்டு இருந்தது. பக்கத்தில் எல்லாம் மின்சாரம் இருந்தது. அவரின் வீட்டில் மட்டும் மின் தடை. காரணம்?


எப்போதுமே பதினைந்தாம் தேதி தான் மின் கட்டணத்தை (கடைதி தேதியன்று) கட்டுவாராம். அன்று காலையில் திடீரென்று குழந்தைக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்ததில் மற்றும் பதற்றத்தில் ஞாபகமின்மை ஏற்பட்டு பணம் கட்டவில்லை. விளைவு. மாலையில் வந்து ப்யூஸ் பிடுங்கி விட்டார்கள். "கொஞ்சம் முன் கூட்டியே கட்டி இருக்கலாமே. இப்ப நமக்கு தானே சிரமம்" என்றேன்.


அவர் மட்டுமல்ல, நம்மில் நிறைய பேர் கடைசி நேரத்திலேயே, ஒரு பரபரக்கும் சூழ்நிலையிலேயே எல்லாவற்றையும் செய்கிறோம். நிச்சயம் அதனால் நமக்கு தான் சிரமம் என்பதை உணர மறுக்கிறோம். அலுவலர்களுக்கும் சிரமம். "பதினாலு நாளா எங்க போனிங்க" என்று அவரும் எரிச்சல் படுவார். சில சமயங்களில், கடைசி நாளில் மின் கட்டணம் செலுத்த வருபவர்களின் கூட்டத்தை, காவல்துறையினர் வந்து கட்டுபடுத்துவார்கள் என்று நண்பர் சொல்ல கேட்டிருக்கிறேன்.


பல்வேறு சமயங்களிலும், நாம் கடைசி நேரங்களிலேயே பல காரியத்தை செய்கிறோம். பணமின்மை என்கிற ஒரு காரணத்தை தவறாமல் வைக்கிறோம். அது உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். ஆனால் எப்போதும் பணமின்மையை மட்டும் சொல்லி கொண்டிருக்க முடியாதே. வாடகைக்கு குடி இருக்கும் பட்சத்தில், எத்தனை பேர் வாடகை பணத்தை முதல் சில தேதிகளுக்குள் தருகிறார்கள்.


சிலருக்கு சம்பளத் தேதி சற்று முன் பின்னாக இருக்கலாம். சிலர் வார சம்பளம் வாங்கலாம். அதனால் சில தாமதங்கள் நிகழலாம். அது விதி விலக்கானவை. ஆனால் வேண்டுமென்றே தாமதப்படுத்தி கொடுப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். பணம் வைத்திருப்பார்கள். ஆனால் தர மாட்டார்கள். இழுத்தடித்து, அலைய வைத்து கொடுப்பதில், அவர்களுக்கு ஒரு சந்தோசம். "எதுக்கு வேகமா கொடுக்கணும். அவன்கிட்ட பணம் இல்லையா" என்று நினைப்பார்கள். நம் கடமையை செய்ய, நாம் தர வேண்டியதை தர எவ்வளவு விருப்பப்படுகிறோம்.


நாம் இதை விளையாட்டாக நினைக்கிறோம். ஆனால் அது நம் குணாதிசயத்தை காட்டும் கண்ணாடி என்பதை உணர மறுக்கிறோம். "அவர் எந்த விஷயத்திலும் கரெக்ட்டானவர் இல்ல" என்பதை பிறர் உணர வாய்ப்பளிக்கிறோம். சிலர் கடைசி நேரத்தில் தான், எந்த ஒரு விஷயத்திற்குமே பணத்தை திரட்டும் முயற்சியில் இறங்குவார்கள். பணம் கிடைக்காத பட்சத்தில் பொய்கள் தான் வந்து விழும். மனிதர்களை மனிதர்கள் இப்படி செய்ய முடியும். ஆனால் சில நிறுவனங்கள் நம்பகத்தன்மை இல்லாத காரணத்தினாலேயே பின் தேதியிட்ட காசோலைகளை பெறுகிறார்கள். மனிதனின் சில நடத்தை விதிகள், சரியற்று போவதால் தான் பல புதிய புதிய வழிகள் வருகின்றன. போஸ்ட் பெய்ட் ,போய் ப்ரி பெய்ட் சிம் வந்துள்ளது. முன்பெல்லாம் உபயோகித்தால் தான் பில் வரும். இப்போது உபயோகப்படுத்துவதற்கே பணம் செலுத்த வேண்டும். கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் மாசக் கணக்கில் பாக்கி. DTH ஆபரேட்டரிடம் பாக்கி சொல்ல முடியுமா. "பணத்தை கட்டிட்டு பாரு" என்பார்கள்.


ஒன்றாந்தேதி பணம் கட்ட வேண்டும் என்றால், முந்தைய மாத இருபதாம் தேதியே அதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். மனிதனின் வெற்றிக்கு திறமை, அதிர்ஷ்டம் என்று பல காரணங்கள் சொல்ல பட்டாலும், எல்லாவற்றையும் தாண்டி - எல்லாவற்றிலும் ஒழுங்கு என்கிற அம்சமே ஒருவரை நிரந்தர வெற்றியாளனாய் வைத்திருக்கும்.

நிச்சயம், நம் ஒழுங்கு பிறரை ஈர்க்கிறது. அது நமக்கு சில வாய்ப்புகளை பெற்று தருகிறது. சின்ன சின்ன விஷயம் தானே என்று நாம் எதையும் இளக்காரமாக நினைக்காமல், சின்ன செயல்களுக்கு ஒரு முனைப்பையும், பெரிய செயல்களுக்கு ஒரு வித முனைப்பையும் காட்டாமல் எல்லாவற்றையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்த்து செய்து வாழும் வாழ்க்கை மிக மிக சரியாக இருக்கும். நம்மை அளவற்ற  ஆனந்தத்தில் ஆழ்த்தும் ...

கருத்துகள் இல்லை: