தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/09/2010

இலக்கு-இலக்கியம்

            இலக்கியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாதவர்கள்
இத் தமிழ்கூறும் நல்லுலகில் இல்லையென்றே சொல்லாம். ஆனால் இலக்கியம் என்ற வார்த்தை தொல்காப்பியர் பயன்படுத்தவில்லை. வள்ளுவன் அறிந்திருக்க வில்லை. இளங்கோவும் கம்பனும் பயன்படுத்தியிருக்கவில்லை.
             மணிவாசகர் தன் திருவாசகத்தில் முதல்முறையாக இலக்கியம் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்..

இலக்கு-இலக்கியம், இலக்கு-இலக்கணம், இலக்கு-குறி: குறிக்கோள். சிறந்த வாழ்க்கைக் குறிக்கோளான அறத்தை எடுத்துக் காட்டுவது இலக்கியம். சிறந்த மொழிக்கூறிகளான அமைப்பை எடுத்துக் கூறுவது " இலக்கணம்"


 செய்யுள் என்ற பெயராலே தொல்காப்பியனார் இலக்கியத்தைக் குறிப்பிடுகின்றார். நூல் என்ற பெயராலே இலக்கியம் குறிப்பிடப்பட்டிருந்தது வள்ளுவன் காலத்தில்.


ஆங்கிலத்தில் இலக்கியம் என்னும் பொருள் பயக்கும் literature எனும் சொல் கி.பி.1812ல் தான் பயன்பாட்டிற்கு வந்ததாக ஆக்ஸ்போர்டு அகராதி தெரிவிக்கிறது.

கவின்மிகு சொற்களைக் கொண்டு கற்பனை நயத்தோடு கலையழகும் புலப்படுமாறு படைக்கப் படுபவை எல்லாம் "இலக்கியம்" எனப் போற்றத்தக்கன என்றும் இலக்கியத்தை விளக்கலாம். என்பது தமிழறிஞர்கள் கூற்று.


வில்லியம் வோர்ட்ஸ்வர்த் கற்பனையை இருகூறாக்கி இரண்டு பெயர்களை தந்துள்ளார்.


ஆக்கக் கற்பனை
பொருளைக் கண்டதும் அதன் புறத்தோற்றம் முதலியவற்றில் ஈடுபடாமல் அதன் அகத்தை ஊடுருவி நோக்கியும் உட்கருத்தை அறிந்தும் அவற்றின் பயனாகத் தோன்றுவது அந்தக் கற்பனை.
நினைவுக் கற்பனை:
இதில் ஆக்க வேலை ஒன்றும் இல்லை. அதற்கு மாறாக நமது நினைவைத் தட்டி எழுப்புகிறது. நாம் என்றும் கான்கிற பொருளையே நினைவு படுத்துகிறது. ஆனால் படித்தவுடன் அப்பொருள்களின் நினைவு அதுவரை நாம் அனுபவியாத ஒரு புதிய ஆற்றலோடு மனதில் தோன்றுகிறது.


இதுதான் இலக்கியம் என்பதை விட என்னால் ரசிக்கும் படியாக எழுதப்படுவதெல்லாம் என்னைப் பொருத்தவரையில் இலக்கியம் என்ற அளவிலேயே என் புரிதல்......
எனைக் கவர்ந்த சில இலக்கிய வரிகளை பகிர்ந்துள்ள ஆசைப்படுகின்றேன்.

நீரிடை உறங்கும் சங்கம், நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் தண்டு தாமரை உறங்கும் செய்யாள்
                                                                        -கம்ப இராமாயணம்.
பஞ்சி ஒளிர் விஞ்சுகுளிர்
பல்லவம் அணுங்கச்
செஞ்செவிய கஞ்சம்நிமிர்
சீறடியாள் ஆகி
அஞ்சொலிள மஞ்ஞையென
அன்ன மென மின்னும்
வஞ்சியென நஞ்செமென
வஞ்ச மகள் வந்தாள்
                                                            சூர்ப்பணகை குறித்து கம்பன்........
"கொய்த மலரை கொடுங்கையிலணைத்து
மொய்குழலில் சூட்டுவான் முன் வந்து தையலாள்
பாதாரவிந்தத்தே சூட்டினான்: பாவை இடைக்கு
ஆதாரமிண்மையறிந்து"
                                                                  -புகழேந்தி புலவர்.
தண்டு லாவிய தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரை முததருகேந்தினாள்
கெண்டை கெண்டையெனக் கரையேறினாள்
கெண்டை காண்கிலள் நின்று தயங்கினாள்.


தன்னிளவு அவள் முகமோ
தாரகைகள் நகையோ
விண்ணீளம் கார்குலழோ
மேவும் எழிலெல்லாம் மெல்லியின் வாய்க் கள்வெறியோ
                                                                         -பாரதிதாசன.
பெருந்திணை பற்றி பாரதிதாசன்
இளமை ததும்ப
எழிலும் ததும்ப
காதல் ததும்ப
கண்ணீர் ததும்பி...........
என் மகள் கிழவனுடன் போனாள்.....

தொல்காப்பியர் சொல்வதுபோன்றும் இன்னும் பலர் சொல்வது போன்றும் அமைவது தான் இலக்கியம் என்றால் இன்றைய உலகில் பல நவீன இலக்கிய வியாதிகள் ஒழிந்து போயிருக்கும் என்பதே உண்மை....


முதல் போடுபவன் முதலாளி அல்ல முதலை ஆள்பவன் முதலாளி
எழுதுபவன் எழுத்தன் எழுத்தை ஆள்பவன் எழுத்தாளன்.
என்று எங்கோ படித்தது .

நன்றி : பி.ஏ பாட நூல்

கருத்துகள் இல்லை: