தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/23/2010

இளையயோரைப் பகையாதே

ஒரு நாள் செல்வந்தர் ஒருவர் காட்டு வழியே பயணித்துக் கொண்டிருந்தார். மூன்று திருடர்கள் அவரை அடித்து அவரிடம் இருந்த செல்வங்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டனர்.


முதல் திருடன் அவரைப் பார்த்து "இப்போது இவனிடம் எதுவுமே மிஞ்சவில்லை. இவனைக் கொன்று விட்டால்தான் சரியாக இருக்கும். இல்லையென்றால் இவன் காவல்காரர்களிடம் சொல்லி விடுவான்" என்கிறான். இப்படி சொல்லிக் கொண்டே தன்னிடம் இருந்த குறுவாளை எடுக்கிறான் முதல் திருடன்.


இரண்டாவது திருடன் "பொறுமையாக இரு.. நமக்கு வேண்டியது செல்வங்கள்தானே. அவைதான் கிடைத்து விட்டனவே. இவனைக் கொல்வதால் என்ன லாபம்? இவனை மரத்தில் கட்டிப்போட்டு விட்டு நாம் ஓடிவிடலாம்" என்று கூறுகிறான். மூன்றுபேருமாக செல்வந்தனை மரத்தில் கட்டிப் போட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள்.


சிறிது தொலைவு சென்றதும் மூன்றாம் திருடனுக்கு மனதில் ஒரு கவலை ஏற்படுகிறது. "பாவம் அந்த செல்வந்தன். உதவிக்கு யாரும் கிடைக்கவில்லையென்றால் பசி-தாகத்தில் இறந்து விடுவான். காட்டு விலங்குகள் அவனை சாப்பிட்டுவிடும்." என்று பரிதாபத்தோடு அவன் மட்டும் திரும்பி வந்து செல்வந்தனை கட்டிலிருந்து விடுவித்தான். மூன்றாம் திருடன் செல்வந்தனை பொதுப்பாதை வரை அழைத்து வந்து விட்டுவிட்டு "இந்தப் பாதையில் நேராகச் சென்றால் உன் கிராமம் வந்து விடும்" என்று கூறிவிட்டுச் செல்கிறான்.


வழியில் மகாராஜாவின் படையொன்று இவரைத் திருடன் என்று கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். மகாராஜாவின் அந்தரங்கப் பணியாளர் ஒருவருக்கு இச்செல்வந்தரைப் பற்றி ஏற்கனவே தெரியும் என்பதால் விடுதலை செய்யும்படி மகாராஜாவுக்கு பரிந்துரை செய்கிறார். மகாராஜாவும் உண்மையறிந்து விடுதலை செய்கிறார். இதனால் மகாராஜாவிற்கு மாதம் தவறாமல் தான் ஈட்டும் செல்வங்களில் ஒரு பகுதியை அனுப்பித் தருகிறார் செல்வந்தர். மகாராஜாவும் செல்வந்தரும் நல்ல நண்பர்கள் ஆகினர். செல்வந்தர் எப்போது வேண்டுமானாலும் அரண்மனைக்குள் சுதந்திரமாக வந்து போகும் படியாக அமைந்தது இந்த நட்பு.


ஒரு முறை தன் இல்லத்து விழாவுக்கு மகாராஜாவை அழைக்கிறார் செல்வந்தர். மகாராஜாவும் தன் அந்தரங்கப் பணியாளருடன் வருகிறார். அந்தரங்கப் பணியாளரை விருந்தின்போது அலட்சியத்துடன் நடத்தி வெளியே நிற்கும்படி செய்கிறார் செல்வந்தர்.


இதனால் மனம் வருந்தும் அந்தரங்கப் பணியாளர் இச்செல்வந்தருக்கு எப்படியாவது புத்தி புகட்ட வேண்டும் என்று நினைக்கிறார். ஒரு முறை மகாராஜாவின் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது மகாராஜாவின் காதில் படும்படி "இந்த செல்வந்தனை அடக்குவார் இல்லாமல் போய்விட்டதே.. இப்படி அந்தப்புரம் வரை செல்கிறானே!" என்று புலம்பினார். அவ்வளவுதான். அந்த செல்வந்தர் வருவதை தடை செய்யும் படியும் தன்னை சந்திக்கவே முடியாதபடியுமாக உத்தரவிட்டார் மகாராஜா. செல்வந்தருக்கோ ஒரே குழப்பம் - என்னவாயிற்றோ என்று. மிகவும் மனம வருந்தினார். அந்தரங்கப் பணியாளரின் நினைவு வந்து அவரை வீட்டிலேயே சந்திக்க சென்றார் செல்வந்தர். "இளையயோரைப் பகையாதே" என்கிறார் அந்தரங்கப் பணியாளர். அடாடா இதுதான் நடந்ததா.. என்று மனம் வருந்துகிறார் செல்வந்தர். இதைச் சரி செய்யும்படி வேண்டிக் கொள்கிறார்.


மறுநாள் மகாராஜாவின் அறையை சுத்தம் செய்யும் போது 'இதென்ன! மகாராஜா சாப்பிடும் போதெல்லாம் தும்மல் வந்து உணவை இறைக்கிறாரே" என்று புலம்புகிறார். என்ன உளறுகிறாய் என்று மகாராஜா கோபிக்கவும் பணியாளர் "வயதானதால் இரவு உறக்கம் வரவில்லை.... இப்படித்தான் அரைதூக்கத்தில எதையேனும் உளறிவிடுகிறேன் மகாராஜா.. என்னை மன்னியுங்கள்." என்கிறார். மகாராஜாவும் இவரை முழுமையாக நம்புகிறார். செல்வந்தர் பற்றிய செய்தியும் புரளிதான் என்றறிந்து செல்வந்தரை மன்னித்து நண்பனாக ஏற்கிறார்.

எப்படியோ கதைன்னு ஒன்று சொன்னால் கருத்து சொன்னால்தானே கதை முடிந்ததாக அர்த்தமாகும்.... கருத்தை இந்தக் காலத்துக்கு ஏற்றமாதிரி மாற்றிக் கொள்ளுங்கள்.... பெரிய ஆளுமைகள், அல்லது தன்னை ஆளுமையாக நினைப்பு கொண்டிருப்பவர்களின் நட்பும், அவர்களின் கார் ஓட்டிகள், சமையல்காரர்கள், பெர்சனல் அஸிஸ்டன்டு-கள், ஆஃபிஸ் பாய்கள் போன்றவர்களின் பகையும் ஆபத்துக்கு வழிவகுக்கும். ஒரு புன்னகையை மட்டுமே இவர்களுக்கு எப்போதும் தரத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை: