நிலா நிலா ஓடி வா என்றால்
நில்லாமல் வந்து விடும் என்று நினைத்த பருவம்.
எழுதும் குச்சியை பொம்மை ஆக்குவதோ
எதுவும் இல்லாமல் ஊசி ஆக்குவதோ
என்ற கவலை மட்டும் இருந்த பருவம்.
கண்ணீரால் கத்தி சாதிக்க முடியாததையும்
கன்ன குழி சிரிப்பினால் சாதித்த பருவம்.
அ ஆ இ ஈயும் அம்மா இங்கே வாவும்
அறிந்தாலே அறிவாளி என்று இருந்த பருவம்.
அழ வைக்காமல் இருந்தாலே -
நட்பு என்று புரிந்தும் புரியா பருவம்.
ஆதாயம் தேடி வந்ததில்லை;
அழகு பார்த்து சேர்ந்தது இல்லை;
செல்வத்தின் அளவு தெரிந்ததில்லை;
சொல்வது கூட எல்லாம் புரிந்ததில்லை.
பால் வடியும் முகத்துடன் என் அருகில் இருந்த
பால்ய தோழி, இன்று இருக்கும் -
இடமோ உருவமோ பருவமோ முகமோ நானறியேன் -
வெள்ளை மனதில் வெளிப்பட்ட அந்த நட்பின் வெளிச்சத்தில்,
நாட்கள் கடந்தும் நாடுகள் தாண்டியும்
நல்ல நண்பர்களை கண்டு கொண்டு நலமுடன் - நான்.
நீ எங்கிருந்தாலும் இறை அருள் இருக்க
நீண்ட வேண்டுதலுடன், நினைத்து வாழ்த்துகிறேன்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக