தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

9/06/2010

அவசியமற்ற மொழி கலப்பு தமிழில்

         தமிழில் ஏராளமான வட மொழி சொற்கள் கலந்து மக்களிடையே புழக்கத்தில் இருந்து வருகின்றன.பல நூற்றாண்டு காலமாக தமிழ் மீது வட மொழி திணிப்பு நடந்தேறி வருவதால் தமிழ்ச்சொல் எது வடமொழிச்சொல் எது என பிரித்தறிவதே கடினமான ஒன்றாக உள்ளது.இதனால் சமத்கிருத சொற்களின்றி தமிழால் இயங்க முடியாது என்பது போன்று ஒரு பொய்த்தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.ஆனால் உண்மை அதுவன்று.
      சொல்வளமும் இலக்கிய வளமும் மிக்க தமிழால் தனித்து இயங்க முடியும்.'சீரிளமை திறம்'மிகுந்த தமிழுக்கு ஊன்றுகோல் எதுவும் தேவையில்லை. .உண்மையில் தமிழ்,தெலுங்கு போன்ற மொழிகளின் துணையின்றி சமத்கிருதம்தான் இயங்க முடியாது.ஏனென்றால் அது பேச்சு வழக்கொழிந்து இறந்து பட்ட மொழி.ஆனால் நம் தாய்த்தமிழோ இன்றும் வாழும் மொழி.கோடிக்கணக்கான மக்களால் பேசப்படும் தமிழ் என்றும் அழியாது.தமிழ்த்தாயின் புதல்வர்கள் அதை அழியவும் விடமாட்டார்கள். வடமொழிச்சொற்கள் தமிழில் இருந்து அப்புறப்படுத்த பட வேண்டும் என்று நாம் கோருவது மொழி வெறியின் பாற்பட்டது என குற்றச்சாட்டு எழலாம்.
       இல்லை,நிச்சயமாக இல்லை.மொழிப்பற்று, இனத்தின் மீது கொண்ட பற்று காரணமாகவே நாம் இவ்வாறு கோருகிறோம்.மொழி என்பது வெறுமனே கருத்துக்களை பரிமாறி கொள்வதற்கான கருவி மட்டுமல்ல.அம்மொழி பேசும் மக்களின் வரலாற்று மற்றும் பண்பாட்டு பெட்டகம் அது.ஒரு இனம் எத்தகைய பண்பாடு,கலாச்சாரத்தை பின்பற்றுகிறது என்பது அவ்வினம் பேசும் மொழியை பொறுத்தே அமைகிறது.ஒரு மொழியின் மீது பிறிதொரு மொழியின் தாக்கம் என்பது தவிர்க்க முடியாத வகையில் பண்பாட்டு கலாச்சார விழுமியங்களையும் சேர்த்தே கொண்டு வருகிறது.அந்த அடிப்படையில் பார்க்கும்போது வடமொழியின் தாக்கம் தமிழ் சமூகத்திற்கு மிகுந்த தீங்கு இழைத்திருக்கிறது. ஜோஷ்யம், ஜாதகம்.அதிர்ஷ்டம்,துரதிர்ஷ்டம்,அஷ்டமி, நவமி,வாஸ்து இந்த சொற்களை பாருங்கள் அத்தனையும் வடமொழி.அத்தனையும் மூடநம்பிக்கைகள் எனவே வட மொழி என்பது அழுக்குகளை தமிழ் மீது அள்ளி இறைத்து சென்ற சூறைக்காற்று. இன்று நம் முன் உள்ள பணி அந்த அழுக்குகளை நீக்கி தாய்த்தமிழை தூய்மைப் படுத்துவதே.வட மொழி எதிர்ப்புக்கு தொல்காப்பியர் மறைமலை அடிகள் பேராசிரியர்.ம.நன்னன் என நீண்ட பாரம்பரியம் உண்டு.அந்த வரிசையில் நாமும் இணைவோம் பி.கு.ஜோஷ்யம் வாஸ்து இவையெல்லாம் அறிவியலின் பாற்பட்டது,அவற்றை பின்பற்றலாம் என்றொரு வாதம் எழலாம்.இல்லை,
அவை முற்றிலும் அறிவியலுக்கு முரணானது என்று நிறுவும் வகையில் தனிப்பதிவு ஒன்றை விரைவில் இடவிருக்கிறோம்.நன்றி மீண்டும் சந்திப்போம். .

கருத்துகள் இல்லை: