தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/18/2010

அன்பின் அடையாளங்கள் எது ?

           நம் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்களுக்கு அது அப்பா அம்மாவாகக்கூட இருக்கலாம்.சங்கடமான கட்டங்கள் வரும்போது நம்மையும் சேர்த்து ஏதேனும் சொல்லிவிடுகிறார்கள்.ஏன் நாம்கூடத்தான் சொல்லிவிடுகிறோம்.நாம் உடனே வேதனைப்படுகிறோம்.அட..சே! எப்படி இருந்தவர் இப்படி மாறிவிட்டார் என்று இந்த ஒரே ஒரு சம்பவத்தை வைத்து முடிவிற்கு வருகிறோம்.
          அவர்களும் காலம் முழுதும் அவர்களுக்குக் கீழ்ப்படிவாய் இருந்ததையோ இப்போது தோளுக்கு மேல் வளர்ந்திருப்பதையோ உலக அறிவுகளோடு மனம் பக்குவப்பட்டிருப்பதையோ யோசிப்பதில்லை.
            மாறாக... மனப்பாதிப்புகளைப் பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை.
நினைப்பதேயில்லை.மனங்கள் கொஞ்சம் தணிந்து ஆறிய பிறகாவது ஏன்...என்ன ஆயிற்று உங்களுக்கு? இப்படியெல்லாம் கோபப்படவே மாட்டீர்கள்! இப்படிப்பட்ட வார்த்தைகளையெல்லாம் சொல்லவே மாட்டீர்களே?’என்று கேட்கும் மனநிலை இருப்பதில்லை எமக்கு.எம் கவலையெல்லாம் நாம் அடைந்த பாதிப்பைப் பற்றி மட்டும்தான்.
           இதேநேரம் சின்ன வார்த்தையாய் இருந்தாலும் எங்களால் எங்களைப் பெற்று வளர்த்தவர்கள் மனம் பாதிக்கப்பட்டு இருப்பதைப் பற்றியும் கவலையேயில்லை.
           இப்படி நிலைமை மோசமாயிருக்க மனம் விட்டுக் கதைக்கவோ முன்பைப்போல நெருங்கிப் பழகவோ மனம் இணங்காமல் தள்ளி இருத்தலே நல்லதென மனம் ஒதுங்குவது சரியாகுமா.இத்தனை கால அன்பிற்கும் இது எப்படி ஒரு முடிவாகும்!
           இந்த இடத்தில்தான் கவனமாக இருத்தல் நல்லது.உறவுகள் பிளவாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.என் அனுபவமும் கூட.எதையும் பெரிதுபடுத்தாமல் அவர்கல் வயதில் பெரியவர்கள்.பேசவோ திட்டவோ உரிமை இருப்பதாய் நினைத்துக்கொண்டு அவர்களை சுகநலம் விசாரித்துப்பாருங்கள்.அழுதேவிடுவார்கள்.
           இதில் நன்மைகளும் உண்டு.அவர்களே அவர்கள் தங்கள் பிழையை உணர்ந்து தவிப்பார்கள்.தாங்கள் மனம் நோகப் பேசியும் திரும்பவும் தங்களைத் தேடி வருவதும் தங்கள் மேல் அக்கறைப் படுவதும் இன்னும் இன்னும் அன்பைக் கூட்டும்.மனதை இளக வைக்கும்.
          இதைவிட நாங்களும் உன் மனம் நோகப் பேசிவிட்டோம் இனி இப்படி ஏதும் வராது என தங்கள் மனம் விட்டுக் கதைத்து இருவரும் பரஸ்பரம் மன்னிப்புக் கேட்டு அன்பை இன்னும் இருமடங்காக்கி நிலைமையை இலேசாக்கிவிடும்.
          இப்படியான நல்ல அணுகுமுறைகள் இருக்க நத்தையாய் உள்ளிழுத்துக் கொள்வதும் தொட்டால் சிணுங்கியாய்ச் சுருங்கிக் கொள்வதும் உண்மையான அன்பின் அடையாளங்கள் அல்ல!உங்களுக்கும் இப்படியான அனுபவங்கள் வாழ்வில் நிச்சயம் இருக்கும்.பகிர்ந்துகொள்ளுங்கள்.நிச்சயம் எல்லோருக்குமே பயன்படும் !
 

கருத்துகள் இல்லை: