தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/18/2010

வணங்குகிறேன் ஜோதிபாசு அவர்களை

கடந்த சில வருடங்களாக நீங்கள் அதிகம் செய்திகளில் வலம் வந்ததில்லை, காரணம் நீங்கள் ஓய்வுபெற்ற அரசியல்வாதி. முதுமையைக் காரணம் காட்டி ஓய்வு பெற்ற பெருமை கொண்டவர் நீங்கள். ஆனால் உங்களைப் பின்பற்ற ஓரிருவரைத் தவிர, வேறு அரசியல்வியாதிகளுக்கு இன்னும் அந்த மனப் பக்குவம் வரவில்லை...

உங்களைப் பற்றி ஆழமாக நான் ஏதும் வாசித்ததில்லை, ஆராய்ந்ததில்லை. நீங்கள் மிகச்சிறப்பாக ஆட்சி செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். எளிமை, சிறந்த நிர்வாகம், தொடர்ச்சியாக 23 ஆண்டுகள் முதல்வராக இருந்த பெருமை என ஒரு நேர்மையான தலைவருக்கான சிறந்த அடையாளமாகவே நீங்கள் இருந்திருக்கிறீர்கள். மிகச் சிறப்பாக பணியாற்றி... உண்மையான உதாரணமாக இருந்து மிக அற்புதமான ஒரு சரித்திரத்தை, தாக்கத்தை ஏற்படுத்தி விட்டுத்தான் வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறீர்கள்.

கடந்த சில நாட்களாக நீங்கள் மிகக்கடுமையான உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததினால் செய்திகளில் அவ்வப்போது உங்களைக் காண நேர்ந்தது. 95 வயதை கடந்த உங்கள் முதுமை, உங்களை உடல் நலக் குறைவிலிருந்து மீட்க உதவாது என்பதாகவும் மனதிற்கு பட்டது. ஒருவேளை நீங்கள் இறந்தால் உங்கள் கண்கள் தானமாக அளிக்கப்பட்டால் நன்றாக இருக்குமே என்றும் கூட நினைத்தேன். இன்று அது நடந்ததை நினைக்கும் போது, மனதிற்கு நிறைவாக இருக்கிறது.
இந்த தேசத்து மக்களுக்கு எத்தனையோ நல்லது செய்த நீங்கள், இறந்த பின்னும் கூட தொடர்ந்து இந்த தேசத்தை பார்த்து மகிழ உங்கள் இரண்டு கண்களை தானம் செய்துவிட்டதை அறியும் போது, நீங்கள் இருந்த திசை நோக்கி வணங்கத் தோன்றுகிறது.

நீங்கள் அளித்த கண்களிலிருந்து பெறப்பட்ட கருவிழிகள் பார்வையில்லாத இரண்டு நபர்களுக்கு தலா ஒன்று வீதம் அளிக்கப்படும் என்பதை அறிவேன். அந்த இரண்டு நபர்களின் வாழ்க்கையில் இருந்த இருட்டை முற்றிலும் உங்கள் விழிகள் துடைத்து எடுக்கும். நீங்கள் தானமாக அளித்த விழிகள் மூலம் அவர்கள் இன்னும் பற்பல ஆண்டுகள் வெளிச்சத்தை, வண்ணங்களை, இருளை, நிலாவை, நட்சத்திரங்களை இதையெல்லாம் தாண்டி சக மனிதர்களை, தன் உறவுகளை பார்த்து மகிழ முடியும்.

இன்னும் பல ஆண்டுகளுக்கு

நீங்கள் செய்த நல்ல காரியங்களும்...

நீங்கள் வகுத்த நல்ல கொள்கைகளும்...

வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்...

........கூடவே உங்கள் இரண்டு விழிகளும் மிகப் பிரகாசமாக.

குறிப்பு: ஜோதிபாசு அவர்களின் உடலும் பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்படவுள்ள செய்தி மனதை நெகிழச் செய்கிறது. இந்த தேசத்தில் தன்னுடைய உடலையும் தானமாகக் கொடுத்த தலைவர் இவராகத்தான் இருப்பார் என நினைக்கிறேன்.


மிகவும் கவனிக்கப்படவேண்டியவை :நான் கம்யூனிசவாதி அல்ல,

எனக்கு பெருமை : இவரைப் பற்றி நினைத்தவுடன் என் நினைவுக்கு வந்தது என் பள்ளி நாட்களில் நடந்த பொதுஅறிவு போட்டியில் எனது அணி வெற்றி பெற நான் சொன்ன கடைசி விடை இவரைப்பற்றி தான்

கருத்துகள் இல்லை: