தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

9/03/2010

அறிவியலில் என் தமிழ்

         அறிவியல் அறிஞர்கள் என்று கூறியவுடனேயே நம் கண் முன் வந்து நிற்போர் நியூட்டனும் , ஐன்ஸ்டீனுமே . ஆனால் நம் தமிழ் நாட்டின் தமிழறிவியல் அறிஞர்பலர் உலகமக்களாலறியப் படவில்லை.

ஏன்? நம்மில் பலருக்குக் கூடத் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவே!

கபிலனின் தொலைநோக்கி கலிலியோவின் தொலைநோக்கி,
சாத்தனாரின் விளைவு சி.வி.இராமனின் விளைவு,
அருகர்தம் அணுக் கண்டுபிடிப்பு தால்தனின் அணுக் கண்டுபிடிப்பு,
ஔவையின் அணுமாதிரி அறிவியல் அறிஞர்தம் அணுமாதிரி,
வள்ளுவரின் மருத்துவவியல் இக்கால மருத்துவவியல் போன்ற பலவற்றை இங்கு எடுத்துக் கூறலாம்.
இவை அனைத்தையும் மட்டுமன்றி, இன்னும் இருப்பன எல்லாவற்றையும் வள்ளுவரால் கூற முடியும். ஆனால்
நம் தமிழ் அறிவியல் அறிஞர்தம் தனித்தனி ஈடுபாடுகள் கருதி அவை இங்கு தனித்தனியே கூறப்படுகின்றன.


என் அறிவுக்கு எட்டிய ஒரு சில...
"அணுவைக் கண்டுபிடித்தது யார்?" என்ற வினாவிற்கு 'இக்கால' பள்ளி மாணவனும், மெத்தப் படித்த மேதாவியும் தால்தன் (Dalton) என்றே கூறுவர். தால்தன் எனும் ஆசிரியர் தான் முதன்முதலில் அணுவைப் பற்றிய கருதுகோளைக் கூறியவர் என்று உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. 1803 ஆம் ஆண்டு அதாவது 18 ஆம் நூற்றாண்டில் அவர் கூறியது யாதெனில்,
"அனைத்துப் பொருட்களும் அணுக்கள் எனப்படும் மிகநுண்ணிய துகள்களால் ஆனவை; மேலும் அவை பிளவுறத்தக்கதல்ல!" என்பதேயாகும். ஆனால்,


"மொழிமுதல் காரணம் ஆம்அணுத் திரள் ஒலி எழுத்து அது முதல்சார் பெனஇருவகைத்தே"  (நன்னூல்-எழுத்து-58)
இதனைக் கூறியவர் பவணந்தி முனிவர் ஆவார்.
அதன் பொருள் யாதெனில் "மொழிக்கு அணுக்களின் கூட்டம் என்பதே முழுமுதற்காரணம்; அம்மொழியும் ஒலிவடிவம், வரிவடிவம் என இருவகைப்படும். எழுத்து மேலும் முதல், சார்பு எனவும் வகுக்கப்படும்." இவ்வாறு கூறிய வகையில் அவர் தான்தான் இதனைக் கூறியவன் எனப் பதியவில்லை! மற்றும்  "அனைத்துப் பொருட்களும் அணுக்களால் ஆக்கப்பட்டது என்று அருகர் கூறுவர்" அவ்வகையிலேதான் "மொழியும் அணுக்களால் ஆனது!" என்று அவர் கூறுகிறார். இதனை அவர் கூறியது பன்னிரெண்டாம் நூற்றாண்டில்.
இதுவே "பிறிதொரு படாஅன் தன்மதம் கொளல்" அதாவது 'பிறரது கொள்கையையே தானும் ஏற்றல்' என்று பொருளாம். ஆனால் இன்றைக்கு, பிறரது கண்டுபிடிப்புகளை தனது என்று திருடிக்கூறும் கயமைத்தனம் மேலோங்கிவிட்டது.அது சரி, பவணந்தியின் பங்கை அணுக் கொள்கையில் கூறியாகிவிட்டது. இதில் ஔவையாருக்கு என்னப் பங்கு என்றுதானே எண்ணுகிறீர்கள்? அணுவைப் பிளக்க முடியும் என்று அண்மையில் தான் கண்டுபிடித்தனர். ஆனால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திட்ட ஔவையார் திருவள்ளுவரைப் புகழ்கையில் பின்வருமாறு கூறுகிறார்.


"அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்."
(திருவள்ளுவமாலை) -சான்று


இது யாருக்கும் தோன்றிடாத ஒரு சிந்தனை! அணுவைப் பற்றி அறிந்திராத காலகட்டத்தில், அதனை உணர்ந்து, எண்ணத்தால் ஆய்ந்து, அதைப் பிளக்க முடியும் என்ற முடிவுக்கு வந்ததோடு அந்தச் சீமாட்டி விடவில்லை, அதனுள் ஏழு கடல்களைப் புகட்டி (?) அதனைத் திருக்குறளுக்கு ஒப்புமைப்படுத்தியுமுள்ளார் அவர். என்னே ஒரு அறிவியல் சிந்தனை!


{உங்கள் வாசிப்புக்கு முட்டுக்கட்டை போட்டதற்கு வருந்துகிறேன். இந்தத் தலைப்பில் பதிவுகள் தொடர்ந்து இடப்படும்! }


இப்பதிவு பலரைச் சென்றடைய மறக்காமல் உங்கள் கருத்தை இங்கே அளிக்கவும்!

கருத்துகள் இல்லை: