தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/04/2010

நம்மை பண்படுத்துவது பழக்க வழக்கங்கள்...


ஒவ்வொரு தனி மனிதனின் வெற்றி, தோல்விக்கும்- அவனது பழக்க, வழக்கங்கள் மிக முக்கிய காரணங்களாக உள்ளன. நமது பழக்க வழக்கங்கள்- நம்மை மேன்மை அடைய செய்ய வேண்டுமே ஒழிய, அவை நம்மை படுகுழிக்கு தள்ளி விடக்கூடாது. ஆனால் அனேகரின் பழக்க வழக்கங்கள் அந்த காரியங்களையே செய்கின்றன. தெரிந்தோ,தெரியாமலோ நம் பழக்க
வழக்கங்கள் நம் செயல்களோடு பின்னி பிணைந்து உள்ளன.


சில பழக்க வழக்கங்கள் நம்மை அடையாளம் காட்டும் வல்லமை படைத்தவை. "அவனா நீ" என்பது போல... பழக்க, வழக்கங்கள் என்றால் அவை ஏதோ கெட்டதாக அறியப்படும், போதை பழக்க வழக்கங்களாக தான் இருக்க வேண்டும் என்று கண் முடித்தனமாக நம்பி கொண்டு இருக்கிறோம். பழக்க வழக்கங்கள் என்பது அவை மட்டுமல்ல. மாற்றி கொள்ள வேண்டிய அல்லது திருத்தி கொள்ள வேண்டிய கெட்ட பழக்க வழக்கங்கள் நிறைய உள்ளன. போதை பழக்கங்களை கூட மறக்கடித்து விடலாம்.


ஆனால் ரத்தத்தோடு, ஊறிவிட்ட பிறவி குணங்களாக அறியப் படுகிற பழக்க வழக்கங்களை மாற்றுவது மிக மிக கடினம். ஒருவருக்கு பிறரை ஒயாமல் குறை சொல்லும் பழக்கம் இருந்தது. குறை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி... குறை சொல்வார். அதனால் சிலருக்கு வேதனை, சிலருக்கு எரிச்சல் தான் மிஞ்சும். நமது பழக்க வழக்கங்கள் நம்மை பாதித்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் பிறரை என்று வந்தால் நம் பழக்க வழக்கங்களை அவசியம் மறு ஆய்வு செய்யவே வேண்டும்.


பிறரை கேலி பேசுவது சிலருக்கு பழக்கம். "அப்படி நா என்ன பெரிசா சொல்லிட்டேன்" என்று தங்கள் பேச்சுக்கு நியாயம் கற்பிக்கவும் செய்வார்கள். சில பழக்க வழக்கங்கள் தன்னை தானே பரிகாசிக்கும் விதமாகவும் இருக்கும். அது... சிலர் எந்நேரமும் தங்கள் கை, கால்களை கழுவி கொண்டே இருப்பார்கள். ஒரு நாளைக்கு பத்து, இருபது முறை என்று... மற்றவர்களுக்கு
வேடிக்கையாக இருக்கும். மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்-
இதை ஒரு மன வியாதி என்று.


அதீத கோபம் கூட மாற்றி கொள்ள வேண்டிய ஒரு பழக்க வழக்கம் தான். ஒரு நபர் இருந்தார். நம்மோடு பேசுவார். தான் பேச வேண்டிய விஷயங்களை எல்லாம் முழுமையாக பேசின பிற்பாடு, நாம் அவருக்கு பதில் சொல்லவோ அல்லது நம் தரப்பு விஷயங்களை சொல்ல துவங்கும் போது, வேறு பக்கம்
திரும்பி வேடிக்கை பார்ப்பார் அல்லது செல்பேசியை பார்த்து கொண்டிருப்பார்.
இது எதிரே இருப்பவனை ஏளனப்படுத்தும் ஒரு செயல் என்பதை அவர் உணரவே இல்லை. ஒரு நாள் அவரை ஒருவர் சற்று கடுமையாக பேசிஉணரச் செய்யார். இப்போது ஒரளவுக்கு தன்னை மாற்றி கொண்டு இருக்கிறார்.


இவர் போலவே இன்னும் சிலர் இருக்கிறார்கள். பிறர் எது சொன்னாலும் காது கொடுத்து கேட்காத ரகங்களாய்... அப்படி இருப்பதில் சில நன்மைகளும் உள்ளன... சில தீமைகளும் உள்ளன. யாராவது, அவர்களிடம் ஒரு முக்கியமான தகவல் சொல்லி இருப்பார். அவர்களுக்கு அவை முக்கியமில்லாத பட்சத்தில், "நா சரியா கவனிக்கல" என்று தப்பி விடுவார்கள். அது அவர்கள் அடையும் நன்மை. அதே நேரம் வேறு ஒருவர், அவர்களிடம் சொல்லாத ஒரு விஷயத்தை சொன்னதாக அடித்து சொல்வார்.
"நீங்க தான் சார் சரியா காது கொடுத்து கேட்கல. நீங்க என்னிக்கு எதையும் உருப்படியா கேட்டு இருக்கீங்க" என்பார். இது அவர்கள் அடையும் தீமை.


நல்ல விஷயங்களை பாராட்டுவதே சிலரின் பழக்கமாக இருக்கும். இவர்
தெரிந்தவரா, தெரியாதவரா... நமக்கு வேண்டியவரா, வேண்டாதவரா என்கிற பாகுபாடெல்லாம் பார்க்காமல், நல்லதை பாராட்டவேண்டும் என்பதே, அவரின் பழக்கமாக, நோக்கமாக இருக்கும். சிலர் எவரிடமும் சாந்தத்துடன், மிக கண்ணியமாக பேசுவதையே பழக்கமாக கொண்டிருப்பார்கள். வயது வித்தியாசம் பாராமல் மரியாதையாகவே பேசுவார்கள். வசீகரிக்கும் குரலுக்கு சொந்தக்காரர்களாய் இருப்பார்கள். கோபப்படவும் மாட்டார்கள்.
கோபப்படுத்தவும் மாட்டார்கள்.


இதற்கு எதிர்மறையான பழக்க வழக்கத்துடன் சிலர், சத்தமாய் பேசும் பழக்கம் கொண்டவர்களாய் இருப்பார்கள். இதை தவறென்று சொல்ல முடியாது. அதுவொரு பழக்கம். அவ்வளவே. சிலர் இருக்கிறார்கள். யாரையும் மரியாதை குறைவாய் பேசுபவர்களாக இருப்பார்கள். பொது இடங்களில், மனைவியரை டி போட்டு பேசும் பழக்கம் கொண்டவர்களாக... அவரது கேரகடரே- அப்படி பேசுவதனால் அடிபட்டு போகும். நம் பழக்க வழக்கங்கள்,
இவனை நம்புவதா, வேண்டாம்மா என்று பிறருக்கு காட்டி கொடுத்துவிடும்.


வெற்றி பெற்ற அனைவரும் நல்ல பழக்க வழக்கங்கள் கொண்டவர்களாகவே இருப்பார்கள். அதே நேரம், நல்ல பழக்கங்கள் கொண்ட எல்லோரும் நல்லவர்களாக  தான் இருக்க வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. ஒரு உதாரணம். நான் படித்த காலத்தில் கிளாஸ்க்கு வரும் முதல் மாணவன் என் நண்பன் தான்... ஆனால் படிப்பில் கடைசி. கிளாஸ்க்கே ஒழுங்காக வராத மாணவன் நன்றாக படிப்பான். வழக்கமான முரண்களில் இதுவும் ஒன்று.


நேரந்தவறாமை சிலரது பழக்க வழக்கமாக இருக்கும். நேரம் தவறுவதே சிலரின் பழக்க வழக்கமாக இருக்கும். நேரந் தவறுபவர்கள், வாழ்க்கையில் எல்லா விஷயத்தையும் தவற விடுபவர்களாகவே இருப்பர். ஒரு சமயம், ஒரு நண்பரை வைத்து சில காரியம் ஆக வேண்டியிருந்தது. அவர் வீட்டுக்கு சென்ற போது, "நீங்க முன்னாடி போய் சார் வீட்டுல வெயிட் பண்ணுங்க. பத்து நிமிஷத்துல வர்றேன்" என்றார். சம்பந்தப்பட்ட மூன்றாம் நபர் வீட்டிற்கு சென்று காத்து இருந்தேன். பத்து நிமிஷத்தில் வருவதாக சொன்ன நபர், அரைமணியாகியும் வரவில்லை, திரும்ப அவரை தேடி போனால் தூங்கி கொண்டிருந்தார். (சில நேரங்களில் நானும் இந்த தவறை செய்தேன்.ஆனால் மாற்றி வருகிறேன் )


இது மாதிரி நிறைய பேர்,,, நம்மை ஒரு வேலைக்கு வரச் சொல்லிவிட்டு, அவர்கள் தங்கள் வீட்டில் தூங்கி கொண்டிருப்பார்கள். இது மாற்றி கொள்ள வேண்டிய பழக்க வழக்கம். இந்த பழக்கம் அவர்களுக்கே ஒரு நாளைக்கு எதிர் வினையை தரும். பொய் பேசுவதே சிலரின் பழக்கமாக இருக்கும். அதனால் அவர்களால் பெரிதாய் எதையுமே சாதிக்க இயலாது. அவர்கள் உண்மை பேசினாலும், அதையும் பொய்யாக தான் உலகம் பார்க்கும்.


மாற்றிக் கொள்ள வேண்டிய பழக்க வழக்கங்கள் நம்மிடம் இருந்தால் மாற்றிக் கொண்டே ஆக வேண்டும். நல்ல பழக்க வழக்கங்களுக்கு நாம்
நிறைய முக்கியதுவம் தருகிறோம். அது சரியே. "உன் பழக்க வழக்கமே சரியில்ல" என்று  அப்பா, பிள்ளையிடம்  கேட்க ஆரம்பித்து, பிறகு ஆசிரியர்கள், பிறகு நண்பர்கள் என்று தொடர்ந்து மனைவி, பிள்ளைகள் வரை சொல்ல ஆரம்பிப்பார்கள்.


நல்ல பழக்க வழக்கங்கள் ஏதோ நமக்கு மட்டும் உரித்தானதல்ல. அது நம்மை கடந்து நம் சந்ததியினரையும் சிறப்பாக வழி நடத்த கூடிய ஒரு பாதை. நல்ல பழக்க வழக்கங்கள் நம்மை ஏற்றம் பெறச் செய்யட்டும்.

கருத்துகள் இல்லை: