”பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்” (751)
”ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருளை விட சிறப்புடைய பொருள் வேறு இல்லை” என்கிறார் திருவள்ளுவர்.
மதிக்கத் தகாதவரையும் மதிக்க வைக்கும் அளவு பணம் சக்தி படைத்திருப்பது திருவள்ளுவர் காலத்திலேயே இருந்திருக்கிறது. அறநெறி, வாய்மை, நற்குணங்கள் போன்றவற்றிற்கு பிரதான இடம் தந்து வந்த அந்தக் காலத்திலேயே பணத்திற்கு அந்த அளவு மதிப்பு என்றால் இந்தக் காலத்தில் அதன் மகத்துவத்தைச் சொல்ல வேண்டியதேயில்லை.
பணமும் அதிகாரத்தைப் போல ஒரு போதை என்றே சொல்ல வேண்டும். எங்கு போய் சேர்கிறதோ அங்கே பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தி அதற்கு உண்டு. அந்த மாற்றங்கள் நல்லதாக இருப்பதை விட மோசமானதாக இருப்பது தான் அதிகம். அதை உணர பணம் வந்து சேரும் முன் மற்றும் பணம் வந்து சேர்ந்த பின் என்ற இருநிலைகளையும் நோக்கினால் போதும். நடை, உடை, பாவனை, பேச்சு எல்லாமே பெரும்பாலானோரிடம் மாறி விடுவதைக் காணலாம். சிலர் சட்டைப் பையில் சிறிது பணம் இருந்தால் போதும் நடையில் ஒரு துள்ளலும், பேச்சில் ஒரு பெரிய மனிதத் தனமும் கூடுதலாக சேர்வதை நாம் அடிக்கடி பார்க்கலாம். அந்தப் பணம் தீர்ந்து போனவுடன் அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார்கள்.
பணம் யாரையும் எப்படியும் மாற்ற வைக்கும் என்பதற்கு ,ஒரு கதை உண்டு. சம்பகா என்ற ஊரில் சுத்திரகர்ணா என்கிற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் சாப்பிட்டு பிச்சை பாத்திரத்தில் மீதம் வைத்த உணவை அவருடைய வீட்டில் இருந்த எலி உண்ணும். அது அந்த உணவை உண்டு விட்டு சும்மா இருப்பதில்லை. துள்ளித் துள்ளி குதித்து சேட்டைகள் செய்து ஆட்டமாடும் பழக்கத்தையும் வைத்திருந்தது.
சுத்திரகர்ணா யாருடனாவது பேசும் போது அந்த எலி அவர் இருக்கும் இடத்திற்கு வந்து அதிகமாக சேட்டை செய்யும் என்பதால் அவர் அடுத்தவரிடம் பேசும் போது அது தன் அருகே வந்து குதிக்காமல் இருக்க வேண்டி அடிக்கடி ஒரு பிரம்பால் தரையைத் தட்டிக் கொண்டே இருப்பார்.
ஒரு முறை அவருடைய நண்பர் வினகர்ணா என்பவர் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போதும் சுத்திரகர்ணா பிரம்பால் தரையைத் தட்டிக் கொண்டே இருக்க அவர் அதற்குக் காரணம் கேட்டார்.
சுத்திரகர்ணா சொன்னார். “தவறாக நினைக்க வேண்டாம். இந்த எலி தினமும் நான் மீதம் வைத்த உணவைத் தின்று விட்டு என் முன்னேயே துள்ளிக் குதித்து சேட்டைகள் செய்கிறது. என்னை சரியாகப் பேசக் கூட விடுவதில்லை. அதை அடக்கத்தான் அவ்வப்போது இப்படி பிரம்பால் தரையைத் தட்டுகிறேன்.”
வினகர்ணா மிகவும் அறிவுக் கூர்மை வாய்ந்தவர். எதுவும் காரணம் இல்லாமல் நடப்பதில்லை என்பதை உணர்ந்தவர். அவர் அந்த எலி துள்ளிக் குதிக்கும் இடத்தை உற்றுப் பார்த்து விட்டு அந்த இடத்தை தோண்டிப் பார்க்கச் சொன்னார்.
சுத்திரகர்ணாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் நண்பர் வற்புறுத்தவே அப்படியே செய்தார். தோண்டிய போது அந்த இடத்தில் ஒரு புதையல் புதைத்து வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டார். அந்தப் புதையலுக்கு அருகில் ஒரு பொந்தை உருவாக்கி அந்த எலி அதில் வசித்து வந்திருக்கிறது. பெருமளவு செல்வத்தின் அருகே வசிப்பதால் தான் அந்த எலி அந்த ஆட்டம் ஆடுகிறது என்பதை வினகர்ணா விளக்கினார். செல்வத்தின் அருகே வசிக்கும் எலியே அந்த ஆட்டம் போடும் போது செல்வத்தைப் பெற்ற மனிதனிடம் ஏற்படும் மாற்றங்கள் பற்றி சொல்ல வேண்டியதேயில்லை.
ஆரம்பத்தில் இருந்தே பணத்தை அதிகமாகப் பெற்றிருப்பவர்களை விட சில திடீர் பணக்காரர்கள் பெரிதும் மாறுவதை நாம் அதிகம் மாறலாம். அடிமட்டத்தில் இருந்த நாட்களை அடியோடு மறந்து தங்களை முதன்மைப் படுத்துவதில் அவர்கள் காட்டுகிற ஆர்வம் அப்பப்பா. புதிதாகக் கிடைத்த செல்வத்தினால் வாங்கிய பொருள்களை அவர்கள் மற்றவர்கள் பார்வைக்குக் காட்டுவதிலும், பழைய நாட்களின் நண்பர்கள் உறவுகளை விட்டு விலகி புதிய பணக்கார நண்பர்கள், உறவினர்களைத் தேடிப் போவதிலும் அவர்கள் மிகுந்த ஆவலாக இருப்பதையும் பார்க்கலாம்.
அப்படி மாற்றத்தை ஏற்படுத்த மிக முக்கிய காரணம் என்ன என்றால் பணத்திற்கு நமது சமூகத்தில் தரும் அபரிமிதமான இடம் என்றே சொல்ல வேண்டும். பணம் பத்தும் செய்வதையும், பாதாளம் வரை பாய்வதையும் கண்டு அதை மிக உயர்வாக நினைத்து பூஜிப்பதே காரணம்.
பணம் மிக முக்கியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் பணம் மட்டுமே முக்கியமானது என்பது முட்டாள்தனம். பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் மிக உயர்ந்தவர்கள், வெற்றியாளர்கள் என்று கொண்டாடுவதும், பணம் இல்லாதவர்கள் எல்லாம் தோல்வியாளர்கள், ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று அலட்சியப்படுத்துவதும் வடிகட்டிய முட்டாள்தனம். வாழ்ந்த காலத்தில் வறுமையிலேயே வாடிய காரல்மார்க்ஸ், பாரதியார் போன்ற எத்தனையோ சிந்தனையாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் எல்லாம் இன்றும் உலகத்தால் போற்றப்படுகிறார்கள். வரலாறு அவர்களை நினைவு வைத்திருக்கிறது. அதே நேரத்தில் அவர்கள் வாழ்ந்த காலத்தில் செல்வச்செழிப்பில் இருந்தவர்கள் எல்லாம் இருந்த சுவடு தெரியாமல் மறைந்து விட்டார்கள். இதில் யார் வெற்றியாளர்கள்?
எனவே பணத்திற்கு அதற்கு உரிய இடத்தை விட அதிகப்படியான இடம் தருவதும், அது இருக்கிறது என்ற காரணத்தால் தலைகால் புரியாமல் நடந்து கொள்வதும் நகைப்புக்குரியதே. ஓரிடத்தில் நில்லாது இடம் மாறிச் செல்லும் தன்மையினால் அது செல்வம் என்று செந்தமிழில் அழகாக அழைக்கப்படுகிறது.
இருப்பதை இழப்பதற்கும், இழந்ததைப் பெறுவதற்கும் அதிக காலம் தேவையில்லை. இந்த பேருண்மை தினந்தோறும் நம் முன்னால் பலர் அனுபவங்கள் மூலம் பறையறிவிக்கப் பட்டாலும் பலரும் உணரத் தவறி விடுகிறார்கள்.
ஒருவிதத்தில் பணமும், அதிகாரமும் ஒருவனை அடையாளம் காட்டும் அருமையான கருவிகள் என்றே சொல்ல வேண்டும். அவை சென்று சேரும் நபர்கள் நடந்து கொள்ளும் விதங்களிலேயே அவை அவர்களது உண்மையான தன்மைகள் இன்னதென்று தெளிவாகக் காட்டுகின்றன.
பணம் உங்கள் கையில் இருக்கிறதா, இல்லை பணத்தின் பிடியில் நீங்கள் இருக்கிறீர்களா என்பதைப் பொறுத்தே அதன் பயன்படும் தன்மை நிர்ணயிக்கப் படுகிறது. பணம் உங்கள் கையில் இருக்கும் போது, பணத்தின் எஜமானனாக நீங்கள் இருக்கும் போது அது உங்களுக்கும், உங்களைச் சார்ந்தவர்களுக்கும் மிக நல்ல முறையில் பயன்படும். உங்கள் மனிதத் தன்மையை நீங்கள் தக்க வைத்துக் கொண்டு அதை சிறந்த முறையில் பயன்படுத்தி அனுபவிப்பீர்கள். ஆனால் அதன் பிடியில் இருக்கும் போது, உங்கள் எஜமானனாக மாற அதை நீங்கள் அனுமதிக்கும் போது நீங்கள் அடிமையாகவும், கோமாளியாகவும் மாறி விடுவீர்கள். அது நல்ல விதத்தில் பயன்படாமல் உங்களைப் பாடாய் படுத்தும். உங்களை நிர்ணயிப்பதே அது தான் என்கிற ஒரு போலி சித்தாந்தத்தில் மூழ்கி போதையில் இருப்பவர்கள் நடந்து கொள்பவர்கள் போல நடந்து கொள்ள ஆரம்பித்து விடுவீர்கள். உங்கள் நடவடிக்கைகளின் வேடிக்கைத் தன்மை உங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். நீங்கள் அதன் பிடியில் இருந்து ஒரு வேளை நீங்கி மீண்டால் எத்தனையோ நல்ல விஷயங்களையும், நல்ல தன்மைகளையும் இழந்து விட்டிருப்பது அப்போது புரியும்.
எனவே பணத்தை மதியுங்கள். அதற்கு உங்கள் வாழ்க்கையில் உரிய இடத்தைக் கொடுங்கள். அது உங்கள் நல்ல தன்மைகளை அழித்து விடாதபடி அதற்கு எஜமானனாக இருந்து முறைப்படி பயன்படுத்துங்கள். பணம் மேலும் வந்து சேரச் சேர அது உங்கள் எஜமானனாக மாற மட்டும் அனுமதிக்காதீர்கள்.
1 கருத்து:
பணத்தை பற்றிய பதிவை படிக்கும் போது
rich dad,poor dad என்ற புத்தகம் நினைவுக்கு வருகிறது..
கருத்துரையிடுக