தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/22/2010

சந்தேகப் பிராணிகள் [நான் படித்த ஒன்று]

'வளர்ப்புப் பிராணிகள்' பற்றி என் அபிப்பிராயம் கேட்டார்கள்.என்னவென்று சொல்ல..

டிவியில் ஓடி வரும் குட்டி நாய் பார்த்தால் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. தெருவில் செயின் கட்டி நடந்து வரும் நாய் சகித நண்பர்களைப் பார்த்தால்.. 'சற்றே விலகி இரும் பிள்ளாய்' என்று ஒதுங்கிப் போகத் தோன்றுகிறது.

அது போகட்டும்.. எனக்குத் தெரிந்ததெல்லாம் "சந்தேகப் பிராணிகள்தான்" என்றேன்.

நண்பர் முறைத்தார்.என் அலுவலகத்தில் தனது மேஜையை பூட்டி விட்டு இழுத்து.. இழுத்து.. இழுத்து.. பார்க்கும் ஒரு நண்பரைப் பற்றி சொன்னேன். "அவர் இழுக்கிற வேகத்துல பூட்டியிருந்தாக் கூட டிராயரே வெளியே வந்திரும்போல.."

இதில் அவருக்கு நம்பிக்கை குறைந்து.. பூட்டியபின் அதன் சாவித் துவாரத்தை திருப்பி அமைப்பது.. ஒரு நூல் எடுத்து சுற்றி வைப்பது.. என்றெல்லாம் ஆரம்பித்தார்.

இன்னொரு நண்பர் ரொம்ப மும்முரமாய் எதையோ சந்தேகத்துடன் தேடிக் கொண்டிருந்தார்.பாவமாய் இருந்ததால் அருகில் போய் "என்ன காணோம்" என்றேன்.

"அதான் மறந்து போச்சு.. இருந்தாலும் தொடர்ந்து தேடிக் கொண்டே இருந்தால் ஞாபகம் வந்துரும்னு.."

இன்னொரு தம்பதிகள். இரண்டு பேருமே எங்கள் அலுவலகம்தான். வெவ்வேறு பகுதிகளில் பணி. மனைவி சற்று லேட்டாக வீடு திரும்பி விட்டால் போச்சு. வீட்டு வாசல் கதவைப் பூட்டி விடுவார். என்ன கெஞ்சினாலும் திறக்க மாட்டார்.

சக (பெண்) அலுவலகருக்குக் குழந்தை பிறந்திருந்தது. பெயர் சூட்டு விழாவிற்கு வற்புறுத்தி அழைத்துப் போனோம். வரும் வழியெல்லாம் அவர் புலம்பல். 'இன்னிக்கு என்ன ஆகுமோ'

அதே போலத்தான் நடந்தது.. கதவைப் பூட்டி கணவர் உள்ளே. பக்கத்து வீடுகளில் வேடிக்கை பார்க்க இவர் அவமானத்தில் நெளிய.. ஒருவழியாய் இவர் மன்னிப்பு கேட்டு 'இனிமேல் எங்கேயும் போக மாட்டேன்' என்று வாக்குறுதி கொடுத்தபின் கதவைத் திறந்து உள்ளே அனுமதிக்கப்பட்டார். மறு நாள் நாங்கள் மன்னிப்பு கேட்டோம் அவரிடம். வற்புறுத்தி அழைத்துப் போனதற்காக.

கிளைமாக்ஸ் என்னவென்றால்.. இருவரும் ஓய்வு பெற்று விட்டார்கள் இப்போது. கணவர் நடக்க முடியாமல் படுக்கை. மனைவி சிச்ரூஷை! எதற்கும் அவர் தயவில்!

இயற்கை தன் விதியை சுலபமாய் எழுதி வைத்திருக்கிறது.

எனக்கு ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவிற்கு மாற்றல் கிடைத்ததே ஒரு சந்தேகப் பிராணியால்தான்.

நானும் என் இம்மீடியட் பாஸும் ஏதோ ஒரு சம்பவத்தை பற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்தோம்.

எங்கள் பகுதி மேலாளர் உடனே என்னை மட்டும் அழைத்தார்.

"இப்ப என்னைப் பார்த்துத் தானே சிரிச்சே"

என்ன மறுத்தும் நம்பவில்லை. வேறு நபர்களும் எனக்கு ஒத்தாசைக்கு வரவில்லை. என் பாஸ் உள்பட.

திகைத்துப் போயிருந்தார்கள்.

எனக்கு அழுகையே வந்து விட்டது.

வடிவேலு காமெடி போல சரமாரியாக அவர் ஆங்கிலத்தில் திட்ட அதற்கு அர்த்தம் வேறு பாதி புரியாமல்.. 'யெஸ்.. யெஸ்.. நோ.. நோ..' என்று சமாளித்து முடிவில் சொல்லிவிட்டேன்.

"ஸார்.. இஃப் யூ டோண்ட் பிலீவ் மீ.. ஐ காண்ட் ஹெல்ப்.. யூ டு வாட் யூ விஷ்"

எனக்குக் கோபத்தில் சுமாராய் இங்க்லீஷ் வரும்!

உடனே என்னை மாற்றி விட்டார்கள், இவர் சொன்னதால்.

அதுவும் அடுத்த பகுதி மேலாளர் இதைக் கேள்விப்பட்டு.. ' நான் அவரை எடுத்துக்கறேன் ' என்று சொன்னாராம்.

அப்புறம் என்ன.. ஒரு சந்தேகப் பிராணியிடமிருந்து தப்பிய எனக்கு சகாக்கள் வந்து வாழ்த்தி விட்டு போனார்கள்.

ஆமா .. ஒரு சந்தேகம் ..

சந்தேகப் பிராணிகள் எல்லாம் எந்த காட்டைச் சேர்ந்தவை?!

கருத்துகள் இல்லை: