தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/27/2010

அபத்தமான தமிழனின் வாழ்க்கை



ஒரு விஷயத்தை ஒதுங்கி நின்று பார்க்கும் போது அதுவரை அது பற்றி நமக்குத் தென்பட்டிராத பல்வேறு புதிய விஷயங்கள் காணக் கிடைக்கும். அல்லது இப்படிச் சொல்லலாம். ஒரு விஷயத்தை அதன் உள்ளே இருக்கும் போது அதற்குள் ஓடும் உணர்ச்சிப் பிரவாகத்தில் நாமும் அடித்துக் கொண்டு போய் விடுகிறோம். அதனால் அதை நாம் விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன் நுண்ணிய முறையில் பார்க்க முடியாமல் போய் விடுகிறது. அதேபோல், தமிழர்களின் வாழ்க்கையை சற்று வெளியே நின்று பார்க்கும் போது அதுவரை நமக்குப் புலப்பட்டிராத ஏராளமான காட்சிகள் கிடைக்கின்றன. உலகின் எந்த நிலப்பரப்பிலும், எந்தக் கலாச்சாரத்திலும் காணக் கிடைக்காத காட்சிகள் அவை.
          
            ஒரு கட்சி தேர்தலில் தோல்வி அடைந்தால் உடனே அந்தக் கட்சித் தொண்டர் தன் விரலை வெட்டி கோவில் உண்டியலில் போடுவார். கட்சித் தலைவரும் அந்தத் தொண்டருக்கு ஆயிரக் கணக்கில் பண உதவி செய்வார். இதெல்லாம் ப்ளாக் ஹ்யூமரில் சேர்க்கப்பட வேண்டியவை என்றால் நேரடி ஹ்யூமரும் எக்கச்சக்கமாக உண்டு. மாநில முதல்வர் இருந்த நான்கு மணி நேர உண்ணாவிரதத்தை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் சமயங்களில் இந்த நகைச்சுவைக் காட்சிகள் பயங்கரமான வன்முறைக் காட்சிகளாகவும் மாறுவதுண்டு. ஒரு அரசியல் தலைவர் கைது செய்யப்பட்ட போது மாணவிகளோடு சேர்த்து பஸ்ஸைக் கொளுத்திய சம்பவத்தை நினைவு கொள்ளலாம்.
          பஸ்ஸைக் கொளுத்துவது போல் தன்னையும் கொளுத்திக் கொள்வது இன்னொரு விசேஷ குணம். எந்த ஒரு அரசியல் பிரச்சினைக்கும் கட்சித் தொண்டர்கள் தங்களைத் தீயிட்டுக் கொளுத்திக் கொள்வதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். தொண்டர்கள் என்று இல்லாமல் மாணவர்களும் இதைச் செய்கிறார்கள். அரசியல்வாதிகள் இதை ‘தியாகம்’ என்று சொல்லி தமிழர்களின் உணர்ச்சிவசப்படும் தன்மையைத் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
          திருவள்ளுவர் திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்று மூன்றாகப் பிரித்தார் அல்லவா? அதை இப்போது சாமியார் (அறம்), அரசியல் (பொருள்), சினிமா (இன்பம்) என்று மூன்றாகப் பிரிக்கலாம். ஒரு சாமியார் ஒரு நடிகையுடன் மன்மத லீலையில் ஈடுபட்டதை தொலைக்காட்சியில் பார்த்த பிறகும் அவருக்கு கூட்டம் கூடுகிறது என்றால் அதை என்னவென்று சொல்வது?
        எந்த ஒரு புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு கையில் கிடைத்தாலும் அது எந்த உபயோகத்துக்காகக் கண்டு பிடிக்கப்பட்டதோ அதை விட்டுவிட்டு அதை ஒரு மட்டமான கேளிக்கைப் பொருளாக மாற்றி விடுவதில் தமிழர்கள் சமர்த்தர்கள். கணினியுன் செல்போனும் உதாரணம். கொடுமை என்னவென்றால், வாகனங்களை ஓட்டும் போது, ரயில் பாதையைக் கடக்கும் போது, சமையலில் ஈடுபடும்போது என்று ஆபத்தான வேலை செய்யும் போதும் செல்போனில் பேசி உயிரை விடும் தருணங்களும் இங்கே அதிகம். ஓசியில் எது கிடைத்தாலும் அதை வாங்கிக் கொள்ள ஆசைப்படுவது மற்றொரு சமூக மனோபாவமாக மாறியிருக்கிறது. எந்த வர்க்க பேதமும் இல்லாமல் நீக்கமற நிறைந்திருக்கும் குணாதிசயம் இது.
            ஒரு பதிவாளன்  என்ற முறையில் தமிழர்கள் இலக்கியத்துக்குக் கொடுக்கும் மரியாதை பற்றியும் கொஞ்சம் சொன்னால்தான் இந்தக் கட்டுரை முழுமை அடையும். புத்தக விழாக்களில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள், ஆன்மீகம் மற்றும் சமையல் சம்பந்தப்பட்டவை. மற்றபடி அதிகம் விற்பவை, ’எப்படி’ புத்தகங்கள். பணம் சம்பாதிப்பது எப்படி? தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி? புத்தக விழாக்களில் காணக்கூடிய மற்றொரு காமெடி காட்சி, எல்லா ஸ்டால்களிலிருந்தும் புத்தக விலைப் பட்டியலை சேகரித்து மூட்டை மூட்டையாகத் தூக்கிக் கொண்டு செல்வது. ’ஆகா, எக்கச்சக்கமாக புத்தகங்கள் வாங்கி விட்டார் போலிருக்கிறதே’ என்று பார்த்தால் எல்லாம் ஒரே கேட்லாகாக இருக்கும்; பதிப்பகங்கள் இலவசமாகக் கொடுப்பவை.
ஆனால் இதுபோல் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் தமிழர்களிடம் எனக்குப் பிடித்த ஒரு குணம், நன்றி மறவாமை. தேர்தலில் தனக்கு ஓட்டுப் போடச் சொல்லி ஒருவர் 1000 ரூ. கொடுத்தால் அவருக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள்; எந்தக் காரணம் கொண்டும் மாற்றிப் போட மாட்டார்கள்; அந்த ஆள் எட்டு கொலை செய்திருந்தாலும் பரவாயில்லை.

நன்றி: இந்தியா டுடே            
முதலில் நம் கவனத்தைக் கவருபவை சினிமா போஸ்டர்கள். கிட்டத்தட்ட தமிழர்களின் கலாச்சார அடையாளமாகவே ஆகி விட்ட இந்த விளம்பர சுவரொட்டிகளின் பின்னே தமிழக அரசியல் வரலாறே அடங்கியிருக்கிறது என்று சொல்லலாம். சினிமாவுக்கு போஸ்டர் என்றால் அரசியலுக்கு கட் அவுட். இது எத்தனை அடி உயரத்துக்கு எழுப்பப்படுகிறதோ அத்தனை அடி உயரத்துக்கு அந்தக் கட் அவுட்டை வைத்தவரின் வாழ்க்கைத் தரமும் உயரும் என்பது அரசியல் கணிதச் சமன்பாடு. தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் வெவ்வேறாகப் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்திருப்பதால் போஸ்டரும் கட் அவுட்டும் கூட அரசியல்வாதி, சினிமாக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் கலந்து கலந்து ஊடாடுகின்றன. இதில் சில சமயம் அரசியலை சினிமா முந்தும். உதாரணமாக, ஒரு ஹீரோவின் சினிமா வெளியாகும் அன்று அவருக்கு ஐம்பது அடியில் கட் அவுட் வைத்து அதற்கு பீர் (பால் ) அபிஷேகம் செய்யப்படும். இந்த அரிய வாய்ப்பு அரசியல்வாதிக்குக் கிடைப்பதில்லை

கருத்துகள் இல்லை: