தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/02/2011


சென்ற வாரம் பெரியாரை பற்றி பேசி கொண்டு இருந்த என் நண்பரிடம் அவர் மதவாதிகளை எதிர்த்தார்  என என்னிடம் அவர் வாதிட்டார்  அவரை போன்ற சில நண்பர்களுக்கு அவர் பொன் மொழிகள் ...

சுயமரியாதை


மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து, மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது, பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமே யாகும்.


மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடத் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் பெற வேண்டும்.


சீர்திருத்தமும், சுயமரியாதையும், சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம்


மனிதன் உலகில் தன் சுயமரியாதையை - தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ளவேண்டும்.


மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.


நான் யார்?


நான் எனக்கு தோன்றிய, எனக்குச் சரியென்று படுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம் என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்தோடு கூடி உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல.


எந்தக் காரியம் எப்படி இருந்தாலும் அரசியலில், பொது வாழ்க்கையில் கண்டிப்பாக மனித தர்மம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ, சமய தர்மமோ புகுத்தப்படக்கூடாது என்பதுதான் எனது ஆசையே ஒழிய, உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பம்போல்தான் நடக்க வேண்டும் என்பதல்ல.


எனது பொதுவாழ்வில் நான் அறிவு பெற்ற பிறகு, பார்ப்பனரல்லதோர் ஆட்சி என்றால் வலியப்போய் ஆதரித்தே வந்திருக்கிறேன். இதில் நான் மானம் அவமானம் பார்ப்பதில்லை.


நான் என் ஆயுள் வரை யாரிடமும் ஓட்டுக் கேட்க மாட்டேன். எனக்காக இரண்டு நல்ல (புகழ்) வார்த்தைகள் சொல்லும்படி யாரிடமும் எதிர்பார்க்கமாட்டேன்.


"நீ ஒரு கன்னடியன் எப்படித் தமிழனுக்குத் தலைவனாக இருக்கலாம்?" என்று என்னைக் கூடக் கேட்டார்கள். "தமிழனுக்கு எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா" என்றேன். இதற்குக் காரணம், ஒரு தமிழன், இன்னொரு தமிழன் உயர்ந்தவனாக இருப்பதைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கவே மாட்டான்.


சமுதாயச் சீர்திருத்தம்


சாதி வித்தியாசமோ, உயர்வு தாழ்வே கற்பிக்கின்ற புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று சொல்லிவிட வேண்டும்: மீறிப் படிக்க ஆரம்பித்தால் அவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும்.


நாம் அரசியல் துறையில் முன்னேறி மாற்றம் பெற்றிருக்கிறோமே தவிர, சமுதாயத் துறையில் இன்னமும் பிற்போக்கான நிலையில்தான் இருக்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும்.


ஒரு சமூகமென்றிருந்தால் அச் சமூகத்தில் ஏழைகளில்லாமலும், மனச்சாட்சியை விற்றுப் பிழைப்பவர்கள் இல்லாமலும் செய்வதுதான் சரியான சமூகச் சீர்திருத்த வேலையாகும்.


சீர்திருத்தம் என்பது தேவையற்றதை நீக்கிவிட்டுத் தேவையுள்ளதை மட்டும் வைத்துக்கொள்ளுதலே யாகும்.


சமுதாயத்தில் பார்ப்பனர் என்றும் பஞ்சமர் என்றும் பிரிவுகள் இருக்க வேண்டியது அவசியம்தானா? அதற்குக் கடவுள் பொறுப்பாளி என்று கூறப்படுமானால் அக்கடவுளைப் பஞ்சமனும் சூத்திரனும் தொழலாமா?


கல்வி


எல்லா மக்களுக்கும் கல்வி பரப்புவது, நம் நாட்டில் பொது உடைமைக் கொள்கையைப் பரப்புவது போன்று அவ்வளவு கடினமான கரியமாய் இருக்கிறது. கல்வியறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும். ஆசிரியர்கள், பெற்றோர்கள், அதிகாரிகள் எல்லோரும் மாணவ ர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, நாணயம் இவைகளை வளர்க்க முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். படிப்பு எதற்கு? அறிவுக்கு, அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் - தொல்லை கொடுக்காதவனாய் - நாணயமாய் வாழ்வதற்கு. முதலாவதாக, மாணவர்கள் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அடுத்து, ஒழுங்குமுறை பழக வேண்டும். அதற்கு அடுத்தாற்போல் தான் பாடம்.


தமிழ்மொழி


ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றே யாகும். மொழிப்பற்று இராதவரிடத்து தேசப்பற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கோண்டு இயங்குவது. ஆதலால் தமிழர்களுக்குத் தாய் மொழிப்பற்றுப் பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை.


தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு மொழிப்பற்று அவசியம்! அவசியம்! என்று சொல்லுகிறேன். வங்காளிக்கு வங்கமொழியில் பற்றுண்டு; மராட்டியனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு; ஆந்திரனுக்கு ஆந்திர மொழியில் பற்றுண்டு; ஆனால், தமிழனுக்குத் தமிழில் பற்றில்லை. தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதவரையில் தமிழர்கள் முன்னேற்றமடையமாட்டார்கள்.


நான் தமிழினிடத்தில் அன்பு வைத்திருக்கிறேன் என்றால் அதன் மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையையும் அது மாறி நேர்ந்தால் அதனால் இழப்பு ஏற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழினிடத்து அன்பு செலுத்துகிறேன்.


மற்றொரு மொழி நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து அதனால், நமக்கு ஏற்படும் இழப்பை அறிந்து சகிக்கமுடியாமல்தான் எதிர்க்கிறேனே யொழியப் புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.


மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியதும் அறிவையும் திறமையையும் தைரியத்தையும் உண்டாக்கக் கூடியதும் ஆகிய சிறந்த கலைகளையெல்லாம் தமிழில் எழுதிப் பரவச் செய்வதன் மூலம், மக்களுடைய அறிவையும், தமிழ் மொழியையும் செம்மை செய்வதே தமிழ் உணர்ச்சியாகும்.


எழுத்துச் சீர்திருத்தம்


எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முந்திய பதிப்புகளிலும் எழுத்துக்களிலும் “ஈ” என்கின்ற எழுத்தானது “இ” எழுத்தையே மேலே சுழித்த வட்டவடிவத்தில் இருந்து வந்திருக்கிறது.


இன்னும் 400, 500 ஆண்டுகளுக்கு முந்தின கல் எழுத்துக்கள் அநேகம், வேறு வடிவத்தில் இருந்து வந்திருக்கின்றன. அதுபோலவே இப்போ தும் சில எழுத்துக்களை மாற்ற வேண்டியதும் சில எழுத்துக்களைக் குறைக்க வேண்டியதும், சில குறிகளை மாற்ற வேண்டியதும் அவசிய ம் என்றும், அனுகூல மென்றும்பட்டால் அதைச் செய்யவேண்டியது தான் அறிவுடைமை.


ஒரு மொழியோ, ஒரு வடிவமோ எவ்வளவு பழையது - தெய்வீகத் தன்மை கொண்டது என்று சொல்லிக் கொள்ளுகின்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவற்றைச் சீர்திருத்த வேண்டிய அவசியமிருக்கின்றது என்பது அதன் உண்மைத் தத்துவமாகும்.


எழுத்துக்களை உருவம் மாற்றுவது, குறிப்புகள் ஏற்படுத்துவது புதிய எழுத்துக்களை சேர்ப்பது என்பது போலவே சில எழுத்துக்களை அதாவது அவசியமில்லாத எழுத்துக்களைக் குறைக்க வேண்டியதும் அவசியமாகும்.


மொழியின் பெருமையும், எழுத்துக்களின் மேன்மையும், அவை எளிதில் தெரிந்து கொள்ளக் கூடியதாகவும், கற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருப்பதைப் பொறுத்தே ஒழிய வேறில்லை.

தொடரும் .....

கருத்துகள் இல்லை: