தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/06/2011

திருக்குறள்


திருவள்ளுவரின் குறளை மெச்சுகிறார்களே ஒழிய காரியத்தில் அதோடு, அதற்கு நேர்விரோதமாக கீதையைப் போற்றுகிறார்கள்.


அறிவினால் உய்ந்துணர்ந்து ஒப்புக்கொள்ளக்கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துக்களைக் கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள்.


கம்பராமாயணத்தில் 100 பாட்டும், கந்தபுராணம் அல்லது பெரிய புராணத்தில் 200 பாட்டும் படிப்பதைக் காட்டிலும் திருக்குறளில் 10 பாட்டுப் படிப்பது எவ்வளவோ அறிவூட்ட வல்லது.


குறள் வெறும் ஒழுக்கத்தையும், வாழ்க்கைக்கு வேண்டிய அனுபவபூர்வமான பிரத்தியட்ச வழியையும் கொண்டதாகும்.


குறள் ஒரு அறிவுக் களஞ்சியம். பகுத்தறிவு மணிகளால் கோக்கப்பட்ட நூல்.


கூட்டுறவு


கூட்டுறவு வாழ்க்கை பிறருக்கு நாம் எவ்வாறு சகாயம் செய்வது, எவ்வாறு உதவி செய்வது என்பதை இலட்சியமாகக் கொண்டதேயாகம்.


நமது உடலில் பழைய தனிமைத் தத்துவ இரத்தைத்தை எடுத்துவிட்டுக் கூட்டுறவுத் தன்மை என்கிற இரத்தத்தைப் பாய்ச்ச வேண்டும்.


மனிதன் பகுத்தறிவுள்ள காரணத்தால்தான் தன் சமுதாயக் கூட்டு வாழ்க்கைக்கென்று பல திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறான். அத்திட்டங்களை நிறைவேற்றத் தனி மனிதனால் முடியாது. அதற்கு மற்றவர் உதவி இருந்தே தீர வேண்டியிருக்கிறது.


கூட்டுறவு என்கிற கொள்கை சரியான உயரிய முறையில் நம்நாட்டில் ஏற்பட்டுவிடுமானால் மக்கள் சமூகமே சஞ்சலமற்று, நாளைக்கு என்ன செய்வதென்ற ஏக்கமின்றி, திருப்தியுடன் நிம்மதியாக, குதூகலமாக வாழ வழி ஏற்பட்டுவிடும்.


நாம் செலவழிப்பதில் வகைதகையற்ற முறையில் வீண் செலவு செ ய்து வருகின்றோம். கூட்டுறவு முறையில் நமது வாழ்க்கையை நடத்தினால், இன்றைய நமது செலவில் எட்டில் ஒரு பாகம் தான் செலவு ஏற்படும். பாக்கி இன்னும் ஏழு பேருக்கு உதவக் கூடியதாயிருக்கும். நம் நாட்டு நிலைமைகளை மாற்றியமைக்காவிட்டால் நம் வாழ்வு விரைவில் அîதாகதியாகிவிடுமென்பது நிச்சயம்.


பொருளாதாரம்


கடவுளுக்குக்கு நன்றி செலுத்தும் முறையிலும் இன்னும் மேன்மேலும் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக விண்ணப்பம் போட்டு, லஞ்சம் செலுத்தும் முறையிலும் செல்வத்தைப் பாழாக்குகிறார்கள். இதன் பயனாகவே, இந்த நாட்டின் ஆண்டொன்றுக்குப் பல கோடி ரூபாய் பாழாவதைப் பார்க்கலாம்.


மக்களுக்குள்ள சமுதாயக் கொடுமை தீரவேண்டியது எவ்வளவு அவசியமோ அது போலவே, மக்களுக்குள்ள பொருளாதாரக் கொடுமையும் தீரவேண்டியது அவசியமாகும்.


