தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/31/2010

யாருக்கு இந்த புரளி ,எதற்காக ? - 2

எதை நாம் வளர்ச்சி என்று மார்தட்டிக் கொள்வது? ஒருபுறம் உணவுப் பொருள்களின் விலைவாசியும், உறைவிடமும் பெரும் பான்மையான குடிமக்களுக்கு எட்டவே எட்டாத இடத்தில் இருக்கிறது. இன்னொருபுறம், மோட்டார் வாகனங்களின் விலை குறைந்து விட்டது என்று மகிழ்ச்சி அடைகிறோம்.



கடந்த இருபது ஆண்டுகளில், குடிசைகளின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்றோ, நடைபாதை வாசிகளின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் நாளும்பொழுதுமாக அதிகரித்து வருவது குறித்தோ எந்தவிதப் புள்ளி விவரங்களும் சேகரிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. இவர்களுக்கு நாம் வேலைக்கு உத்தரவாதமும், உணவுக்கு உத்தரவாதமும், கல்விக்கு உத்தரவாதமும் ஏட்டளவில் சட்டமாக்கி வைத்திருக்கிறோமே தவிர, அவர்களை இந்தியத் திருநாட்டின் பிரஜைகளாகக்கூட நாம் கணக்கிடுகிறோமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.



இந்தியாவின் தனிநபர் வருமானம் உயர்ந்திருக்கிறது என்று பெருமை பேசுகிறோம். 1,000 குடும்பங்கள் குடிசைகளில் வாழும் கிராமத்தில், ஓர்  அம்பானியோ, ஒரு ரத்தன் டாடாவோ, ஓர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியோ அல்லது நமது கோடீஸ்வர நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவரோ பங்களா கட்டிக் கொண்டு வாழ்ந்தால், அந்தக் கிராமத்தில் தனிமனித வருமானம்கூட பல லட்சங்களாக இருக்கும். அதுவா கணக்கு?



தீவிரவாத இயக்கங்கள் பெருகுவதும், அரசின் நிர்வாக இயந்திரத்துக்குக் கட்டுப்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், மக்களில் பாதி பேர் வறுமையிலும், கடனிலும் வாழ்வதும் வளர்ச்சிக்கான அறிகுறியாக இருக்க முடியுமா?



ஒன்று, "நானே நடந்து வருவேன், நடைவண்டி தேவையில்லை' என்று சொல்லும் தன்னம்பிக்கை வேண்டும். அல்லது இன்னமும் நடைபழகி முடியவில்லை என்று துணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஊர் உலகத்துக்காக கோட் சூட் போட்டுக்கொண்டு, அடுத்தவரிடம் பணம் எதிர்பார்த்து நிற்பது தேவையில்லாத போலித்தனம் அல்லவா!



இந்தத் தலையங்கத்தின் ஒவ்வொரு எழுத்தும் பத்தியும் சொல்வதைப் புரிந்து கொண்டால் .....



மீன்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ, காதல் கொண்டோ எவரும் தூண்டிலில் புழுவை வைத்துக் காத்திருப்பதில்லை!


இயேசு அழைக்கிறார் என்று கூவுகிறவன் கோடிகளில் மிதக்கிறான்! அழைப்பைக் கேட்டுப் போனவன், அவனிடம் தசம பாகத்தைக் கொடுத்து விட்டு, என் ஆண்டவர் மிகவும் நல்லவர், அவர் என்னை என்றும் ரட்சிப்பார் என்று பாடிக் கொண்டு வெறும் கையோடு திரும்புகிறான்!
அதே மாதிரித் தான்!

சமூக நீதி காக்கிறேன், சமத்துவம் தருகிறேன் என்று இலவசங்களைத் தருகிறவன் என்ன நிலையில் இருக்கிறான், அதை நம்பிப் போகிறவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதைக் கொஞ்சம் கண்திறந்து பார்த்தாலே புரிந்து விடும்!
சுதந்திரம் என்பது இவர்கள் பாடப் புத்தகங்களில் எழுதி வைத்தது போல, காந்தித் தாத்தாவும், நேரு மாமாவும் கடைக்குப் போய் வாங்கி வந்து கொடுத்ததல்ல!
எப்போது நமது பொறுப்பை உணரப் போகிறோம்?
இப்போதாவது........
இலவசங்களில் ஏமாறுவது இல்லை என்ற உறுதியோடு !
உலகத் தொல்லைக் காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக என்று கூவும் பெட்டிகள் முன்னால் அமர்ந்து நேரத்தை வீணடிக்காமல்,


சக மனிதர்களிடம் கொஞ்சம் அக்கறையோடு, பரிவோடு
இருக்க முயற்சியை ஆரம்பிப்போமா!


நன்றி  : தினமணி

கருத்துகள் இல்லை: