தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/13/2010

நல்லவருக்கு எல்லா நாளும் நல்ல நாளே.........

          நேற்று முன்தினம்  ஒரு நல்ல காரியம் சம்பந்தமாக எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் அந்த நல்ல காரியத்தை நாளை செய்வதாக கூறினார். நான் வேண்டாம், இன்றே செய்து விடுங்கள் இன்று புதன் கிழமை நல்ல நாள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்றேன். அவரும் சரி என்று அந்த விசயத்தை செய்ய கிளம்பினார்.
        அவர் சென்றவுடன் என் அருகில் இருந்த நபர், என் ந்ண்பர் கேட்டார் உனக்கு நாள், கிழமை இதிலெல்லாம் நம்பிக்கை உண்டா என்று,
நல்லவருக்கு எல்லா நாளும் நல்ல நாளே... நன்றே செய்.. நன்றும் இன்றே செய் என்பதற்காக அவரிடம் அப்படிக் கூறினேன் என்றேன்.
            ஒரு வேளை அவர் நாளை வந்து இதைப் பத்தி கேட்டிருந்தால் வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் என்றும், வெள்ளி அன்று வந்து இருந்தால் வெள்ளி எல்லாருக்கும் புனிதமான நாள் என்றும், சனி அன்று வந்து இருந்தால் வெங்கடாசலபதி க்கு உகந்த நாள் நல்ல காரியத்தை உடனே தொடங்குங்கள் என்று சொல்லி இருப்பேன் என்றேன்.
          என் நண்பரும் என்னை மடக்கும் விதமாக ஞாயிறு என்றால் ... நான் சொன்னேன் ஞாயிறு அன்று விடுமுறை நாள் எந்த ஒரு காரியத்தையும் ஆழ்ந்து வேறு எந்த அலுவல்களின் தொந்தரவு இல்லாமல் செய்ய முடியும். நானே தொடர்ந்து திங்கள் கிழமை வாரத்தின் முதற் நாள், நல்ல காரியத்துடன் தொடங்கலாம் என்றிருப்பேன் என்றேன்.
         செவ்வாய் பொதுவாக யாருக்கும் ஆகாது என்பார்கள், அன்று நல்ல காரியத்தைப் பற்றி விவாதிக்க வந்து இருந்தால் என்ன செய்வாய் என்று புத்திசாலித் தனமாக் மடக்கினார்.
          ஒரு அறிவியல் பூர்வமான உண்மை செவ்வாய் கிழமை தான் வார நாட்களிலேயே " The Most Productive Day". ஆகையால் உடனே நல்ல காரியத்தை முடித்து விடுங்கள் என்று இருப்பேன் என்றேன்.
          செய்யும் காரியம் மட்டுமே முக்கியம் நாள், கிழமை அல்ல என்று முடித்தேன், அவரும் என் வாத திறமையை மெச்சி அவர் வேலைப் பார்க்க கிளம்பினார். அவர் சென்றவுடன் நான் அன்றைய நாளிதழை எடுத்து எனக்கான ராசிப் பலனைப் பார்த்து கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.



கருத்துகள் இல்லை: