தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

3/24/2010

உங்களை எங்கேயோ பார்த்தது போல இருக்குதே….?



இதே கேள்வியை நாம் ஒவ்வொருவரும் யாரையாவது பார்த்து, எப்போதாவது கேட்டிருப்போம்.

ஒன்று அவர்களை நாம் முன்பே எங்காவது பார்த்து மறந்திருப்போம்..
இல்லையென்றால் நாம் பழகிய ஒருவரின் முகச்சாயலை அவர்ககொண்டிருப்பார்..!!

நாம் பழகிய ஒருவரின் முகம் நம் மனதில் ஆழப்பதிந்துவிடும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்காது.

என்னுடன் இளங்கலை படித்த நண்பர் ஒருவர் படித்துப் பிரிந்து 5 ஆண்டுகள் கழித்து ஒரு முறை அலைபேசியில் தொடர்பு கொண்டார். ஹலோ என்று சொன்னவுடனேயே அவரின் பெயரை அழைத்து நீங்கள் தானே என்றேன். வியந்து போய்விட்டார்.

வியந்துபோனது அவர் மட்டுமல்ல!
நானும் தான் எப்படி என்னால் முடிந்தது?

நன்கு பழகிய அவரின் குரலை என்மனம் எங்கோ ஆழப்பதிந்து வைத்திருக்கிறது என்பதை அப்போது நான் உணர்ந்து கொண்டேன்.

இப்படி நம் ஆழ்மனப்பதிவுகள் ஆயிரம் ஆயிரம் வியப்புகளை உள்ளடக்கிக்கொண்டு அமைதியாக இருக்கின்றன.

ஒருகதை,

பூனைகள் சேர்ந்து மாநாடு நடத்தின. பல நாடுகளிலும் இருந்து நிறைய பூனைகள் வந்திருந்தன. கூட்டம் தொடங்கியது.

தலைமை தாங்கிய பூனை மேடையில் தோன்றி பேசியது.

நாமெல்லாம் முழு நம்பிக்கையோடு இறைவனை வேண்டினால் நிச்சயமாக “எலிகள் மழையாகப் பொழியும்“ என்றது.

அவ்வளவு தான் எல்லா பூனைகளும் சேர்ந்து கைதட்டி ஆரவாரம் செய்தன.

இதனைப் பார்த்துக்கொண்டே அந்த வழியில் சென்ற நாய் ஒன்று சிரித்துக்கொண்டே சென்றது..

என்ன இது முட்டாள்த்தனம்?

என்றாவது எலிமழை பொழிந்திருக்கிறதா?

இவ்வளவு முட்டாள்தனம் நிறந்தவையாகப் பூனைகள் இருகும் என நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை!

நம்பிக்கையோடு வேண்டினால் ஒருவேளை “எலும்பு மழை“ வேண்டுமானால் பொழியலாம்!

என்று மனதில் எண்ணியவாறு சென்றது நாய்.

என்றோ எங்கோ படித்த இந்தக் கதையை பலசூழல்களில் நான் அடிக்கடி நினைத்துக்கொள்வதுண்டு.

ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு சிந்தனைகள், நம்பிக்கைகள் அவரவர்களும் அதனை முழுவதும் நம்புகிறார்கள்.


மனதில் என்ன உள்ளதோ அதுதான் கனவில் மட்டுமல்ல, நினைவிலும் வரும்!

பசியோடு இருக்கும் ஒருவனுக்கு காணும் பொருளெல்லாம் உணவாகத் தெரியும். காரணம் அவன் மனமெங்கும் பசி நிறைந்திருக்கிறது.

பூனைகளின் நினைவில் எப்போதும் எலிகள் தான்!
நாய்களின் மனதில் எப்போதும் எலும்பு தான்!

அதுபோல ஒவ்வொருவர் மனதிலும் ஏதோ ஒன்று நிறைந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: