தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/22/2010

வாழறதும் சாவறதும் உன் வார்த்தையில...

கருத்த உடம்புக்காரி
கனிவான பேச்சுக்காரி
பொறுத்தமா நானிருக்க
புடிக்காம போனதென்ன

தெருவிலென்ன பாத்துபுட்டா
வாடிப்போன பூவாட்டம்
சிரிச்சிட்டே வந்தாலும்
சிடுமூஞ்சா மாத்திக்கிற

பொறுத்தமெலாம் பாத்துபுட்டு
புகளூரு சோசியனும்
சிறப்பா இருக்குதுன்னு
சிலிர்த்திடவே சொல்லிபுட்டான்.

வருகிற தைமாசம்
ஊரையெல்லாம் சேர்த்தழச்சி
திருமணத்த செஞ்சிடத்தான்
தினமும் நான் ஏங்கையில

வருத்தியென்னை நோவுசேரும்
வழியெனக்கு காட்டி நீயும்
வருத்தம் மட்டும் தந்துயென்ன
வாட்டத்தில விடுறியே

இரும்பான உடம்பிருந்தும்
இளகுன மனசெனக்கு
கரும்புனக்கு புரியலையா
காள மனம் தெரியலையா?

கண்ணுக்குள்ள உன்ன வெச்சி
காதலையும் பேசி பேசி
ஆணிமுத்தே உன்ன நானும்
அணுவணுவா நேசிக்கிறேன்

திண்ணையில தூங்கயில
தெருவோரம் போகையில
மண்ண விண்ண பாக்கையில
மாலையில காலையில

எல்லாமா நீயிருக்க
இது உனக்கு தெரியலையா
பொல்லாத உயிரதயும்
பொத்திவெச்சி காத்திருக்கேன்

நல்ல பதில் சொல்லிபுட்டா
நா வணங்கும் சாமிக்கு
எல்லா சிறப்பு செஞ்சி
ஊரெல்லாம் மெச்சும்படி

கலகலன்னு செஞ்சிடுவேன்
கவலையெல்லாம் விட்டிடுவேன்
நிலை குலஞ்ச எம்மனசும்
நெறைஞ்சி தெளிஞ்சிடுவேன்

வாழறதும் சாவறதும் உன்
வார்த்தையில தாயிருக்கு நல்
சொல்லதயும் சொல்லிநீயும்
சொர்க்கமத காட்டு புள்ள...

கருத்துகள் இல்லை: