தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/24/2010

மனிதம் (சொன்னது பாதி....)

தொலைக் காட்சி பார்த்துக் கொண்டிருந்தோம். செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது.
சாதாரணமாகவே செய்திச் சேனல்கள் உணர்ச்சியைத் தூண்டி விடுவதில் நல்ல சேவை புரிந்து வருகின்றன. ஆனாலும்...


பார்த்துக் கொண்டிருந்த என் நண்பன் ஒரு சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்தான். 1997 ஆம் ஆண்டு. மதுரையில் ஒரு கல்லூரி. பரீட்சை எழுத வேண்டி கல்லூரிக்கு சென்ற போது நடந்தது. பரீட்சை ஹால் மாடியில்...கல்லூரியைச் சேர்ந்த ஊழியர் அந்த ஹாலை திறக்க வேண்டி செல்ல, உடன் என் நண்பனும் சில மாணவர்களும்...அந்தக் கல்லூரியில் மராமத்துப் பணிகள் முடிந்திருந்த நேரம்...கதவின் மீது கூட பெய்ன்ட் அடித்து கண்ணாடிக் கதவு என்று உணர முடியாத படி செய்து வைத்திருந்த கதவைத் திறக்க முயன்ற அந்த ஊழியர் இரண்டு முறை தள்ளிப் பார்த்திருக்கிறார்...திறக்க வரவில்லை, ஏதோ தடுக்கிறது என்ற உடன் கதவை வலுவுடன் தள்ளி இருக்கிறார்.


என்ன நடந்தது என்று உணரும் முன்னே நடந்து விட்டது. என் நண்பன் பார்த்த காட்சி..... உள்ளே நுழைந்த நிலையில் அந்த ஊழியரின் கை. ரத்தம் நீரூற்று போல உயரமான அந்தக் கட்டிடத்தின் மேல் சுவர் வரை பீச்சி அடித்தது. நண்பன் சட்டை எல்லாம் கூட ரத்தம். கையை வெளியே இழுத்த அந்த ஊழியர் ரத்தக் களரியான தன் கையைப் பார்த்து மயக்கமானார். சாதாரண மனிதர்களுக்கே இருக்கக் கூடிய உள்ளுணர்வுடனும், மனிதாபிமானத்துடனும் நண்பனும் இன்னும் சிலரும் உடனடியாக கொஞ்சமும் தாமதம் செய்யாமல் சட்டையைக் கிழித்து ரத்தம் ஊற்றும் கையின் மீது கட்டி, மாடியிலிருந்து மயக்கமாகி விட்ட அவரைத் தூக்கி கொண்டு கீழே இறங்கி ஓடி வந்தனர். அப்போதுதான் ஒரு பேராசிரியர் வந்து இறங்கிய ஆட்டோவில் உடனடியாக அவரை ஏற்றி சாலையிலிருந்து தள்ளி இருக்கும் அந்தக் கல்லூரியிலிருந்து மெய்ன் ரோடை அடைந்து, விரைவாக அருகிலிருந்த ஹாஸ்பிடலில் சேர்த்தனர்.


அவரை கவனித்த மருத்துவர்கள் நிலைமை 'கிரிடிகல்' என்று கூறி ரத்தப் போக்கை எடுத்துக் காட்டி, பின்னர் காப்பாற்றியவுடன் சொன்னது..."இன்னும் ஒரு எட்டு பத்து நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தால் கூட ரத்தமிழந்ததால் இவரை காப்பாற்ற முடியாமல் போய் இருக்கும்.."


பிறகு நண்பன் அந்தப் பரீட்சையை எழுத மனமில்லாமல், முடியாமல், மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக எழுதி பாசும் ஆனது தனிக் கதை. ஆனால்,


மருத்துவத்துறை சேராத மனிதனாய் இருந்தும் நிலைமையின் அவசரம், விபரீதம் உணர்ந்து எதைப் பற்றியும் கவலைப் படாமல் செயலில் இறங்கிய மனிதத்தை என்னென்பது...


யாரையாவது அழைத்து உதவி செய்யுங்கள், வண்டி கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லாமல் தூக்கிக் கொண்டு ஓட வைத்த அறிவு...மனிதம்.


எந்த அதிகாரமும் இல்லாத சாதாரண பொது மக்களில் ஒருவனாய் இருந்தாலும் கிடைத்த வண்டியில் ஏற்றி, காலத்தின் அருமையை உணர்ந்த, வீணாக்காத புத்திசாலி நிமிடங்கள்...


உயிர் காக்கும் நிமிடங்கள்..


மனிதம். தங்க வரிகள்.

கருத்துகள் இல்லை: