தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/01/2010

தாய்த்தமிழ் பிறந்திருக்கிறது...


 
            உலகின் பழமையான மொழிகளில் நம் தமிழ் மொழியும் ஒன்று என்பதில் நம் அனைவருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு ஆங்கிலம் அல்லது சமசுகிருதம் கலக்காமல் நல்ல தமிழ் பேச அல்லது எழுதத் தெரியும்?


எவனோ ஒரு மடந்தை சொன்னதாக பாரதி சொன்னது போல் "தமிழ் இனி மெல்லச் சாகும்" என்ற சொல் பலித்து விட்டது. இன்றைய நிலையில் தமிழ் விபத்துக்குள்ளாகி உயிருக்குப் போரடுபவன் போல "அவசர சிகிச்சைப் பிரிவில்" சேர்க்கப்பட்டுப் பல வருடமாகிறது. இன்னும் சுயநினைவில்லாமல் தான் கிடக்கிறது.


இக்காலக் குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் தமிழின் மிக அழகான, ஒவ்வொரு தமிழரின் முதல் வார்த்தையான "அம்மா" என்ற சொல்லை உச்சரிக்கின்றன. இப்போதெல்லாம் "மம்மி" தான்.

5 வயதில் பாலர் பள்ளி சென்று சத்துமாவு உருண்டை, முட்டை எனச் சத்தான உணவுண்டு தமிழில் கற்று, பலருடன் சாதி, மதம், பணக்காரன், ஏழை என வித்தியாசமில்லாமல் கூடிவிளையாடும் போது கிடைக்கும் ஆரோக்கியமும், ஒற்றுமையும் 3 வயதில் முன்கல்வி (PreKG) கற்கும் குழந்தைகளிடம் இல்லை.

தமிழ் மொழியை அழிப்பதில் ஊடகங்களில் முதன்மையான தொலைக்காட்சிக்கு முதன்மையானப் பங்கு இருக்கிறது. தொலைபேசியில் உரையாடும் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்கள் பேசுவதெல்லாம் தமிழ் தானா? அவர்களில் பலருக்கு "ழ" என்னும் எழுத்தை உச்சரிக்கத் தெரியவில்லை. அவர்கள் நிகழ்ச்சியின் போது பெரும்பாலும் உபயோகிக்கும் வார்த்தைகளில் சில கீழே...

"ஹலோ"
"வெல்கம் பேக் டூ ஆப்டர் எ பிரேக்"
"ஒரு சின்ன கமர்சியல் பிரேக்", "ஐ வில் கேட்ச் யூ அதர் எந்த் ஆப் த பிரேக்"
"அன் டில் தென் பை பை ப்ரம்"
"உங்க டி.வி வால்யூம் கம்மிப் பண்ணுங்க"
"எங்கிருந்து கால் பண்றீங்க"
"நீங்க யார லவ் பண்றீங்க"
"நம்ம ரெகுலர் காலர்"
இதே வாக்கியங்களைத் தமிழில் உச்சரிக்கும் போது எவ்வளவு அழகு என்பதைப் பாருங்கள்..

"வணக்கம்"
"ஒரு விளம்பர இடைவேளை முடிந்து மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி"
 "சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம்"
"மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது"
"உங்கள் தொலைக்காட்சியின் ஒலியைக் குறைத்து விட்டுப் பேசுங்கள்"
"எங்கிருந்து அழைக்கிறீர்கள்"
"நீங்கள் யாரைக் காதலிக்கிறீர்கள்"
"நமது தொடர் அழைப்பாளர்"


இடுக்கை : அ.ராமநாதன்

பி.கு: என்னடா இவன் "தமிழ் பிறந்திருக்கிறது" என்று தலைப்பு வைத்து விட்டு அழிவைப் பற்றி எழுதுறானேன்னு குழப்பம் வேண்டாம். அடுத்த தொடரில் இது பற்றி பார்க்கலாம். இந்தப் பதிவில் நானே எத்தனை இடங்களில் தமிழ்க் கொலை செய்திருக்கிறேன் எனத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

4 கருத்துகள்:

sangeetha சொன்னது…

//நானே எத்தனை இடங்களில் தமிழ்க் கொலை செய்திருக்கிறேன் எனத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.//

பிழைகளைச் சொல்லும் எண்ணம் இல்லை; ஆனால் கட்டுரையின் முடிவில் நீங்களே கேட்டுக்கொண்டதனால் சில ஒற்றுப் பிழைகளை மட்டும் சொல்கிறேன்.


சேர்க்கப்பட்டு பல - சேர்க்கப்பட்டுப் பல
எத்தனைக் குழந்தைகள் - எத்தனை குழந்தைகள்
என சத்தான - எனச் சத்தான
முதன்மையானத் தொலைக்காட்சிக்கு - முதன்மையான தொலைக்காட்சிக்கு
உங்களை சந்திப்பதில் - உங்களைச் சந்திப்பதில்
உங்கள்த் தொலைக்காட்சியின் - உங்கள் தொலைக்காட்சியின்
அடுத்தத் தொடரில் - அடுத்த தொடரில்

கட்டுரை நன்று; வாழ்த்துகள்

sivakumar சொன்னது…

நம்மால் ஆங்கிலம் கலக்காமல் பேச முடியாது ஒரு வரி கூட,என்பதே உண்மை நண்பா....
சரியாய் சொன்னாய்

suryadeva சொன்னது…

வணக்கம்"
"ஒரு விளம்பர இடைவேளை முடிந்து மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி"
"சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம்"
"மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது"
"உங்கள் தொலைக்காட்சியின் ஒலியைக் குறைத்து விட்டுப் பேசுங்கள்"
"எங்கிருந்து அழைக்கிறீர்கள்"
"நீங்கள் யாரைக் காதலிக்கிறீர்கள்"
"நமது தொடர் அழைப்பாளர்"//

அருமை!

உண்மைதான்... ஆங்கில அல்லது வடமொழிக் கலப்பற்றுப் பேச முடியவில்லை.! ஆனால் தொலைக்காட்சியில்... ஆங்கிலத்தில் சில தமிழ்ச் சொற்களைக் கலக்கிறார்கள்.. =)).. மிகவும் எரிச்சலூட்டும் விடயம் இது..!

priya சொன்னது…

'உங்கள் டிவி வால்யூமை கம்மி பண்ணுங்க' என்பதில் இருக்கும் நெருக்கம் 'உங்கள் தொலைக்காட்சி ஒலியைக் குறைத்து விட்டு பேசுங்கள்' என்பதில் நிச்சயம் இல்லை நண்பா!

நீங்கள் 'தென்கச்சி சுவாமிநாதன்' பேசுவதைக் கேட்டிருக்கிறீர்களா? வழக்குத் தமிழில் விளையாடுபவர் அவர். அதில் கூட தேவையான மொழியைக் கலப்பதில் கெட்டிக்காரர்!

உணர்ச்சிகளை ஒதுக்கிவிட்டு உண்மையைப் பாருங்கள், மொழி தானாக வளர்ந்துவிடும்!