நான் ஒரு நிமிடம் அரசனாய் இருந்தாலும் முதல் முதல் திருமணம் முதலிய பலவகைகளிலும் ஏற்படும் பொருள் விரயத்தைத் தடுக்கத் ¬க்குத் தண்டனை நிபந்தனையுடன் சட்டம் செய்வேன். பொருள் நட்டம் தான் இன்று இந்தியாவைப் பிடித்த பெரும் பிணி என்று சொல்லுவேன்.


செல்வம் என்பது உலகின் பொதுச்சொத்து, அதாவது மக்கள் அனைவரும் அனுபவிக்க உரிமையுள்ள சொந்தமான சொத்தாகும். அதை யார் உண்டாக்கியிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை, எவருக்கும் அது பொதுச்சொத்தாகும். அனுபவிக்கும் உரிமைபோல அதை அழியாமல் பாதுகாக்கவும் உரிமை உண்டு.


நாளுக்கு நாள் மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியப் பொறுப்பு ஆகிய தன்மைகள் இல்லாத போக்கு உச்ச நிலையடையும் வகையில் மனித சமுதாயம் சென்று கொண்டிருக்கிறது. சொத்துரிமை இல்லாமல் தடுப்பதே இதற்குப் பரிகாரமாகும்.


திருமணம்


மணமக்கள், உயிர் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பழகும் முறையைப்போல் நடந்துகொள்ள வேண்டும். எதிலும் தான் கணவன் என்ற ஆணவத்தை மணமகன் கொள்ளக்கூடாது. மணமகளும் தான் கணவனுக்கு அடிமைப் பொருள் - அடுப்பூதுவதற்கு என்றே வந்தவள் என்ற எண்ணமில்லாது பழக வேண்டும்.


மணமக்கள் சந்ததி உற்பத்தி செய்வதில் அவசரப்பட்டுவிடக் கூடாது. திருமணம் நடந்து குறைந்தது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னாவது குழந்தை பெறுவதாயின் மிக நல்லதாகும்.
ஒருவனுடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும்.


சுயமரியாதைத் திருமணம் என்பது அறிவு ஆராய்ச்சியின் காரணமாய் ஏற்பட்டது.


திருமணம் என்பது மணமக்களை மட்டும் பொறுத்ததல்ல. நாட்டின் முன்னேற்றத்திலும் தொடர்பு கொண்டிருக்கிறது.


அரசியல்


பிறவியிலும் பணத்திலும் உயர்வு தாழ்வு இல்லையானால் ஆளுவதிலும் ஆளப்படுவதிலும் உயர்வு தாழ்வு இல்லாமல் போய்விடுமே என்று அரசன் பயப்படுகிறான்.


நம் நாட்டுக்கு இன்று எவ்வித அரசியல் கிடைப்பதானாலும் அதில் சமூக சமத்துவமும், சமூக ஒற்றுமையும் உண்டாக்கக்கூடிய தன்மை இருக்க வேண்டும்.
பணம் உள்ளவனும் பணம் இல்லாதவனும் உலகத்தில் இருக்கும்வரை லஞ்சம், பிச்சை முதலானவைகள் ஒழியவே ஒழியாது.


இலஞ்சம் ஒழிய வேண்டுமானால், தனி உடைமைத் தர்மம் அழிந்து, ஒழிந்து, பொதுஉடைமை நிலை ஏற்பட்டால்தான் முடியும். அதில்லாதபடி இலஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுவது மனுதர்மம் பேசுவதேயாகும்.


சமுதாயத் துறைக்கு பாடுபடுவதுதான் உண்மையான அரசியல் தொண்டாகும்.


பொதுத்தொண்டு


தன்னலமற்ற பொதுத்தொண்டு செய்பவர்கள் - பிரதிபலன் கருதாது உழைக்கக் கூடியவர்கள் எண்ணிக்கை நாட்டில் மேன்மேலும் பெருகவேண்டும். அவர்களின் சீரிய குணங்கள் பொதுமக்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும். மனிதனாகப் பிறந்தவர் பொதுவாழ்வில் எப்படி நடந்துகொண்ண வேண்டுமென்பதற்கு அவர்களின் வாழ்க்கையே எடுத்துக்காட்டாக இருக்கும்.


பிறப்பதும் சாவதும் இயற்கை, ஆனால் மக்கள் பாராட்டுதலுக்கு உகந்தவகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்றமாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியமாற்ற வேண்டும்.


சுகபோகத்தினால் இன்பம் காண்பதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காண்பதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்காகவும் தொண்டுக்காகவும் நம் வாழ்வு இருக்க வேண்டும் என்று கருத வேண்டும்.


ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொருத்த மட்டில்தான் மானத்தையும், கவுரவத்தையும் கவனிக்க வேண்டும். பொதுநலம், பொதுத்தொண்டு என்று வந்துவிட்டால் அவை இரண்டையும் பார்க்கக்கூடாது.


மனிதன் திருடுகிறான், பொய் பேசுகின்றான், பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை, சாதியை விட்டுத் தள்ளுவதில்லை, ஆனால் சாதியைவிட்டுத் தள்ளிவிடப்படுகிறான், கல்யாணம் செய்தால், சாதியை விட்டுத் தள்ளிவிடப்படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம், நாணயம் எப்படிப்பட்டது பாருங்கள்.


தீண்டாமை


சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கமே பக்தியைவிட இன்றியமையாது. ஒழுக்கம் என்பது, சொல்லுகின்றபடியே நடப்பதும் நடந்தபடியே செல்லுவதுமாகும்.


பக்தி என்பது தனிச் சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து. பக்தி இல்லாவிட்டால், இழப்பில்லை ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்.


தொழிலாளி-முதலாளித்தன்மை முறையே இருக்கக் கூடாது. வேலை செய்பவர்கள் பங்காளியாக அல்லாமல் கூலிக்காரர்களாக இருப்பது அடிமைத்தனம்.


நாடு, மொழி, கடவுள், மதம், சாதி என்று எந்தபற்றுமின்றி, மானுடப் பற்றுடன் அறிவைக் கொண்டு தங்குதடையின்றி சிந்தித்துச் செயல்புரிவதே பகுத்தறிவாளர் கடமையும், பொறுப்புமாகும்.


தீண்டாமை என்பதே சாதி காரணமாக ஏற்பட்டதே தவிர, அதற்கு வேறு காரணமே ஆதாரமே இல்லை. சாதியை வைத்துக்கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பது சிறிதும் அறிவுடைமையாகாது.


பகுத்தறிவு


இராமாயணத்திலும், பாரத்திலும் ஆகாய விமானம் இருக்கிறது. ஆனால், அது மந்திர சக்தியால் ஓடியிருக்கிறது. ஆங்கில இலக்கியத்தில் ஆகாய விமானம் பற்றிய விளக்கம் இருக்கிறது. இது இயந்திர சக்தியால் ஓடுகிறது. நமக்கு எது வேண்டும்? மந்திர சக்தியா? இயந்திர சக்தியா?


அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் தேவைக்கும் பொருத்தமில்லாத காரியங்கள் பழக்கத்தின் பேராலோ, வழக்கத்தின் பேராலோ, தெய்வத்தின் பேராலே மதத்தின் பேராலே, சாதி வகுப்பின் பேராலோ மற்றெதன் பேராலே நடத்தப்படக் கூடாது.


கடவுள் சென்னது, மகான் சொன்னது, ரிஷி சென்னது, அவதார புருடர்கள் சொன்னது என்று பார்க்கின்றானே ஒழிய, தன்புத்தி என்ன சொல்லுகிறது என்று பார்ப்பதே இல்லை.
மூட நம்பிக்கைகளைப் பகுத்தறியாமல் பின்பற்றியதாலேயே உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வந்தது.


மாறுதலைக் கண்டு அஞ்சாமல், அறிவுடைமையோடும் ஆண்மையோடும் நின்று எதையும் நன்றாய் ஆராச்சி செய்து, காலத்திற்கும் அவசியத்திற்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளிக் கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவுடைய மனிதனின் இன்றியமையாத கடமையாகும்.


அறிவியல்


இயந்திரம் கூடாதென்றால் மனிதனுக்கு அறிவு விருத்தி கூடாது என்பதுதான் பொருளாகும்.


இன்று நாம் எவ்வளவு மாறுபாடு அடைந்துவிட்டோம். நம் வசதிகளும் வாழ்வும் ஏராளமாகப் பெருகிவிட்டன. அதற்குமுன் கட்டைவ ண்டிதான். இன்று ரயில், மோட்டார், ஆகாய விமானம் முதலிய நவீன வசதிகள், தீ உண்டாக்க சிக்கிமுக்கிக் கல்லை உராய்ந்தோம் , இன்று ஒரு பொத்தானை அழுத்தினால், ஆயிரக்கணக்கான மின்சார விளக்குகள் எரிகின்றன. வாழ்க்கையில் இவ்வளவு மாற்றமடைந்துள்ள நம் மக்களின் புத்திமட்டும் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலவே இருக்கிறதே!


கொஞ்ச காலத்திற்குமுன் கடவுளைப் பற்றிய கதைகளை அப்படியே, அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பிக்கொ ண்டிருந்தவர்கள் கூட, இப்பொழுது அப்படியே நம்புவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத தன்மையை மறைத்துக் கொண்டு, விஞ்ஞானத்தின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டு சிரமப்படுகிறார்கள்.


சக்கிமுக்கிக் கல்லால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து "எடிசன்" அப்புறம் படிப்படியாக முன்னேற்றமாகி இப்பொழுது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம்; எனவே மாற்றம் இயற்கையானது; அதைத் தடுக்க யாராலும் முடியாது.


மக்கள் பிறப்புக்கூட இனி அருமையாகத்தான் போய் விடும். அது போலவே சாவும் இனிக் குறைந்து விடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டு வாழ முடியும். யாரும் சராசரி என்று இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற மாட்டார்கள். ஆண், பெண் உறவுக்கும் பிள்ளைப் பேற்றுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும்.


இலக்கியம்


எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அதன் மதிப்பு, அந்த நூலின் பயனை அளவாகக் கொண்டதே ஒழிய, அதை ஆக்கியவனையோ, அதில் உள்ள தெய்வீகத் தன்மையையோ, இலக்கண இலக்கிய அளவையையோ, அமைப்பையோ, அற்புத தன்மையையோ அளவாகக் கொண்டது ஆகாது.


இலக்கியம் என்பது நாகரீகத்தை புகத்த வேண்டும். மக்களிடம் உயரிய குணங்களைப் புகுத்துவதாக இருக்க வேண்டும்.


இலக்கியம் எதற்காக? இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்? எப் படிப்பட்டதை இலக்கியம் என்று சொல்லலாம்? அவை எதற்காக இருக்க வேண்டும்? என்பது பற்றிச் சிந்தித்தால், மனிதனின் வாழ்க்கைக்கு உயிர் மட்டும் அல்லாமல் மனித சமுதாய வளர்ச்சிக் கும் ஏற்றதாக என்பது என் கருத்து.
நம் மக்களிடம் நிரம்பியிருக்கும் மடமை, மானமற்ற தன்மை, இழிநிலை, அறிவற்ற தன்மை இவைகளைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தின்மீதே "இலக்கிய மறுமலர்ச்சி" பற்றிச் சிந்திக்க வேண்டும்.


மதம், கடவுள் சம்பந்தமற்ற - யாவரும் பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞான த்தைப் பற்றிய இலக்கியம் ஆகியவைகள் மூலம்தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத்திரமல்லாமல், அதைக் கையாளும் மக்கள் ஞானம் உடையவர்களாவார்கள்.


கலைகள்


"தமிழ்நாட்டில் தமிழ்ப் பாட்டுக்கள் பாடப்பட வேண்டும்" தமிழில் இசை இருக்க வேண்டும்" என்று கூறுபவர்களை நையாண்டிசெய்து, அவ்வாறு கூறுவதும் கோருவதும் முட்டாள்தனம் என்று மேடைகள் மீதேறிப் பேசிடத் துணிவுகொண்ட கூட்டத்தினருக்கும் இத்தமிழ்நாடு இடங்கொடுத்துக் கொண்டிருக்கிறது.


நல்ல தமிழில் - இயற்கை எழில்களையும், தமிழரின் வீரத்தையும்,அன்பையும், மானமிக்க சமத்துவ வாழ்வினையும், வரலாற்றினையும், நேர்மையையும், நீதி நெறிகளையும், தமிழ்நாட்டுப் பற்றையும், மொழியின் ஆர்வத்தையும், ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் எடுத்துக்காட்டும் பாட்டுக்களையே பாடுமாறு செய்தல் வேண்டும்.


நாடகங்களிலே இரண்டு விதமுண்டு. ஒன்று பாட்டாக நடத்திக் காண்பிப்பது; மற்றொன்று வசன ரூபமாய் நடத்திக் காண்பது. வசன ரூபமாய்க் காண்பிப்பவைகளையே மக்கள் விரும்புகிறார்கள்.
தமிழர்களின் தன்மானத்தை வளர்ப்பதற்கும், தமிழர்களுக்கு அறிவூட்டுவதற்கும், தமிழர்கள் மனிதத் தன்மை அடைவதற்கும் பயன்படாத இயலோ, இசையோ நடிப்போ எதற்காக வேண்டும்? அது என்ன மொழியில் இருந்தால்தான் என்ன?


எப்படிப்பட்ட கலையும், ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் சிறிதும் பயன்படக்கூடாதோய் இருக்க வேண்டும்.


ஒழுக்கம்


பொதுவாழ்வின் பெயரால் ஒழுக்கக் கோடாக, லஞ்சகராக, திருடர்களாக நடப்பவர்களை ஒருநாளும் விட்டுவைக்கக் கூடாது.


ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழவேண்டுமானால் அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.


மனிதனிடம் சுலபத்தில் ஒழுக்கத்தைப் புகுத்த வேண்டுமானால், மாணவப் பருவத்தில்தான் முடியும்.


பிறருக்கு எந்தவிதத் தொல்லையும் தராத வாழ்வே ஒழுக்கம். இது எல்லாவித பேத நிலையும் ஒழித்த நிலையில்தான் வளர முடியும். ஒழுக்க அடிப்படையே இன்ப வாழ்வு.
ஒழுக்கம் என்பது தனக்கும் அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்ளுவதாகும்.


பெண் உரிமை


மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயொழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கும் அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை.


பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்வதைவிட, ஆண்டான் அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகம்.


இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்துவரும் வேதனையையும் இழிவையும், அடிமைத் தனத்தையும்விட அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள்.


கற்புக்காகக் கணவனின் திருகச் செயலையும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொடுமை ஒழிய வேண்டும்.


ஆண் எப்படி வேண்டுமானாலும் திரியலாம், எவ்வளவு மனைவிகளை வேண்டுமானாலும் மணக்கலாம், என்கின்ற முறையே, விபச்சாரம் என்னும் பிள்ளைகளைப் பெற்றெடுக்கின்றது.


இளைஞர்கள்


வாலிபர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாகபுத்தியும் மாத்திரம் இருந்தால் போதாது. நன்மை தீமையை அறியும் குணமும், சாத்தியம் அசாத்தியம் அறியும் குணமும், ஆய்ந்து ஓய்ந்து பார்க்கும் தன்மையும் இருந்தால் தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக்கூடியவர்கள் ஆவார்கள்.


வாலிபப் பருவம், அபாயகரமான பருவம், சுலபத்தில் நெருப்புப் பற்றிக் கொள்ளக்கூடிய பொருளைப் போல் மிகப் பத்திரமாய் காப்பாற்றப்படவேண்டிய பருவம்.
பித்தலாட்ட, மத சம்மந்தமான மூட நம்பிக்கைகள் அனைத்தையும் ஒழிக்க வாலிபர்கள் முனைய வேண்டும்.


வாலிபர்கள் சுயமாகச் சிந்திக்குமாறு பழகப்படுத்துவதேயில்லை, பகுத்தறிவை உபயோகிக்கச் சந்தர்ப்பமளிக்கப்படுவதே இல்லை அறிவுக்கும் அனுபவத்துக்கும் சம்பந்தப்படுத்திப் பழக்குவதேயில்லை. இத்தகைய நிலைமை மாறாதவரை, வாலிபர்கள் சுயமாகச் சிந்தித்துப் பார்த்து ஆராய்ந்து தாங்களே ஒரு முடிவுக்கு வருவது முடியாதோகும்.


இளைஞர்கள் குழந்தைகளுக்ச் சமமானவர்கள். சமீபத்தில் உள்ளதைப் பற்றுகிறவர்கள், பின்விளைவை அனுபவித்து அறியாதவர்கள். கண்ணோட்டம் விழுந்தால் பற்றி விடுபவர்கள். எழுச்சி என்பது எங்கொங்குக் காணப்படுகின்றதா, கூட்டம் குதூகலம் என்பவை எங்கெங்குக் காணப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் பற்றுவதும், அவை மறைந்தால் கைவிட்டுவிடுவதுமான குணமுடையவர்கள்.


பல்துறை


சிலர் சாமியைப் பார்த்தால் சாமி சக்தி ஓடிப்போவானேன்? சிலர் கோயிலுக்கு வந்தால் கோயிலும் சாமியும் தீட்டுப்ட்டுப் போவானேன்? சிலர் சாமியைத் தொட்டால் சாமி இறந்து போவானேன்? ஒரே பெயரும் உருவமும் உள்ள சாமிக்கு ஊருக்கு ஒரு விதமாய்ச் சக்திகள் ஏற்பட்டிருப்பானேன்?


காசி, பூரி, பண்டரிபுரம் முதலிய ஊர்களில் உள்ள சாமிகள் யார் தொட்டாலும் சாவதில்லை. அங்குக் கோயிலுக்கு போகிறவர்கள் எல்லாம் தங்களே நேரில் சாமியைத் தொட்டு தலையில் தண்ணீர்விட்டு மலர் போட்டுக் கும்பிடுகிறார்கள். அதே பெயருள்ள சாமி நமது தமிழ்நாட்டில் மட்டும் நாம் தொட்டால் செத்துப் போய்விடுகிறîதா, ஏன்? இப்படி சாமிகளின் சக்தியும் உயிரும் கோயில்களின் யோக்கியதையும் ஊருக்கு ஒரு விதமாய் இருப்பானேன்?


எவன் ஒருவன் கடன் வாங்காமல் வரவுக்கேற்ற மறையில் செலவு செய்து வருகிறானே அவன்தான் பிரபு ஆவான்.


நல்ல குடும்பம் எனப்படுவது வரவுக்கு மிஞ்சிச் செவு செய்யாமல் இருப்பதாகும். தமது வாழ்க்கைக்குச் செலவை வரவுக்கு உள்பட்டே அமைத்துக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட குடும்பந்தான் கண்ணியமான குடும்பம்.


சாதி ஒழிப்புக்கு இன்றைய அரசியல் சட்டம் இடந்தரவில்லை. அதை, அடிப்படை உரிமைக்கு விரோதம் என்கிறது. அதேபோல்தான் வகுப்புவாரி விகிதப் பேச்சும் பேசாதே அது வகுப்புத் துவேசம் என்கிறது. சாதி இருப்பது தவறல்லவாம். சாதிப்படி உரிமை கேட்டால் மட்டும் தவறு என்றால் இதைவிடப் பித்தலாட்டம் வேறு இருக்க முடியுமா?

படித்தததை பகிர்ந்துகொண்டேன் ....

கருத்துகள் இல்லை: