தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

3/02/2010

படித்ததில் பிடித்த‌து

பிரவாகத் தமிழும்.. திராவிட கழகங்களும்.. இன்று???

படித்ததில் பிடித்த‌து

அவ்வபோது பலரின் பழையப் பதிவுகளை மேயும்போது ஆச்சிரியம் தரும் வகையில் பல நல்ல பதிவுகளை படிக்க நேரிடுகிறது. பதிவர் சந்திப்பன்று என்னை சந்தித்த நண்பர் ஒருவருடன் பேசியபோது நிறைய பேர் நிறைய எழுதுவதால் பல நல்ல பதிவுகளை தவறவிடுவதாக சொல்லியிருந்தார். அப்படி என் கண்ணில் படும் பதிவுகளுக்கு சுட்டிக் கொடுத்தால் படிப்பவர்களும் மகிழ்ச்சிக் கொள்வார்கள், எனக்கும் ஒரு நாளுக்கான மேட்டர் கிடைத்துவிடும். இனி,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழைமையும் இப்படி நான் படித்து ரசித்த பழைய பதிவுகளில் ஒன்று பதிவிடலாம் என்றிருக்கிறேன்.

************************************************

"பேஷா" பண்ணிடலாம், "ஷரத்து" வாபஸ், மெட்ராஸ் மாகணம்...என்று இருந்த ஆட்சிமொழியையும் மக்களையும்.. தங்கள் பிரவாகத் தமிழால்,துள்ளல் மொழியால், இலக்கியத்தால்,எதுகை மோனையால் தன்பால் வசீகரித்து திருப்பிக் கொண்டது அன்றைய பேச்சாற்றல். ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தது அவர்களின் தமிழ். அந்தத் துள்ளல் தமிழில் அவர்களின் கொள்கை முழக்கங்கள் மக்களை எளிதாக சென்றடைந்தது. தந்தை பெரியார் விதைத்த விதை வேர்விட்டு பெருமரமாகி உருமாறியிருக்கிறது..

அறிஞர் அண்ணா :

"மாதமோ சித்திரை,
மணியோ பத்தரை,உங்கள்
தழுவுவதோ நித்திரை..
மறக்காமல் இடுங்கள்
எங்களுக்கு முத்திரை.."
இந்த எதுகை மோனை அந்த பொதுக்கூட்ட தாமத்தையும் மறக்கடித்து மக்களையும் கிரங்கடித்தது... தமிழ் நாட்டின் பெர்னாட் ஷா என வர்ணிக்கப்பட்ட அண்ணாவின் தமிழ் பேச்சில் மயங்காதார் யாரும் இல்லை..

கலைஞர் கருணாநிதி :

எம்ஜியார் முதலைமைச்சராக இருந்த பொழுது சட்டசபை விவாதத்தில் கூச்சல் எழுந்தவுடன் "உங்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்" என்று எம்ஜியார் சொன்ன மறு நிமிடம் எதிர்கட்சி தலைவராய் இருந்த கலைஞர் எழுந்து.."இதற்கு முன் தமிழ் நாட்டை "ஆண்டவன்" என்று என்னை சொல்வாதல்.. நான் இருக்கிறேன் காப்பாற்ற" என்று கூறியதை கேட்டு மொத்த சபையும் ரசித்தது..
இப்படி சிலேடை பேச்சானாலும் சரி,இலக்கியமானாலும் சரி தமிழ் தங்குதடையில்லாமல் தங்கிய இடம் கலைஞரின் நாக்கு.. இன்றுவரை மேடைப்பேச்சில் கோலேட்சும் இவரின் அன்றைய தமிழ் மேடைப் பேச்சு இளைஞர்களின் மூச்சாகவே இருந்தது..இவரின் பேச்சால் திமுக விலும் இவரின் தமிழ் வசனம் கேட்டு திரைத்துறைக்கும் வந்தவர்கள் ஏராளம்.

காளிமுத்து :

"மயிலுக்கு தோகை கன‌க்கிறது என்று குயிலுக்கு என்ன கவலை?" என்று இவர் தமிழ் பேச ஆரம்பித்தால் அக்கம் பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் இருந்ததெல்லாம் கூட்டம் சேர்ந்துவிடும்..
உலகத்தமிழ் மாநாட்டில் இவர் மூச்சுவிடாமல் பேசிய பேச்சைக் கேட்டு மூர்ச்சையாய்போய் நின்றது மாநாடு. இந்தியாவில் பேசப்படும் மொழிகளை இவர் பட்டியல் இட்டதை பார்த்து நெடுநேரம் தட்டிக்கொண்டிருந்தது முதல்வர் எம்ஜிஆரின் கரங்கள்.. "கருவாடு மீனாகாது,கறந்த பால் மடி புகாது" இன்றும் வழக்கில் உள்ள இவரது வார்த்தைகள்.

நாவலர் :

எதைப்பற்றி பேசினாலும் அதன் முழு விபரத்தையும் கொடுக்கும் பாங்கு நாவலரின் தமிழ். நிதானமாக ஆனால் அழுத்தமாக இவர் பதிந்த பேச்சுக்கள் இவரை " நாவலர்" ஆக்கியது.

வைகோ :

"ஏதென்ஸ் வீதியிலே... என்று ஆரம்பித்து.. பின் கர்ணனின் நட்பைத்தொட்டு,கலைஞரின் தலைமை பற்றி..என்று இவரின் தமிழ், தமிழ் நாட்டையே வசப்படுத்தி இருந்தது ஒரு காலம்.இவரின் ஆவேசப் பேச்சினால் உணர்ச்சிவயப்படாதவர் மிகக் குறைவு என்றே சொல்லலாம்.. ஆழ்ந்த இலக்கிய அறிவும்,வரலாற்று செய்திகளையும் இணைத்து இவர் முழங்கினால் மணிக்கணக்கில் கூட்டம் அசையாமல் கேட்டுக் கொண்டிருக்கும்.

மேலும் அன்றைய வட்ட,மாவட்ட, நகர பதவிகளில் இருந்தவர்களின் மேடைப்பேச்சும் கட்டிப் போட்டது.. ஏனெனில் அவர்கள் தங்களின் தலைவர்களை பின்பற்றி பேசியதால்...
ஆனால் இன்று...
மாணவரணியையோ..இளைஞரணியையோ தங்களின் தமிழால் கட்டிப்போட இன்று அடுத்த கட்ட தலைவர்கள் யாரும் இல்லை என்பதே உண்மை...

ஸ்டாலின் : ஓரளவு பேசினாலும் பெரிய ஈர்ப்பு . வரலாற்று குறிப்புகளில் தவறுகள் தென்படும்

கனிமொழி : இவரின் எழுத்தில் இருக்கும் ஆழம் பேச்சில் இல்லை..

தயாநிதி: இவர் தமிழ் பேசினால் அஜித் ஐஸ் விற்பது போல் இருக்கிறது..

விஜயகாந்த் : தமிள் அல்லது தமில் பேசுகிறார்.

T.ராஜேந்தர் : இவர் தமிழ்.. விடுங்க..உங்களுக்குத்தான் தெரியுமே..

இப்படி தமிழ் பேச்சு ஆறாகத் தொடங்கி இன்று வாய்க்கால் அளவு கூட இல்லை..

இன்றும் திருச்சி சிவா,கம்பம் செல்வேந்திரன் போன்ற நல்ல பேச்சாளர்கள் கழகத்தில் இருக்கிறார்கள்.. தமிழச்சி தங்கபாண்டியனின் தமிழும் அவையைக் கட்டிப்போடும் திறன் கொண்டதே... தலைவர்களும் அடுத்த கட்ட தலைமுறையில் இலக்கிய பிரவாக மேடைப்பேச்சிற்கு முக்கியதுவம் கொடுத்து வாய்ப்பளிக்கவில்லை..
நல்ல தமிழையும் இலக்கியத்தமிழையும்,எதுகைமோனையை கேட்பதற்கும் ரசிப்பதற்கும் மக்கள் காத்திருக்கிறார்கள்.. ஏனெனில்

"கல் தோன்றி மண்தோன்றா காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த மொழி"

கருத்துகள் இல்லை: