தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

4/20/2010

குர்பான் - என்ன சொல்ல வருகிறது?குர்பான் என்ற இந்தி படத்தை சமீபத்தில் பார்க்க முடிந்தது. கமர்ஷீயல் என்று குறுகிய வட்டத்தில் சிக்காமல் வேறுபாதையில் பயணிக்கும் ஒரு இந்திப்படமாகவே எனக்குத்தோன்றுகிறது. பாம்பே, மிஷன்காஷ்மிர் போன்ற படங்களில் எடுத்துக்கொண்ட கதைக்களமாக இருந்தாலும் அதைவிட ஒருபடி மேல் இதன் கதைக்களம் கையாளப்பட்டிருக்கிறது.

சிறுபான்மை மதத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் ஒரு தீவிரவாதி பிறந்துவிட்டான் என்று கிட்டத்தட்ட முத்திரை குத்தப்படும் நாடு இந்தியா என்றாகிவிட்டது. ஏதோ மற்ற மதங்களில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் காந்தியும், புத்தனையும் போல. இதை ஏற்றுக்கொள்ள சிரமம் என்றாலும் குர்பான் போன்ற திரைப்படங்கள் இதையே வலியுறுத்துகிறது. இந்தப்படத்தில் அகிலஉலக நாட்டாமை, ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கு பாடம் கற்பிப்போம் என்று அதனை அவர்கள் நியாயப்படுத்த முயன்றிருப்பது மனிதத்திற்கு அப்பாற்பட்டது.

எந்த மதமும், எந்த கடவுளும், எந்த புனிதநூல்களும் அப்பாவிகளை கொல்வது நியாயம் என்று கற்பிப்பதில்லை. இதனை முடிவெடுக்க இந்த மனிதன் யார்? மனிதனால் உருவாக்கப்பட்ட மதத்தின் பெயரைச்சொல்லி ஒரு மனிதன் மற்றொரு மனிதனை கொல்லவது என்பது மிருகத்தனத்தின் உச்சம். அது எந்தமதமாக இருந்தாலும் சரி. குறிப்பிட்ட சிறுபான்மையினரே இதற்கு காரணம் என்று சொல்லி பட்டாசு வெடித்தாலும் அதற்கு அந்த அமைப்புத்தான் காரணம் என்று சுட்டிக்காட்டுவதும் சிறுபிள்ளைத்தனம்.

நாசிக் மாலேகானில் வெடித்த வெடிகுண்டுக்கு காரணம் ஒரு இந்து அமைப்பு. யாரை கைது செய்தார்கள். எந்த இந்து அமைப்பு காரணம் என்பது இன்னும் கண்கட்டுவித்தையாகவே இருக்கிறது.மதத்தின் பெயரைச்சொல்லி கொல்வது என்பதே தவறு. அது எந்தமதமாக இருந்தால் என்ன? ஏன் இந்த பாராபட்சம். குஜராத்தில் மோடி மட்டும் என்ன ஓலைப்பட்டாசா வெடிக்க வைத்தார்.

தீவிரவாத்தை ஒழிக்கிறோம் என்று ஆப்கானில் பச்சைக்குழந்தைகளை வரை கொன்று குவித்தது அமெரிக்கா. ஈராக்கில் அணுகுண்டை தேடுகிறேன் பேர்வழி ஓட்டுமொத்த படைகளையும் கொண்டுவந்து நிறுத்தி துப்பாக்கி முனையில் பெண்களும், குழந்தைகளையும் அதட்டுகிறது அமெரிக்கா. இதற்கு தண்டனையாக அமெரிக்காவில் பிறந்த குழந்தையையும், பெண்களையும், அப்பாவிகளையும் கொல்வது நியாயம் என்று எந்த புனிதநூலில் சொல்லப்பட்டிருக்கிறது. அதை நியாயப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்? அர்த்தமில்லாத விசயங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்றாலும் அதை நியாயப்படுத்துவது போன்ற திரைப்படங்கள்தான் உண்மையில் தவிர்க்கப்படவேண்டியவை. அதில் ஒன்றுதான் இந்த குர்பான்.

குர்பான் - (அர்த்தமில்லாத)தியாகம்.

 ஒரு காமன் மேன் (அ.ராமநாதன்)

கருத்துகள் இல்லை: