தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/30/2010

யாருக்கு இந்த புரளி ,எதற்காக ?



சிறுவயது முதலே நாளிதழ்களைப் படிப்பது, குறிப்பாக அந்த நாளிதழின் அன்றைய தலையங்கம் என்ன சொல்கிறது என்பதை எல்லாம் கவனமாக உள்வாங்கிக் கொண்டு யோசிக்கும் வழக்கம் எப்படியோ இன்றைக்கும் என்னிடம் நீடித்துவருகிறது. விஷயங்களைத் தேடித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டிய ஆசிரியர்கள், நண்பர்கள், பெரியவர்கள், புத்தகங்கள் என்று ஒரு பெரிய பட்டியலையே காரணமாகச் சொல்ல முடியும். என்னைப் பற்றி இப்படிச் சொல்லிக் கொள்ளும்போது, என்னை மாதிரியே எத்தனைபேர் ஒரு நாளிதழில் வெளி வரும் தலையங்கத்தைப் படிக்கிறார்கள், அப்புறம் அதைப் பற்றி எப்படி சிந்திக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினால் தெளிவான விடை தெரிவதில்லை. முதலில் சமூகப் பொறுப்புடன் எத்தனை நாளிதழ்கள் தலையங்கத்தைத் தொடர்ந்து எழுதிவருகின்றன என்று கேட்டால், அதற்கும் விடை எத்தனைபேருக்குத் தெரியும் என்பது கூட என்னால் ஒரு குத்துமதிப்பாகச் சொல்ல முடிவதில்லை.


தமிழகத்தில் பெரும்பாலான நாளிதழ்கள் தலையங்கம் என்ற ஒன்றையே மறந்து விட்டன. அல்லது, தங்கள் சௌகரியத்துக்கேற்றபடி எழுதுவது மட்டுமே தலையங்கமாக வருகிறது. இந்த மாதிரி இல்லாமல், பொது விஷயங்களில், ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்தில், ஒரு தெளிவான பார்வையோடு பிரச்சினையை அணுகுகிற விதத்தில் தலையங்கங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நாளிதழ்களாக, ஹிந்து, இந்தியன் எக்ஸ்ப்ரெஸ், என்று ஆங்கிலத்தில் பல நாளிதழ்கள் இருந்தாலும், தமிழில் ஒரே ஒரு நாளிதழ் தான், ஆரம்பகாலம் முதல், ஒரு நாளிதழின் கடமையாக இன்றைக்கும் தலையங்கத்தை வெளியிட்டு வருவதாக இருக்கிறது! அது தினமணி!  அன்றைய காலங்களில் இருந்து தினமணி தலையங்கங்களைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.

இப்படிச் சொல்லும்போது, வேறு சில இதழ்களிலும் தலையங்கங்கள் அவ்வப்போது வருகிறதே, பார்ப்பதில்லையா என்று கேட்கிறீர்களா? தலையங்கம் என்ற பெயரில் வருவதெல்லாம் தலையோடு இருப்பதாக எண்ண முடியவில்லை! நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த சிந்தனையும் கொண்டு ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள தைரியமில்லாத, தலை இல்லாத முண்டங்களாகத் தான், சில நாளிதழ்களின் ஆசிரியர் பக்கம் அல்லது தலையங்கங்களைப் பார்க்க முடிகிறது. அரசியல் கட்சி சார்புடைய நாளிதழ்கள் என்றால் கேட்கவே வேண்டாம்! குதிரைக்குக் கண்ணைக் கட்டிய மாதிரிக் குருட்டாம்போக்கில், ஒருபக்கச் சார்புடையரை  திட்டித் தீர்ப்பதற்காகத் தான் தலையங்கமே என்ற அளவுக்குத் தரம் தாழ்ந்துபோனவைகளாக மட்டுமே இருப்பதை இங்கே கணக்கில் சேர்த்தி இல்லை!

இந்தத் தலையங்கம் சென்ற  தினமணி நாளிதழில் வெளியானது. "போதுமே இந்தப் போலித் தனம்!" என்ற தலைப்பில் எழுதப்பட்டது. கொஞ்சம் கவனமாகப் படித்தீர்களானால், சொல்லப் பட்டிருக்கும் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை, இந்தப் போலித் தனத்தை உதறினால் எந்த அளவுக்கு நன்மை உண்டு என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியும்!




போதுமே இந்தப் போலித்தனம்..!


இந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்துவரும் வளர்ச்சி நிதி உதவியை (250 மில்லியன் அமெரிக்க டாலர்) நிறுத்திக் கொள்ளலாமா என்று ஆலோசித்து வருவதாக அந்நாட்டு அரசு சென்ற மாதம் அறிவித்தது. பிரிட்டனிடமிருந்து அதிகமாக நிதியுதவியைப் பெறும் நாடுகளில் முதலிடம் வகிப்பது இந்தியாதான். ஒருவேளை, முந்நூறு ஆண்டுகளாக இந்தியாவிடம் பெற்றதை பிரிட்டன் நினைத்துப் பார்ப்பதாலும் இந்தத் தாராள மனது இருக்கக்கூடும்.
அணுமின் திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி செலவிடுகிற இந்தியாவுக்கு, அதிலும் வளர்ந்து வரும் நாடு என்கிற நிலையில் உள்ள நாட்டுக்கு நாம் தொடர்ந்து உதவி அளிக்கத்தான் வேண்டுமா என்பது இங்கிலாந்தின் இப்போதைய நியாயமான கேள்வி. மேலும், 2009 உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, தனது பொருளாதாரமே தள்ளாட்டம் போடும் நிலையில் அடுத்தவருக்குச் செலவழிக்க வேண்டுமா என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. இந்தியாவுக்கு உதவியை நிறுத்துவது பற்றி யோசிக்கும்போதே சீனாவுக்கும் ரஷியாவுக்கு வளர்ச்சிநிதியை நிறுத்திவிட்டார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.


இத்தகைய வளர்ச்சி நிதி என்பது ஐக்கிய நாடுகள் மன்றத்தில் 1970-ல் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம். இதன்படி, வசதியான நாடுகள் தங்கள் மொத்த வருமானத்தில் 0.7 விழுக்காட்டினை இத்தகைய வளர்ச்சி நிதிக்காக (டெவலப்மென்ட் அசிஸ்டன்ஸ்) வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்குக் கட்டுப்பட்டு, 0.7 விழுக்காடு நிதி வழங்கும் நாடுகள். சுவீடன், நார்வே, லக்ஸம்பர்க், டென்மார்க், நெதர்லாந்து போன்றவைதான்.


உலகில் மிக அதிக அளவு வளர்ச்சி நிதி வழங்குவது அமெரிக்கா. 2009-ம் ஆண்டு 28 பில்லியன் டாலர் வழங்கியிருக்கிறது. என்றாலும், இது நாட்டின் மொத்த வருவாயில் 0.3 விழுக்காடு மட்டுமே! இங்கிலாந்து இரண்டாம் இடத்தில் (13 பில்லியன் அமெரிக்க டாலர்) இருப்பினும் இது நாட்டின் மொத்த வருவாயில் 0.5 விழுக்காடு ஆகும்.


இந்த நிதியுதவியை இந்தியாவுக்கு அளிப்பதில் தயக்கம் காட்டுவதற்குக் காரணம், மேலே சொன்னதைப்போல, இந்தியா வளர்ந்துவரும் நாடு என்பதுதான். இந்த வளர்ச்சி நிதியை மற்ற ஏழை நாடுகளுக்குக் கொடுப்பது குறித்து இந்த "கொடைநாடு'களுக்கு எந்த மனத்தடையும் இல்லை. மேலும், கொடைநாடுகள் தரும் வளர்ச்சி நிதியுதவியில் 5 விழுக்காடுதான் வளரும் நாடுகளுக்கு அளிக்கப் படுகிறது. இந்தப் பட்டியலில் முதல் முக்கியமான 10 நாடுகளில் இந்தியா ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. நாம் ஆண்டுக்கு சுமார் 2,650 மில்லியன் அமெரிக்க டாலர்களை வளர்ச்சி நிதியாகப் பெறுகிறோம்.


இவர்கள் தரும் நிதியுதவி உண்மையாகவே வளர்ச்சிக்குப் பயன் படுகிறதா என்பதே கேள்விக்கு உட்படுத்தப்படும் விஷயம். இவர்கள் நிதியைக் கொடுத்துவிட்டு, வளர்ச்சிப் பணிக்கான பொருள்களை தங்கள் நாட்டிலிருந்து வாங்க வேண்டும் என்று வலியுறுத்துவதால் அவர்களுக்கு வியாபாரம் நடக்கிறது; பணம் தருகிறோமே என்கிற உரிமையில் நம் நாட்டில் கடைவிரிக்கிறார்கள்; நிதியின் பெரும்பகுதி அரசியல்வாதிகளின் ஊழலுக்கே போகிறது என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இப்போது நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி- நாம் வளர்ந்து வரும் நாடா, வல்லரசாக மாறப்போகும் நாடா, அல்லது ஏழை நாடா?


ஒரு பக்கம் பல ஆயிரம் கோடியில் திட்டங்கள். 8 விழுக்காடு வளர்ச்சி என்கிறோம். நிறைய வசதி வாய்ப்புகள் உருவாகிவிட்டன. வானத்தில் விமானங்களின் நெரிசல் அதிகமாகிவிட்டது. ஏற்றுமதி ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வணிக வாசல்களை எல்லோருக்குமாக தாராளமாகத் திறந்துவிட்டாகிவிட்டது.


சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் 42 விழுக்காட்டினர் வறுமையில் வாழ்க்கிறார்கள். அதாவது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமையில் வாழ்வது இந்தியாவில்தான். இதை வளர்ச்சி என்று சொல்லிவிட முடியுமா?


காத்திருங்கள் .......

கருத்துகள் இல்லை: