தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

4/20/2010

நட்பு

“எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
“எம் பேரு ஞாபகமிருக்கா”
என கேட்டு விடுவானோ ?

அப்பப்போ
போன் பண்ணுடா…
எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு
“கண்டிப்பா”
என நகர்வான்,
நான் கொடுக்காத நம்பரை
அவன்
எழுதிக் கொள்ளாமலேயே.

பொய்கள் தான்
உண்மையாகவே
நட்பைக் காப்பாற்றுகின்றன.
“நேற்று கூட பேச நினைத்தேன்”
என யாரோ பேசிக் கடக்கிறார்கள்
செல்போனில்

அவளா இது ?
மீன் வாங்கிச் செல்லும்
பெண்ணிடம்
கொஞ்சமும் மிச்சமில்லை
கால் நூற்றாண்டுக்கு முன்
கண்களில் சிரித்த வசீகரம்.

நட்பு இருப்பதாய்
சொல்லிக் கொள்ளவேனும்
அடிக்கடி
தேவைப்படுகின்றன
வெள்ளிக்கிழமை பார்கள்.

கிராமத்து மௌன வீட்டின்
கம்பி அளியின் ஊடாக
நண்பனின்
புன்னகை முகம் தெரிகிறது.
இறந்து
வெகு நாட்களான பின்னும்.

“ஏழாயிரம் சம்பளம் டா மச்சி”
என குதூகலித்துச் சொல்லும் நண்பனிடம்
சொன்னதில்லை
பல மடங்கு வாங்கும் நான்.
அவனிடம் மிகுந்திருக்கிறது நட்பு.

கருத்துகள் இல்லை: