தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/25/2011

திருநங்கை யார் ?


          நான் பலமுறை அரவாணிகள் எனப்படும் திருநங்கைகளை கண்டதுண்டு. அவர்கள் என்னிடம் அடிக்காத குறையாக பிச்சை கேட்டதுண்டு. நான் அருவெறுப்புப் பட்டுக்கொண்டே கொடுத்ததும் உண்டு. இவர்கள் ஏன் கை ஒடிந்தவர்கள் போன்றோ, கால் ஒடிந்தவர்கள் போன்றோ அடக்கமாக, கெஞ்சிக் கதறி பிச்சை எடுப்பதில்லை? அரற்றி, மிரட்டி, உரசித் தேய்த்து பிச்சை(?) எடுக்கிறார்கள், அதாவது பிச்சையை பிடுங்குகிறார்கள்? யோசிக்கிறோமா??
இல்லை அல்லது தெரியவில்லை. அரவாணிகள் என்பவர்கள் இந்த சமூகத்தில் யார்? தெரியவில்லை. அவர்களின் பங்கு என்ன? தெரியவில்லை. அவர்களின் வாழ்க்கையில் நம் பங்கு என்ன? தெரியவில்லை. அவர்களை பெண்கள் பகுதியில் சேர்ப்பதா, அல்லது ஊனமுற்றோர் என (அதாவது உளவியல் மற்றும் உயிரியல் ரீதியாக) எடுத்துக்கொள்வதா? தெரியவேயில்லை.
அரவாணிகள் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத ஒரு பாலினம். சிலபேர் ஆண்களாக பிறந்து பெண்களாக ஆகிறார்கள். சிலர் நேர்மாறு. இதற்கு ஒரே காரணம் உரியியல் அல்லது மரபணு கோளாறு. இதற்கு யாரை குற்றம் சொல்வது? இயற்கையை அன்றி வேறு யாரையுமே சொல்ல முடியாது. ஆனால் குற்றவாளிகளாக சமூகத்தில் நிறுத்தப்படுபவர்கள் இயற்கையால் பாரபட்சம் பார்க்கப்பட்ட அரவாணிகள். தங்களின் மனநிலையோடு பருவ வயதில் ஒரு யுத்தமே நடத்தி தோற்று போன அப்பாவிகள். தன் குழந்தைக்கு கையில்லை, காலில்லை, வாயில்லை, கண்ணில்லை என்றால் தங்கள் கண் போல பாதுகாக்கும் பெற்றோர்கள் கூட, தங்கள் குழந்தைக்கு பாலினம் இல்லை என தெரியவந்தால் மிரண்டு போய் அரள்கிறார்கள். அந்த குழந்தையை குற்றவாளியாக்கி தண்டிக்கிறார்கள். சூழ்நிலை இப்படி இருக்கும் போது, சமூகத்தில் உடல் ஊனமுற்ற, வாழ தன்னம்பிக்கையில்லாமல் பிச்சையெடுக்கும் சிலரைப் போலவே 'இவர்களும்', அடங்கி ஒடுங்கி கெஞ்சிக் கதறி பிச்சையெடுக்க வேண்டும் என நாம் நினைப்பது எவ்வகையில் நியாயம்? இவர்களின் அரட்டல்களிலும், மிரட்டல்களிலும் ஒளிந்திருப்பது, தங்களுக்கு பாலின குறைபாடு ஒன்றை தவிர அனைத்து தகுதிகளும் இருந்தும் இந்த சமூகம் தங்களை பிச்சையெடுக்க வைத்துவிட்டதே என்ற கோபம் தான்.
இவர்கள் நம் சக மனிதர்கள். அன்பு, கோபம், அறிவு, நட்பு, கவுரவம், உழைப்பு, மொழிப்பற்று, இனப்பற்று, தேசப்பற்று என அத்தனையும் கொண்ட சாதாரண மனிதர்கள். ஆனால் இந்த சமூகத்தில் அவர்கள் அப்படி நடத்தப்படுகிறார்களா? ஒரு அரவாணிக்கு நம் அலுவலகத்தில் வேலைக்கு சிபாரிசு செய்ய, அல்லது நம் அடுமனையில் சமைக்கும் வேலை கொடுக்க, அல்லது ஒரு நண்பன் என சமூகத்தில் அறிமுகப்படுத்த நம்மில் எத்தனை பேருக்கு மனதில் துணிவும், தெம்பும் உண்டு??!!
இப்போது நான் முதலில் கேட்ட கேள்விகளை படித்துப் பாருங்கள். ஓரளவுக்கு விடை தெரியும். ஆனால் அவர்கள் என்னவிதமாக இந்த சமூகத்தில், அதாவது ஆணாகவா, பெண்ணாகவா, மூன்றாம் பாலினமாகவா அல்லது ஊனமுற்றவர்களாகவா அல்லது எப்படி நடத்தப்பட வேண்டுமென்பதை அவர்களே தீர்மானிக்கவேண்டும் என்பது என் கருத்து!!

1 கருத்து:

Karthick சொன்னது…

Kaanchana effect indha blog la kuduthirukeenga... vaazhthukal!