தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

9/05/2010

மனிதசிலை வடித்த சிற்பிகள்


           ஆசிரியர் தினம் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான நாளை, செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
      ஒரு சமுதாயத்திற்கு ஆசிரியர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை, எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற சொல்லின் மூலம் நாம் உணரலாம். நமது முன்னோர்கள், ஆசிரியர்களுக்கு என்று சிறப்பானதொரு இடத்தை சமூகத்தில் கொடுத்திருக்கின்றனர். உண்மையில் தற்போது ஆசிரியர்கள் அந்த சிறப்பான இடத்திற்கு தகுதி உடையவர்களாக இருக்கிறார்களா? முன்பெல்லாம் ஆசிரியர்கள் பாடங்கள் மட்டும் கற்றுக் கொடுப்பதில்லை, வாழ்கையை நமக்கு வாழ கற்றுக்கொடுத்தார்கள், ஒழுக்கம், அன்பு, நெறி, மற்றும் பல விசயங்களை ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தனர். இன்றைய அவசர காலத்தில் இதை சொல்லித்தர அவர்களுக்கு நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை. மேலும் அவர்களுக்கே ஒழுக்கத்தையும் நெறியையும் நாம் கற்றுத்தர வேண்டியிருக்கிறது. நீங்கள் கேட்கக்கூடும் எல்லாத் துறையிலும் தான் இப்படி இருக்கிறது இவர்களை மட்டும் ஏன் குறை சொல்ல வேண்டும் என்று, உண்மை தான், ஆனால் ஆசிரியர்கள் ஒரு சமுதாயத்தின் தூண்கள், அவர்கள் நமக்குள் விதைப்பதை தான் நாம் அறுவடை செய்கிறோம்.
        இன்றைய கால கட்டத்தில் மதிப்பெண்களை முன்னிறுத்தியே பாடங்கள் போதிக்கப்படுகின்றன. ஒரு மாணவனுக்கு சுயமாக சிந்திக்க, கற்பனை சக்தியையும், அவனுடைய சிந்தனை  சக்தியை தூண்டவும் இன்றைய பாடத்திட்டங்களோ, ஆசிரியர்களோ உதவியாக இல்லை என்றே சொல்லவேண்டும். நிறைய பேர் சொல்லக் கேள்வி பட்டு இருக்கிறேன். ஆங்கிலேயர்கள் நமக்கு குமாஸ்தா வேலை செய்ய ஏற்ப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை, நாம் இன்னும் பின்பற்றிகொண்டிருக்கிறோம் என்று, உண்மை தான் இன்றைய நிலையில் ஆராய்ச்சிப் படிப்புகளில் யாரும் அக்கறைக் காட்டாமல் இருப்பதே இதற்கு சான்று. மந்தையில் ஒரு ஆடு போகும் போது பின்பற்றி செல்லும் ஆடுகள் போல போய்க் கொண்டிருக்கிறார்கள் இன்றைய மாணவர்கள். பணம் மட்டுமே வாழ்கையின் குறிக்கோளாகிப் போன இந்த காலத்தில் பெற்றோர்களும் இதற்கு உடந்தை. எப்போதும் படிப்பு படிப்பு, நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டும், உயர் படிப்பை முடித்து அமெரிக்காவிற்கு போக வேண்டும் இதான் இன்றைய பெற்றோர்களின் மற்றும் மாணவர்களின் குறிக்கோள்.
        ஒரு கால கட்டத்தில் தமிழகத்தில் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாகவே ஆசிரியர்களும், மாணவர்களும் இருந்தார்கள், தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும், மொழி ஒரு சமூகத்தின் அடையாளம் என்பதையும், அந்த அடையாளத்தை நாம் அடைய பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்கள். ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ், தமிழில் பள்ளிகளில் பேசினால் குழந்தைகள் தண்டிக்கப்படுகிறார்கள், குழந்தைகளுக்கு நம் மொழியினை பேசுவதையே சிறுமை என மறைமுகமாக போதிக்கின்றனர்.
         என் ஆசிரியர்கள் பற்றிய பசுமையான நினைவுகள் எனக்கு நிறைய இருக்கின்றன, என்னுடைய பள்ளி ஆசிரியர்  செந்தில் , அவர்கள் எங்கள் குடும்ப உறவாகவே மதிக்கப்படும் ஒரு நபர். எங்கள் வீட்டு விசேஷங்கள் எல்லாவற்றிலும் கலந்து கொள்வார்கள். நான் மதிக்கும் மனிதர்களில் குறிப்பிடத்தக்கவர். எனது தமிழாசிரியர்கள் எல்லோருமே அருமையான வழிகாட்டிகள், கணக்கு பாடம் எடுத்த கதிர்  ஆசிரயரை மறக்கவே முடியாது ஒரு விரிவுரையாளர் கூட அவ்வளவு நுட்பமாக பாடம் எடுக்க முடியாது, அற்புதமான மனிதர், நண்பர்களை போல நடத்துவார்கள்.
            மாதா, பிதா, குரு அப்புறம் தான் தெய்வம், அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு சிறப்பளிக்கும் ஆசிரியர் தினத்தின் மேன்மையை நம் இளைய சமுதாயதிற்கு  எடுத்து கூறுவோம். வருங்கால சமுதாயத்தை ஆசிரியர்கள் நன்முறையில் கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கையோடு இந்த இடுகையின் மூலம் ஆசிரிய பெருந்தகைகளுக்கு என் வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



கருத்துகள் இல்லை: