தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/23/2011

ஆந்த்ரே நோஸ் (Entre Nos)திரைப்படங்களில் பல உண்மைகள் பேசுகின்றன. கடந்து போன கதைகளை சொல்லுகின்றன. நம்பிக்கைகளை விதைக்கின்றன. வாழ்வின் விளிம்பிற்கு சென்ற மனிதர்கள் வெற்றி பெற்ற கதைகளை சில படங்கள் உண்மைக்கு அருகே இருந்து காட்டுகின்றன. அவ்வகை திரைப்படங்களாக 'The pursuit of happyness' போன்ற திரைப்படங்களில் கண்டிருக்கிறோம். அந்த திரைப் படங்களை நம்முடைய வாழ்வோடு ஒப்பிட்டு, நமது வாழ்கை அவர்களோடு மேலாக இருப்பதை உணர்ந்து ஆறுதல் பட்டுக் கொள்ளலாம். அவர்களின் தன்னம்பிக்கை கண்டு நமக்கும் நமது மேல் நம்பிக்கை பிறக்கலாம். அப்படிப்பட்ட ஒரு தன்னம்பிக்கை பெண்மணியின் கதையைத்தான் ஆந்த்ரே நோஸ் திரைப்படம் பேசுகிறது.கொலம்பியாவின் பகோடா என்ற ஊரிலிருந்து நியூ யார்க் நகருக்கு வேலை தேடி வருகிறது ஒரு குடும்பம். கணவன், மரியானா என்ற மனைவி. அவர்களின் குழந்தைகள் காபி என்ற காப்ரியல் மற்றும் அண்ட்ரியா என்ற சிறுமி. வந்த இடத்தில் கணவன் வேறு ஒரு துணையை தேடிக் கொண்டு, தனக்கு மியாமி நகரில் வேலை கிடைத்திருப்பதாகவும், தான் அங்கு சென்று செட்டில் ஆனா பின்னர் வந்து குடும்பத்தை அழைத்து செல்வதாகவும் கூறி செல்கிறான். நம்பிக்கையுடன் அவனை வழி அனுப்பி வைக்கிறது. அவனது நண்பனின் மூலமாக, மரியானாவுக்கு அவள் கணவன் திரும்பி வரப்போவதில்லை என்ற உண்மை சொல்லப்பட அவள் உடைந்து போகிறாள்.


நமது ஊர் பப்ஸ் போல இருக்கும் எஸ்பனடா என்னும் பலகாரம் செய்து தெருவில் இறங்கி விற்கிறாள்.அதில் வருமானம் வரவில்லை.


ஒருமுறை கோக் டின்களை சேகரிக்கும் ஒருவனை கண்டு அவன் பின்னாலேயே தன குழந்தைகளுடன் தொடரும் மரியன், ரீசைக்ளிங் செய்யப்படும் ஒரு காலி கோக் டின்னுக்கு ஐந்து சென்ட்கள் கிடைக்கும் என அறிந்து கொண்டு, மறுநாள், ஒரு கடையில் இருந்து ஸ்ட்ராலரை திருடும் அந்த குடும்பம், தினமும் காலி கோக் டின்களை குப்பைகளிலிருந்து பொறுக்க ஆரம்பிக்கிறது. அதே தினம், அவளது கணவன் மூன்று மாதமாக வாடகை தராததால், அந்த சைனீஸ் வீட்டுக்காரன், அவர்களை வீட்டில் இருந்து துரத்தி விட, அந்த குடும்பம் பார்க்குகளிலும், ரயில் மேம்பாலங்களிலும் தங்குகிறது. யாரோ சொன்ன ஒரு முகவரியை வைத்துகொண்டு, நியூ யார்க் நகரில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் வாரத்துக்கு 150$ வாடகைக்கும் தங்குகிறார்கள். அப்போது தான் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்கிறாள் மரியான். இருக்கிற கஷ்டம் போதாமல் இது வேறயா என விக்கித்து நிற்கும் வேளையில் அந்த இந்திய பெண் அவள் கருவை கலைக்க உதவுகிறாள். நமது ஊரு கிழங்கோ அல்லது மருந்தோ.. எதோ ஒன்றை கஷாயமாக்கி தர, அதுவாகவே கரு கலைந்து விடும் என சொல்லி அவளை பார்த்துக் கொள்கிறாள்.


கருகலைப்பு தனது மதத்துக்கு விரோதம் என தெரிந்தும் ஆலயம் சென்று கடவுளிடம் மன்னிப்பு வேண்டி அழுகிறாள். கரு கலைகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த குடும்பம் குப்பையில் கிடக்கும் காலி கோக் டின்களை பொறுக்கி முன்னேறுகிறது. அவளது ஒவ்வொரு கஷ்டத்திலும் அவளுக்கு துணையாக அவளது மகன் காப்ரியல் இருக்கிறான். எல்லாம் தெரிந்தும், எதுவும் தெரியாதமாதிரி காட்டிக் கொள்ளும் அவன், தன தாய் கஷ்டப்படும் போதெல்லாம், தனியனாக கோக் டின்கள் பொறுக்கி குடும்பம் காக்கிறான். படத்தின் முடிவில், இந்தப் படம் ஒரு உண்மை கதை என்றும், தற்போது மரியன், காப்ரியல் மற்றும் ஆண்ட்ரியா என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என கார்டு போடும்போது நம் மேனி சிலிர்ப்பது உண்மை.


மரியனாக நடித்திருக்கும் பாவ்லா மண்டோசா தான் படத்தின் பிரதான பாத்திரம். தனது இயலாமையும், தன்னம்பிக்கையும் ஒரு சேர தன முகத்தில் படம் நெடுக அற்புதமாக வெளிப்படுத்துகிறார். படத்தை க்ளோரியா லா மார்த்தே என்ற மற்றொரு பெண்ணோடு சேர்ந்து எழுதி இயக்கி இருப்பவரும் இவரே.


படத்தில் காப்ரியல்ஆக நடித்திருக்கும் அந்த சிறுவன் தான் இந்த படத்தின் கதாநாயகன். எல்லாம் தெரிந்தும், எதுவுமே தெரியாதது போல முகத்தில் உணர்ச்சிகளை அடக்கி கொண்டு, தன அம்மாவின் சிரமம் புரிந்து அவளது கஷ்டங்களில் தோள் கொடுத்து தன்னால் இயன்ற அனைத்து செல்லும் ஒரு கதாபாத்திரம், அனைத்து அன்னைகளுக்கும் ஒரு உதாரண மகனாக சிறந்த நடிப்பு.


இந்த திரைப்படம் உலகெங்கும் பலவித விருதுகளும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.


இந்த திரைப்படம் வாங்கிய விருதுகள்.


படம் மெதுவாக நகர்ந்தாலும், ஒரு அற்புதமான நெகிழ்வையும், எப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டாலும் வாழ்வதற்கு ஆதாரங்கள் இந்த உலகத்தில் உண்டு என்பதை ஆணித்தரமாக உணர்திருக்கும் இப்படத்தின் திரைக்கதை இயக்கத்துக்கு சொந்தமான பெண்கள் க்ளோரியாவுக்கும் பாவ்லா மண்டோசாவுக்கும் ஆயிரம் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.


இந்த படத்தை கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுடன் பாருங்கள்.


கருத்துகள் இல்லை: