தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

3/30/2010

தமிழா தமிழா ...


தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் . தமிழ் என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதே எவ்வளவு இனிமையாக உள்ளது . இப்போது எல்லோருக்கும் பிற மொழி மோகங்கள் நம்மை ஆர்ப்பரிக்க தொடங்கியுள்ளது . தமிழில் எத்தனை நூல்கள் உள்ளது . அதனை பாதுகாக்கிறோமா என்றால் இல்லையெனலாம் . தமிழனாக இருந்தால் மட்டும் போதாது . தமிழை பாதுகாக்க வேண்டும் . தமிழில் உள்ள நூல்களை பாதுகாக்க நம்மால் ஆன சிறு முயற்சி மேற்கொள்ள வேண்டும் .

தமிழ் இலக்கிய நூல்களை பத்தி நாம் அறிந்து கொள்வதற்கு நான் இங்கே தொகுத்து தந்துள்ளேன் .

தமிழ் இலக்கியம் பலவகைப்படும். அவை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியம், தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தம் , மருத்துவ நூல்கள் எனப்படும் சித்தர் எழுதிய இலக்கிய நூல்கள் என விரிவடைந்து இலக்கிய வகையின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது . காலத்துக்கு ஏற்ப கருத்துகள் வளர்ந்து கொண்டே வருவதைப் போல இலக்கிய வளர்ச்சியும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தையே தமிழ் இலக்கியத்தில் சங்க காலம் என்று குறிப்பிடுகிறார்கள்.

தொன்மையான தமிழ் மொழிகளின் மிக மூத்த நூல் அகத்தியர் எழுதிய அகத்தியம் என்று கூறப்படுகிறது.

இலக்கியம் தோன்றியபிறகே அதனை ஒழுங்குபடுத்த இலக்கணம் தோன்றி இருக்கமுடியும் என்பதால், அகத்தியத்திற்குமுன்னரே தமிழில் சிறப்பான இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும் .

இப்போது நமக்குக் கிடைத்திருக்கிற மூத்த தமிழ் நூல் தொல்காப்பியமே. இதுவும் இலக்கண நூல்தான்.

[ கி.மு.300 - கி.பி 100. இந்தக் காலக்கட்டத்தில் தமிழ்ச் சங்கம் அமைத்து தமிழ் வளர்க்க முற்பட்டனர் தமிழ் அறிஞர்கள். அப்போது தோன்றியவையே சங்கம் இலக்கியம் என்று வழங்கப்படுகிறது.அதோடு
இக்காலக் கட்டம் கடைச் சங்ககாலம் எனப்படுகிறது]

சங்க இலக்கியம்

சங்க இலக்கியத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. பத்துப் பாட்டு.
2. எட்டு தொகை.
3. பதினெண் கீழ்க்கணக்கு.

பத்துப் பாட்டு

இவற்றில் பத்துப்பாட்டு ஒரு தனிப்பட்ட நூல் அல்ல. பல நூல்களின் தொகுப்பு.

மொத்தம் எட்டுப் புலவர்கள் எழுதிய பாடல்கள் பத்தைத் தொகுத்து பத்துப்பாட்டு என்று கூறினர். இவற்றில் ஒவ்வொரு பாட்டும், தனி நூல் என்று சொல்லத்தக்க அளவில் முழுமையானவை. இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் 100 அடிகளுக்கு மேலானவை. 500 அடிகள் வரை கூட சில போகும், சில பத்துப்பாடல்கள் .

முருகு, பொருநாறு, பான் இரண்டு, முல்லை, பெருகு, வளமதுரைக் காஞ்சி,
மருவினிய கோலநெடுநல் வாடை, கோல் குறிஞ்சி, பட்டினப் பாலை,
கடாத்தொடும் பத்து

அதாவது,

திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை,
பொருநாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை,
குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்....
ஆகிய 10 நூட்கள் 10 பாட்டு.

எட்டுத் தொகை.

எட்டுத் தொகை நூற்களும், பல புலவர்கள் இயற்றிய பாடல்களின் தொகுப்பே, ஆனால், இவற்றுள் எந்தப் பாடலையும் ஒரு தனி நூலாகக் குறிப்பிடமுடியாது. 100 அடிகளுக்குக் கீழ்ப்பட்ட இந்த
எட்டுத் தொகை நூலக்ளை ஒரு பழம்பாடல் இப்படி விவரிக்கிறது.

நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐயகுறுநூறு பதிற்றுப்பத்து, பரிபாடல்
கலித்தொகை, அகநானூறு, புறநானூறு...., ஆகியவை இந்த 8 நூல்கள் ஆகும்.

பதினெண் கீழ்க்கணக்கு.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர்கள் என்போர் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து பாண்டியர்களை வென்று மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். இவர்கள் காலத்தில்தான் முச்சங்கத்தின் கடைசியான கடைச்சங்கம் அழிந்தது. தமிழர்களின் கலை,
கலாச்சாரம், நாகரிகம் நசிய தலைப்பட்டது. தமிழகத்தின் இருண்ட காலம் என்பார்கள்.
இதனை 'சங்கம் மருவிய காலம்' என்பார்கள்.அப்போது தோன்றிய நூல்கள் பதினெண்கீழ்க் கணக்கு என்று அழைக்கப்படுகிறது.

ஐந்தோ அல்லது அதற்கு கீழோ அடிகளைக் கொண்டு அமையப் பெற்றவை கீழ்க்கணக்கு நூல். அதற்கு மேற்பட்ட அடிகளைக் கொண்டவை மேற்கணக்கு நூலகள் . மேற்கணக்கு நூல்களைக் கொண்டவை மேற்கணக்கு நூல்கள்.(பத்துப்பாடல், எட்டுத்தொகை)

அறம்,பொருள், இன்பம் ஆகிய மூன்றையோ அல்லது மூன்றில் ஒன்றையோ விளக்கி வெண்பாவில் எழுதப்படுவது கீழ்க் கணக்கு நூல்கள்.
நாலடி, நான்மணி,நாநாற்பது ஐந்திணை, முப்பால்,கடுகம், கோவை. பழமொழி -மாமூலம் இன்னிலை சொல் காஞ்சியோடு ஏலாதி என்பதும் கைநீலையுமாம் கீழ்க்கணக்கு.

(பதிணெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளைச் சொல்வது உண்டு.
அது பற்றிய குறிப்பைக் காணவில்லை.ஒருவேளை முப்பால் எனச் சொல்லப்
பட்டிருப்பதால் இருக்கலாம்?)

நாலடியார், நான்மணிக் கடிகை, இன்னா நாற்பது, இனிவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி
முதுமொழிக் காஞ்சி, முப்பால், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம் ஆகிய 11
அற ஒழுக்க நூல்களும்,

ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது, களவழி நாற்பது ஆகிய 7 அகத்துறை (காதல்) நூல்களும் சேர்த்து 18 நூல்கள் பதினென்கீழ்க்கணக்கு நூல்களாக வருகின்றன. இவையே சங்க கால நூற்கள்.

செய்யுள் இலக்கியம்

காகிதமும் அச்சு இயந்திரமும் இல்லாத காலத்தில், ஓலைச் சுவடிகளில் எழுதிப் படிப்பதும், சுவடிகளைப் பேணிக் காப்பதும் கடினமானதாக இருந்தது. செய்யுள் வடிவங்களைப் பெற்ற கலை இலக்கியங்கள் எளிதில் மனனம் செய்வதற்கும் நினைவில் வைத்துக் கொள்வதற்கும் ஏற்றதாக, பயனுடையதாக விளங்கியது. எத்தகைய செய்திகளானாலும் அவற்றைக் கல்லிலோ, செப்புப் பட்டயங்களிலோ ஓலைச் சுவடிகளிலோ எழுதும் போது, செய்யுள் வடிவமே கையாளப்பட்டது. அவ்வாறு, செய்யுளுருவம் பெற்ற மருத்துவம், தனித்த இலக்கிய வகையாக வளர்ச்சியுற்று ஏட்டுருவம் பெறத் தொடங்கிற்று.

சித்தர் இலக்கியம்

தமிழில் வழங்கி வரும் மருத்துவ நூல் ஆசிரியர் பெயர்கள் அனைத்தும் சித்தர்கள் பெயராலேயே வழங்கப்படுகின்றன. அகத்தியர்12000; திருமூலர்8000; போகர்7000; மச்சமுனி800; சட்டமுனி3000; கொங்கணர்3000; கோரக்கர் சந்திரரேகை என்றே குறிப்பிடப்படுகின்றன. இப்பெயர்கள் அனைத்தும் சித்தர் பெயராகவே இருப்பதனால், மருத்துவ இலக்கியம் அனைத்தும் ‘சித்தர் இலக்கியம்’ என்னும் பொதுப்பெயரால் வழங்கப்படுகின்றன.

சித்தர் இலக்கியம் முழுவதும் மருத்துவம், வாதம், யோகம், ஞானம் என்னும் நான்கு கூறுகளைக் கொண்ட மருத்துவத்தின் அடிப்படைகளை வகுத்துக் கொண்டு, நோய்களைக் கண்டறிதல், மருந்துகளை நோய்களுக்கு ஏற்றவாறு தயாரித்து அளித்தல், நோய் அணுகாதிருக்க கற்ப முறைகளைக் கூறுதல், சாகா நிலையைப் பெற யோக முறைகளை விளக்குதல் போன்ற செய்திகளையும் முறைகளையும் உரைப்பதால், ‘மருத்துவ இலக்கியம்’ என்றும் வழங்கப்படும். அவ்வாறான மருத்துவ இலக்கிய நூல்கள் பழங்காலத்திலிருந்தே தமிழ்மொழியில் வழங்கி வருவதனால், அவை, ‘தமிழ் மருத்துவ நூல்’ என்று பழமையைச் சுட்டும் பெயராகவும் வழங்கப்படுகின்றன.

அகத்தியர்

தமிழில் காணப்பெறும் மருத்துவ நூல்களில் அகத்தியர் பெயரால் வழங்கும் நூல்களே அதிகமாக இருக்கின்றன.கீழ்த்திசைச்சுவடி நூலகத் தொகுப்பில் காணப்பெறும் மருத்துவச் சுவடிகளில் அகத்தியர் பெயரால் வழங்கப் பெறும் 166 சுவடிகள் உள்ளன. அத்தனை செய்யுள்களையும் ஒருவரால் இயற்றிட இயலுமா? என்று எண்ணும் போதே ஒரு வித மலைப்புத் தோன்றுகிறது. அந்நூல்களில் காணப் பெறுவது கற்பனைச் செய்யுள்கள் அல்ல; அறிவியல் கருத்துகளைக் கொண்ட மருத்துவச் செய்யுள்கள்.

அவ்வாறு கூறப்பெறுகின்ற நூல்கள் தொகுக்கப்பெற்ற பட்டியல்களில் காணப் பெறாதவை. அவ்வாறான நூல்களில் சிலவற்றின் விபரம் வருமாறு:

அகத்தியர்81000; அகத்தியர்51000; அகத்தியர்30000; அகத்தியர் 21000; அகத்தியர்18000; அகத்தியர்8000; திருமூலர்8000; பரஞ்சோதி 8000; கோரக்கர் வெண்பா; மச்சமுனி கலிப்பா; சங்கர மாமுனி கிரந்தம் போன்றவையாகும்.

இந்த சுவடிகள் எல்லாம் காலப்போக்கில் அழிந்து வருகிறதே . இதனை பாதுகாக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது .

மிகவும் நலிந்தும் சிதைந்தும் காணப்படும் சுவடிகளும், நல்ல நிலையிலும் சிதைவுகள் ஏதுமில்லாத நிலையில் உள்ள சுவடிகளும், தொடக்கமும் முடிவும் இல்லாமல் இடைப்பகுதி மட்டுமே உள்ள சுவடிகளும், முழுவதும் இருந்தாலும் படித்தறிய முடியாத நிலையில் உள்ள சுவடிகளுமாக இருக்கின்றன.

தமிழ் நாட்டில் உள்ள சுவடி நிலையங்களாவன:

1. தமிழ்ப் பல்கலைக்கழகம், ஓலைச்சுவடிகளைத் தொகுத்துப் பாதுகாப்பதுடன், அவற்றை ஆய்வு செய்வதற்கென்று ‘ஓலைச் சுவடித்துறை’ என்றொரு தனித்துறையையும் இயக்கி வருகிறது. அத்துறையில் சுமார் 5000 சுவடிகள் இருக்கின்றன. அவற்றுள் மருத்துவச் சுவடிகள் மட்டும் ஏறத்தாழ 60 சதவீதம் எனலாம்.

2. சென்னை, அரசினர் கீழ்த்திசைச்சுவடி நூலகம், பல்லாயிரக் கணக்கான சுவடிகளின் களமாக விளங்குகிறது. இந்நூலகம்

ஆய்வாளர், சுவடியியல் கற்போர், பதிப்பாளர், மருத்துவர், கல்வியாளர் போன்ற அனைவரும் பயன்படுத்தும் நோக்கில் அமைந்திருக்கிறது. இந்நிலையத்திலுள்ள தமிழ் மருத்துவச் சுவடிகளின் பட்டியல் பின்னிணைப்பில் இணைக்கப் பட்டுள்ளது.

3. தஞ்சைச் சரசுவதி மஹால் நூல் நிலையம், தஞ்சை மன்னர் சரபோஜி (கி.பி. 1798 -1832) அவர்களால் ஏற்படுத்தப்பட்டு, பல்வேறு துறை சார்ந்த சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் எனத் தொகுக்கப்பெற்று பாதுகாக்கப் படுகின்றன. இந்நிலையத்தில் பல்வேறு தலைப்புகளைக் கொண்ட 396 மருத்துவச் சுவடிகள் உள்ளன.

4. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 270 மருத்துவச் சுவடிகளைத் தொகுத்திருக்கிறது. அவற்றுள் சில பதிப்பிக்கப்பட்டும் வருகின்றன.

5. சித்த மருத்துவ மேம்பாட்டுக் குழு 478 தலைப்புகளைக் கொண்ட சுவடிகளைச் சேகரித்துள்ளது.

6. மத்திய அரசால் 1924–இல் நீதி அரசர் உஸ்மான் தலைமையில் அமைக்கப்பெற்ற சித்த மருத்துவ நூலாய்வுக்குழு, அதனது அறிக்கையில், 594 சுவடிகளைத் தொகுத்திருப்பதாக அறிவித் திருக்கிறது.

7. உ.வே.சாமிநாதையர் நூலகம், 15 மருத்துவச் சுவடிகளைப் பாதுகாக்கிறது.

8. விருத்தாசலம், குமார வீரசைவ மடத்தில் 15 மருத்துவச் சுவடிகள் இருக்கின்றன.

9. பாண்டிச்சேரி, பிரஞ்சுஇந்தியக் கலைக்கூடம் 80 சுவடிகளைப் பாதுகாக்கிறது.

10. மதுரை, தமிழ்ச்சங்கம் 24 தலைப்புகளைக் கொண்ட நூல்களைப் பாதுகாக்கிறது.

11. திருவனந்தபுரம், கீழ்த்திசைச் சுவடி நூலகம் 165 மருத்துவச் சுவடி களைக் கொண்டிருக்கிறது.

12. சென்னை, ஆசியவியல் நிறுவனம் பல சுவடிகளைத் தொகுக்கும் நிறுவனமாக விளங்குகிறது.

13. மேற்கண்ட நிலையங்களில் காணப்படும் சுவடிகள் மட்டுமல்லாது, பல தனியார் நிறுவனங்கள், மருத்துவச் சாலைகள், மருத்துவர்கள், சோதிடர்கள், மாந்திரீகர்கள், துறவிகள், மடாலயங்கள், சித்தர் பீடங்கள், கோயில்கள் எனப் பல்வேறிடங்களில் மேற்குறிப்பிட்ட தொகுப்புள் அடங்காத சுவடிகள் பயன் கருதாது முடங்கிக் கிடக்கின்றன.

த‌மிழில் தோன்றி மறைந்து விட்டதாகக் கருதப்படும் மிகச் சிறந்த நூல்கள் பல தமிழல்லாத பிற மொழிகளில் காணப்படுகின்றன. பிறமொழிகளில், மிகவும் குறிப்பாக சமஸ்கிருதம், திபெத்தியன், அரபிக், தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளில் வழங்கிவரும் மருத்துவ நூல்கள், தமிழ் மருத்துவ நூல்களாகக் காணப்படுகின்றன என்பர். அம்மொழிகளில், தமிழ் மருத்துவ நூல்கள் எளிதில் கிடைக்கக் கூடியவையாகவும், திரண்ட மருத்துவக் கருத்துகளைத் தரக் கூடியவையாகவும் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகின்றன.

சித்த மருத்துவத்தை மரபு வழியாக அறிந்த தொழில்முறை மருத்துவர்கள், தங்களுக்கு வேண்டிய சித்த மருத்துவ முறைகளை அறிய அம்மொழிகளையே நாடி அறிந்து வருகின்றனர் .

எனவே நாம் நம்மால் ஆன சிறு முயற்சியாக தமிழ் நூல்களை பாதுகாக்க முயற்சி மேற்கொள்வோமா ...

இடுக்கை : அ.ராமநாதன்

கருத்துகள் இல்லை: