தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

4/23/2010

இது 100- வது பதிவு

100வது பதிவு... எடுக்கவோ..கோர்க்கவோ.. நட்(பு) "பூ"


"நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தானாரா .. இல்லை "


என்று போகிற போக்கில் கண்ணதாசன் சொன்னதின் அர்த்தம் எவ்வளவு ஆழமானது.
தாய், தந்தை,சகோதர,சகோதரி சொந்தங்கள் நம்மையும் மீறி அமையப்பெற்றவை..


ஆனால்.. நண்பர்கள்.. நாமாக தேர்வு செய்யும் ஒரு பந்தம்.. நட்பைப் பற்றியும் நண்பர்களைப் பற்றியும் ஏராளமான எழுத்துக்கள் பதிந்து கிடக்கின்றன..


முதல் வில்லன் கதாபாத்திரங்களாக புனைந்து புகட்டப்பட்ட இருவரில் ஒருவர் துரியோதனன்.. அவனைப் பற்றி பேச்சு எழுந்தால், துரெளப‌தியின் துயில் உறித்ததை விட, .. நண்பன் கர்ணனுக்காக கேட்ட "எடுக்கவோ கோர்க்கவோ தான்" அதிகம் பேசப்பட்டவையாக இருக்கிறது.. காரணம் நட்பின் மேல் நமக்கிருக்கும் நம்பிக்கை.


எத்தனை நண்பர்கள் வாழ்வில் வந்து போகிறார்கள்.. எத்தனை வித குணங்கள்.. தியாகங்கள்.. சில துரோகங்கள்.. மன்னிப்புகள்..


கரண்ட் போனால் ஓ என்று கத்துவதிலும், திளைத்துத் திகட்டிய தெரு நண்பர்கள்..


கட் அடித்து சினிமா பார்த்து, பிட் அடித்து,அடிக்க உதவி,,இரவு குரூப் ஸ்டடியில் படித்ததை பகிர்ந்து,தேர்வு வரை உடனிருந்த‌ பள்ளிக் கூட நண்பர்கள்..


ஹீரோயிஸம்,ரவுடியிஸம்,காமெடி என்று அத்துனை வகை கூத்துகளும் அரங்கேறும் கல்லூரி நட்புகள்.. சிரித்து சிரித்து செத்துவிடுவோமோ என்று திரிந்த கல்லூரி நண்பர்களின் விடலைத்தனத்தின் ஒவ்வொரு நிமிடங்களும் சொர்கத்தின் திறப்பு விழாக்களாக கொண்டாடப் பட்ட நட்பு வட்டங்கள்..உலகமே இனி இவர்களுடன் தான் என்று எண்ணி இருந்த கல்லூரி நண்பர்கள்..


கால ஓட்டம் என்ற நாசாமாய்ப் போன வார்த்தையினால் இந்த அத்தனை நட்புகளும் தொடர்பற்று.. சிலர் தொலைத் தொடர்பாக.. இப்படி மாறிப் போகும்..


ஆனால் அடுத்த கட்டமாக..


அலுவலகத்தில் ஏற்படும் நட்பு வட்டம்.. பலரிடம் அந்நியமாகவும் சிலரிடம் மட்டும் சற்று அந்யோன்யமாகவும் பழக வைக்கும் பொறுப்பான‌ நட்பு..


துறை சார்ந்த,தொழில் சார்ந்த,இப்பொழுது பதிவுலகம் சார்ந்த.. என..மின்னல் பொழுதில் நட்பாகி..வாழ்நாள் முழுதும் மழையென தினம் பொழியும் நட்புகள்..
இப்படி ஏதாவது ஒரு ரூபத்தில் நட்பின் நீளம் தொடந்து கொண்டுதான் இருக்கிறது..இருக்கும்..


நீங்கள் சிறு வயதில் நீச்சல் அடிக்க தெரிந்தவராக இருந்து, ஆனால் இப்பொழுது அமெரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ உள்ள இரண்டுக்கு இரண்டடி பாத்ரூமில் பம்மி குளித்துக் கொண்டிருப்பராக மாறி எத்தனை வருடங்கள் ஆகியிருந்தாலும்.. குளத்தில் திடீரென குதிக்க நேர்ந்தால் எந்த பயிற்சியும் தேவைப் படாமல் நீங்கள் நீந்த முடியும்..மறக்கவே மறக்காத கலை நீச்சல் கலை.


அது போலத்தான் மேலே சொன்ன அத்தனை நட்பும்.. ஒரே ஒரு மாலைப் பொழுதின் சந்திப்பு, பல வருட பிரிவையும் மொத்தமாய் நிறைத்து விடும்.. கண்கள் வலிக்கச் சிரிக்கச் செய்யும்..உலகின் மொத்த வார்த்தைகளும் தீர்ந்துவிடும் அளவு பேச வைத்து விடும்..


நட்பின் புனிதம், துரோகம் போன்ற வார்த்தைகளையும் மீறி தனிமனித வடிகாலாக இருப்பது நட்பும் நண்பர்களும் தான்.


100 பதிவுகள் எழுதும் அளவிற்கு என் எழுத்திற்கு உரமிட்ட பதிவுலக நண்பர்களுக்கும்,என் குடும்பத்துக்கும் ,என் இறைவனுக்கும் மிக மிக கோடான கோடி நன்றிகள் ...........இத்துடன் இவர்களுக்கு இதை சமர்ப்பணம் செய்ய உள்ளேன் 


சமர்ப்பணம் என்ன‌ வேண்டி கிடக்கிறது.. இதை தட்டச்சு செய்யும் பொழுது உதிரும் இந்த ரெண்டு சொட்டு கண்ணீர் தான் அதை செய்து விட்டதே!


இடுக்கை : உங்கள் கோவை ராமநாதன்.

கருத்துகள் இல்லை: