தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

9/17/2010

எங்கள் தேவதைக்கு ஒருகடிதம்

அனுப்புநர்
 பாசமுள்ள அண்ணன் 
நரகம் , பூமியிலிருந்து,

பெறுநர்
என் தங்கை
சொர்க்கம்,வானில்.

அன்பு தங்கைக்கு பாசமுள்ள? சகோதரன்  எழுதுவது...
        என்னவென்றால் இங்கு நான்,நம் அப்பா அம்மா அனைவரும் நலம் அது போல் அங்கு நீ நம் பாட்டைய்யா,அப்பத்தா,தாத்தா,மாமா அனைவர் நலம் அறிய ஆவல்.(இவர்களும் உன்னுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்)
         பிறந்து 25 நாளில் இறந்த நீ கண்டிப்பா சொர்கத்துக்குத்தான் சென்றிருப்பாய் என்ற நம்பிக்கையுடன் சொர்கத்திற்க்கு இக்கடிதத்தை அஞ்சலிடுகிறேன்.
         அளவற்ற தாய்பாசம்,அன்பான தந்தையின் நேசம் இவற்றை விட்டு சீக்கிரம் உன்னை தன்னோடு அழைத்துக்கொண்ட அந்த கடவுளை நான் சாடுகிறேன்.தீயை விட மோசமான பெண்ணிய தீண்டுதல்கள் புரியும் கயவர்களையும்,கூடவே இருந்து குழி பறிக்கும் பச்சோந்திகளையும்,காட்டிக்கொடுக்கும் கபடதாரிகளையும்,
தாயையும்,தந்தையயும் தவிக்கவிடும் நன்றிகெட்டவர்களையும்,சொத்துக்காக உடன்பிறந்தவர்களை சாகடிக்கும் பேராசைபிடித்த பேய்களையும்,கைம்பெண்ணை ஏசும் கருநாக்கு பாம்புகளையும்,என்போல் வெளிநாடு வந்திருக்கும் சகோதரர்களின் மனைவிகளை தவறான் நோக்கில் அணுகும் மண்ணுலிபாம்புகளையும் விட்டு விட்டு உன் போல் ஒன்றுமறியா பச்சிளம் குழந்தையை தன்னுடன் சேர்த்துக்கொள்ள எப்படி அந்த கடவுளுக்கு மனசு வந்தது?
           நான் தாய்மாமன் சீர் கொடுக்கமுடியவில்லை,சின்ன சின்ன செல்ல சண்டைகள் போடவும் கொடுத்துவைக்கவில்லை,நான் அணிந்த சட்டையை நீ அணிந்து நான் பார்க்கும் பாக்கியமில்லை,உனக்கு மாப்பிள்ளை பார்க்கும் சந்தர்ப்பமும் இல்லை,உனக்காக ஆபரணங்கள் சேர்க்கமுடியவில்லை,கல்லூரிக்கு ஆசையாய் என்னுடைய பைக்கில் கூட்டிப்போகும் சந்தர்ப்பம் இல்லை,எனக்கு வரப்போகும் மனைவிக்கு செல்லமாய் கிண்டல்களும், சண்டையும் போடும் நாத்தனார் இல்லை,உனக்கு பிறக்கும் குழந்தையை தோளில் போட்டு சுமக்கும் பாக்கியம் இல்லை,மச்சினன் உறவு கிடைக்கவில்லை,எல்லாத்துக்கும் மேல எனக்கு பாசம் காட்ட அப்பா அம்மாவ தவிர்த்து யாருமில்லை.
       ஒருவேளை போலி பாசங்கள் வேண்டாமென்று ஒதுங்கிவிட்டாயா? நாம் இருவர்நமக்கு ஒருவர் என்ற அரசு விளம்பரம் உனக்கு 22 வருடங்களுக்கு முன்பே தெரிந்துவிட்டதா? இல்லை கொடுக்கமுடியாத வரதட்ச்சணை கேட்க்கும் வரன்கள் உனக்கு கிடைத்து அது தந்தையால் கொடுக்க முடியாமல் போய்விடுமென்றெண்ணி மூச்சை அடக்கி கொண்டாயா?பெரியவளாகி பேருந்தில் சென்றால் இடிமன்னர்களின் இம்சை வருமென்றெண்ணி இடிந்துவிட்டாயா?கணவன் வீட்டுக்கு சென்றால் மாமனார் மாமியார் கொடுமைக்கு ஆளாக வேண்டுமென்றெண்ணிவிட்டாயா?
           நீயிருந்திருந்தால் எனக்காக என் காதலிக்கு தூது சென்றிருப்பாய் காதலும் ஜெயித்திருக்கும்.நீயிருந்திருந்தால் நான் சிகரெட் பிடிப்பதை அப்பாவிடம் கூறி அடிவாங்கியாவது சிகரெட் பிடிப்பதை நிறுத்தியிருப்பேன் இல்லையேல் உன் பாசத்திற்க்காகவாவது நிறுத்தியிருப்பேன்,நீயிருந்திருந்தால் எனக்கு தெரியாமல் என் டயரியையாவது படித்திருப்பாய்,அதிலிருக்கும் என் கவிதைகளுக்கு முதல் வாசகியாயிருப்பாய்.நீயிருந்திருந்தால் போலியில்லா பாசம் எனக்கு கிடைத்திருக்கும்,அன்பில்லாமல் அன்னிய தேசத்திலிருக்கும் என்னை அடிக்கடி தொலைபேசியில் விசாரிக்கும் அன்பு கிடைத்திருக்கும் உனக்காக நிறைய பரிசுப்பொருள்கள் வாங்கியிருப்பேன்.நீயிருந்திருந்தால் அண்டை அயலவர் உற்றார் உறவினர்களிடம் ஒத்தக்குரங்கு என்று பெயர் வாங்கியிருக்கமாட்டேன் அத்தனையும் வெறும் நனவாகவே போய்விட்டது.
           சகோதரி நான் உன்னை நினைக்கும் இவ்வேளையில் நீயும் என்னை நினைத்துகொண்டிருப்பாய் என்றெண்ணுகிறேன்,அங்கு உனக்கு எவ்வித தீங்கும் ஏற்படாமலிருக்கும் என்றெண்ணுகிறேன் ஏனென்றால் அங்கு இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களே.கண்டிப்பாக அங்கு வாழும் அன்னை தெரேசா,காந்திஜி,நேரு,ஆகியோரை நல்ம் விசாரித்ததாக கூறவும்.கண்டிப்பாக நான் சொர்கத்திற்க்கு வரும் பாக்கியம் எனக்கு இல்லை.மறுபிறவியென்று ஒன்று இருந்தால் சகோதரியாய் சந்தோசப்படவில்லை நீ ஆனால் நீ எனக்கு மகளாகவாவது பிறந்து நீயிழந்த சந்தோஷங்களை பெற்றுக்கொள்ள உன்னை மிகவும் அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
          இவண் உன் பாசத்திற்க்கும் நேசத்திற்க்குமுரிய சகோதரன்

குறிப்பு : இக்கடிதம் எதிர்பாரதவிதமாக படிக்க நேர்ந்தது ,அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவேன் என நம்பிக்கையடன் இதன் பதில் கடிதம் நாளைய பதிவில் .......

கருத்துகள் இல்லை: